முருகப்பெருமானின் க்ரிய சக்தியாக தேவயானையும், இச்சா சக்தியாக வள்ளியாரும் அமைந்திருக்கின்றனர். மூன்றாவது சக்தியான ஞான சக்தி முருகப்பெருமானின் அன்னையார் அருளிய வேலாகும்.
தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் தன் கையில் வேல் ஏந்தி இருப்பார். அவர் ஏந்தி இருக்கும் வேல், மேற்பகுதியில் மிகக் கூர்மையாகவும், இடையில் அகலமாகவும், முடிவில் ஆழமாகவும் இருக்கும்.
கூர்மை – அறிவானது கூர்மையாக இருத்தல் வேண்டும். எதிலும் தெளிவாக இருக்க வேண்டும். மொக்கையான எண்ணம் வீணானது. அகலம் – மிகவும் அகன்ற எண்ணம் இருக்க வேண்டும். அனைத்தையும் விரிவான பார்வையில் நோக்க வேண்டும். குறுகிய எண்ணம் கூடாது.
ஆழம் – எதிலும் ஆழ்ந்த எண்ணமும் அறிவும் தேவை. எதைக் கற்றாலும் ஆழமாகக் கற்க வேண்டும். மேலோட்டமான எண்ணமும் அறிவும் பயன்படாது.