மருதாணியை வைத்துக்கொண்டால் லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகும் என்று சாஸ்திரம் சொல்கிறது. மருதாணி பூ மஹாலக்ஷ்மிக்கு மிகவும் பிரியமான மலர்களுள் ஒன்று. மருதாணிக்கும் ஸ்ரீமகாலஷ்மிக்கும் என்ன சம்மந்தம் என்பதை பற்றியும் தெரிந்துக்கொள்வோம்.
சீதை, இராவணனால் கடத்தபட்டு அசோகவனத்தில் அடைக்கப்பட்டாள். அந்த அசோகவனத்தில் மருதாணி செடிகளும் இருந்தது. சீதை, தன் மனகவலையை யாரிடம் சொல்வது? என்றும், யாரிடமாவது சொல்லி அழுதால் மனம் ஆறுதலாக இருக்கும் என எண்ணினாள். ஆனால் அந்த அசோகவனத்தில் இருந்த அனைவரும் அரக்கிகள். மற்றவர்களின் துன்பங்களை உணர தெரியாமல் கல் மனம் கொண்டவர்களாக இருந்தார்கள். அதனால் அவர்களிடம் பேசினால், மேலும் துன்பங்கள் நேரும் என அஞ்சினாள் சீதை. அச்சமயத்தில் அசோகவனத்தில் இருக்கும் செடிகொடிகளிடம் தன் துயரத்தை சொல்வாள். அப்போது, அங்கு இருந்த மருதாணி செடி ஒன்று, சீதை சொல்லும் துன்பங்களை கேட்பது போல் அசையும். இதை பார்த்த சீதாதேவி, தன் கஷ்டத்தை கேட்க இந்த அசோகவனத்தில் இந்த மருதாணி செடியாவது இருக்கிறதே என்று ஆறுதல் அடைவாள். தினமும் அந்த மருதாணி செடியிடம், தன் தோழியிடம் பேசுவது போல பேசி வந்தாள் சீதை. சீதையின் பேச்சுக்கேற்றார் போல அந்த செடியும் தலை அசைக்கும். பிறகு ஒருநாள் ஸ்ரீஇராமர், இராவணனை போர் செய்து கொன்றுவிட்டு சீதாதேவியை பத்திரமாக மீட்டார். அப்போது அன்னை சீதாதேவி ஸ்ரீஇராமரிடம், “இங்கு நான் இருந்த ஒவ்வொரு நாளிலும் என் கஷ்டங்களை காது கொடுத்து கேட்ட இந்த மருதாணி செடிக்கு ஏதாவது நாம் நன்மை செய்ய வேண்டும்.” என்று கூறி மருதாணி செடியிடம், “உனக்கு என்ன வரம் வேண்டும்.” என கேட்டாள்.
“எங்களுக்கு எதுவும் வேண்டாம். இன்று உன் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. உன்னை போல அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தாலே எங்களுக்கும் மகிழ்ச்சிதான். அது போதும்.” என்றது மருதாணி செடி. அதற்கு சீதை, “உன்னதமான உன் குணத்திற்கு நான் ஒரு வரம் தருகிறேன். உன்னை யார் பூஜிக்கிறார்களோ அல்லது யார் உன்னை கைகளில்வைத்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு சகல நன்மையும் ,லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும். அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.” என்ற வரத்தை தந்தார் சீதாபிராட்டி.
அதனால்தான் இன்றுவரை மருதாணி மற்றும் அதன் பூ லக்ஷ்மி தேவியின் அம்சமாக கருதப்படுகிறது. மருதாணி பூக்களை கொண்டு மாதவனின் பிரியவளான மஹாலக்ஷ்மியை துதித்தால் துன்பங்கள் நெருங்காது, ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
*ஸ்ரீ தாயார்* *திருவடிகளே சரணம்.* ✍🏼🌹