Home ஆன்மீக செய்திகள் பாவங்களை போக்கும் ரத சப்தமி விரதம்

பாவங்களை போக்கும் ரத சப்தமி விரதம்

by Sarva Mangalam

சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது ரத சப்தமி விரதம். சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆகலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.

உலக உயிர்களின் வாழ்வாதாரத்திற்கு சூரிய சக்தியே ஆதாரம். சூரிய சக்தியின்றி உயிர்கள் வாழ்வது இயலாத காரியம் என்பதை அறிந்ததால்தான், அதனை வழிபடும் முறையை முன்னோர்கள் உருவாக்கி வைத்திருந்தனர். சூரியனை கடவுளாக வழிபடும் மதத்திற்கு ‘சவுமாரம்’ என்று பெயர். சிவபெருமானின் வலது கண்ணாக சூரியன் இருப்பதாக சிவ ஆகமங்கள் தெரிவிக்கின்றன.

காசிப முனிவருக்கும், அவரது மனைவி அதிதி தாயாருக்கும், விசுவான் முதலான 12 சூரியர்கள் பிறந்தனர். அதிதி என்பவரின் புதல்வர்கள் என்பதால் அவர்கள் ‘ஆதித்தர்’ என்றும் அழைக்கப்பட்டனர். சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்வார். அவர் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லுவதே மாதப்பிறப்பு ஆகும். சூரியன் சஞ்சரிக்கும் ராசியின் பெயரைக்கொண்டே, அந்தந்த மாதங்களுக்கு பெயர்கள் வழங்கப்படுகின்றன. சித்திரை மாதப்பிறப்பை சித்திரை விசு என்றும், ஐப்பசி மாதப்பிறப்பை ஐப்பசிவிசு என்றும் கூறுவர். சூரியன் ஒருவராக இருந்தாலும் 12 ராசிகளில் சஞ்சரிப்பதால் பன்னிரு சூரியர்களாக கொள்ளப்படுகிறார்.

சூரியன் பயணிக்கும் தேரை 7 குதிரைகள் இழுத்துச் செல்லும். இந்தத் தேருக்கு ஒரு சக்கரம் மட்டுமே உண்டு. பொன்மயமாக காட்சியளிக்கும் இந்த ரதத்திற்கு அருணன் என்பவர் சாரதியாக உள்ளார். கருட பகவானின் அண்ணனான இவர், கால் ஊனமுற்றவர். தேர் சக்கரத்தின் மேல்பாகமும், கீழ் பாகமும், உத்திராயணம் மற்றும் தட்சிணாயண காலத்தை குறிக்கின்றன. சூரியன் இந்தத் தேரில் சுற்றி வந்தே உதயம், மத்தியானம், அஸ்தமனம், அர்த்தராத்திரி ஆகிய நேரங்களை உண்டாக்குகிறார்.

சிவபெருமானை நோக்கி சூரியன் கடுந்தவம் செய்து ‘கிரகபதம்’ எனும் பேறுபெற்றார். மேலும் ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலாவரும் உயர்வையும் பெற்றார்.

சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது ரத சப்தமி விரதம். சூரிய ஜெயந்தி என்பது இந்த விழாவின் மற்றுமொரு பெயர். சப்தம் என்றால் ஏழு. இதனால் தான் அமாவாசை, பவுர்ணமி கழிந்த 7-ம் நாளை ‘சப்தமி திதி’ என்று அழைக்கிறோம். உத்திராயண புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான, தை மாத வளர்பிறையை தொடர்ந்து வரும் சப்தமி திதியே ‘ரத சப்தமி’ ஆகும். ரத சப்தமியன்று சூரியனுக்கு விசேஷமான ஒளி உண்டாயிற்று என புராணங்கள் கூறுகின்றன. அந்த தினத்தில், சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன.

இந்த சிறப்பு மிக்க தினத்தில், சூரிய உதயத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராட வேண்டும். இல்லாவிட்டால் வீட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் நின்று நீராடலாம். நீராடும் போது, ஏழு எருக்கம் இலை, மஞ்சள் பொடி கலந்த அட்சதையை தலைக்கு மேலே வைத்துக் கொண்டு நீராட வேண்டும்.

ஏழு எருக்கம் இலைகளை கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள் பட்டைகளில் இரண்டு, தலையில் ஒன்றை வைத்து நீர் ஊற்ற வேண்டும். தலையில் வைக்கும் இலையில் பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும். தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள், ஏழு எருக்கம் இலைகளுடன் பச்சரிசி, கருப்பு எள் ஆகியவற்றை தலையில் வைத்து நீராட வேண்டும்.

கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது. ரத சப்தமி விரதத்தை சூரிய உதயத்தில் செய்ய வேண்டும். ரத சப்தமியன்று சுத்தமான இடத்தில் செம்மண்ணால் பூசி, அந்த இடத்தில் சூரிய ரதம் வரைய வேண்டும். அதில் சூரிய, சந்திரரை வரைந்து பவனி வருவதாக நினைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உள்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரிய துதிகளை சொல்லி வழிபட வேண்டும்.

சர்க்கரைப்பொங்கல், உளுந்து வடை நிவேதனம் செய்து பூஜை செய்ய வேண்டும். கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்ற வற்றை பசுமாட்டிற்கு கொடுப்பது நல்ல பலனை தரும். வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் ரதம் வரைந்து அரிசி, பருப்பு, வெல்லம் படைக்கலாம். சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆகலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.

ரதசப்தமியன்று தொடங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் செய்யப்படும் தர்மம், தானத்திற்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். சூரியன், நாம் வழங்கும் தானத்தை நம் முன்னோர்களிடம் வழங்குகிறார். எவ்வளவு கொடிய பாவங்களும் அதனால் அகன்று விடும்.

You may also like

Translate »