Home தாந்த்ரீக பரிகாரங்கள் திருஷ்டி பரிகாரங்கள்

திருஷ்டி பரிகாரங்கள்

by admin

“கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” என்பார்கள்,

அந்த கண்ணடிதான் திருஷ்டி அல்லது கண்ணேறு என்பது.

பிறரோட பார்வையின் தாக்கம் பட்டு, பாதிப்பு ஏற்படுவது தான் திருஷ்டி.

பிறரோட பார்வை மட்டும் அல்ல,

நம்ம பார்வையே கூடபாதிப்பு ஏற்படுத்தும் என்பார்கள்,

பொதுவா “திருஷ்டி” என்பது பார்வை.

தீய பார்வை அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

சின்ன சின்ன பரிகாரங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

குழந்தை என்றாலே அழகுதான்.அதில் வருவது தான் திருஷ்டி.

திருஷ்டி போட்டு வைப்பதுதான் ஆரம்பம்.

பொதுவாக கண் மை, கொட்டாங்குச்சி மை, கருப்பு சாந்தால்

கன்னத்திலும், பாதத்திலும் திருஷ்டி போட்டு வைப்பார்கள்.

கூடுதல் பலன் பெற, கோவில்களில் நடக்கும் ஹோமத்தின்

பஸ்மத்தை [சாம்பல்] நீரில் குழைத்து வைக்கவும்.

குழந்தை பிறந்த நாளில் இருந்து ,பெயர் சூட்டும் நாள் வரை

குழந்தைக்கு திருஷ்டி சுற்றுவார்கள்.

கருப்பு வளையலை போட்டு, அடுத்த நாள் அதை கழட்டி

வேறு கருப்பு வளையலை போட்டு விட்டு,

கழட்டிய கருப்பு வளையலை குழந்தையின்

தலைக்கு மேல் இடமிருந்து வலமாக

மூன்று முறை சுற்றி மற்ற திருஷ்டி பொருளோடு

வீட்டு வாசலில் கொட்டி விடணும்.

தினமும் மாலை சுமார் 6மணிக்கு செய்ய வேண்டும்.

குழந்தையை வளைய வரக்கூடிய திருஷ்டி

வளையலை கழட்டுவது போல் கழண்டு ஓடி விடும் என்பது ஐதீகம்.

குழந்தை சரியாக பால் குடிக்க வில்லை என்றால்:-

அம்மாவை கிழக்கு பார்த்து உக்கார வைத்து,

குழந்தையை மடியில் உக்கார வைக்கவும்.

ஒரு கைபிடி உப்பை எடுத்துக்கொண்டு

கையை இறுக்க மூடிக் கொண்டு

குழந்தை தலைக்கு மேல்

இடமிருந்து வலமாக மூன்று முறையும்,

வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றவும்.

சுற்றியவுடன், உட்கார்ந்த இடத்தில் இருந்து

அம்மாவை நகர்ந்து போக சொல்லவும்.

உப்பை, கிணறு இருந்தால் அதில் போடவும்.

இல்லாத போது ஒரு பாத்திரத்தில் நீர்

எடுத்து அதில் கரைத்து, வெளியில் ஊற்றவும்.

கையை கழுவ வேண்டும்.

குழந்தை சரியாக சாப்பிடா விட்டால் :-

1. சாதத்தில் அஞ்சு சிறு உருண்டைகள் ஆக்கவும்.

ஒரு உருண்டையை வெள்ளையாகவும்,

மீதி 4 உருண்டைகளை வண்ண உருண்டைகளாக்கவும்.

[மஞ்சத்தூள், குங்குமம், கரித்தூள், ஆரஞ்சுதூள்]

மதியம் 12மணிக்கு கிழக்குப் பார்த்து

நடுவாசலில் குழந்தையை நிற்க வைத்து

ஒவ்வொரு வண்ண சாத உருண்டைகளை

எடுத்து தலையை சுற்றி

இடமிருந்து வலமாக மூன்று முறையும்,

வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றி

ஒவ்வொரு உருண்டைகளையும் நான்காக பிரித்து,

நான்கு திசைகளிலும் வீசவும்.

அங்கேயே குழந்தையின் பாதங்களை நன்கு கழுவி விட்டு

வீட்டுக்கு செல்ல சொல்லவும்.

நீங்களும் பாதங்களை நன்கு கழுவி விட்டு

வீட்டுக்கு செல்லவும்.

2. குழந்தை சாப்பிட தட்டில் வைத்துள்ள சாதத்தில்

ஒரு சிறு உருண்டையை எடுத்து

தட்டின் இடது ஓரத்தில் வைக்கவும்.

குழந்தை சாப்பிட்டு முடித்ததும் அந்த உருண்டையை எடுத்து

குழந்தை தலைக்கு மேல்

இடமிருந்து வலமாக மூன்று முறையும்,

வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றவும்.

அதை தட்டின் இடது ஓரத்தில் வைக்கவும்.

குழந்தையை தட்டில் கை அலம்ப சொல்லவும்.

அந்த நீரில் சுற்றி வைத்த சாதத்தை கரைத்து

வீட்டு வாசலில் யார் காலிலும் மிதிபடாமல்

ஓரமாக கொட்டவும்.

வீட்டின் வாசலிலேயே தட்டையும்,

கையையும் கழுவி விட்டு உள்ளே வரவும்.

அதன் பின் தொடர்ந்து ஆறு நாட்கள்

இது போல் செய்யவும்.

ஆனால் இரண்டாவது நாள் முதல்

சாத உருண்டையை காகத்திற்குப் போடவும்.

ஏழு நாட்களுக்குப் பிறகு நல்ல பலன் தெரியும்.

3. பாலையும், உப்பையும் மந்திரித்து வரலாம்.

4. யார் முன்பும் உணவை ஊட்டக் கூடாது.

வேடிக்கை காட்டி ஊட்டும் போது

யாரும் பார்க்காதவாறு

ஒரு கிண்ணத்தில் வைத்து கொடுக்கவும்.

வார வாரம் திருஷ்டி சுற்ற வேண்டும்.

சனி அல் ஞாயிற்று கிழமைகளில் செய்யவும்.

குழந்தையை கிழக்கு நோக்கி நிற்க வைத்து,

அருகில் ஒரு பாத்திரத்தில் நீர் வைத்து வைக்கவும்.

தாய் அல் ஒரு முதிய பெண்மணி

குழந்தைக்கு எதிரில் நின்று கொண்டு

வலது கையால் குழந்தையின் உச்சி முதல் பாதம் வரை

வருடிக்கொடுத்தா படியே , மூன்று முறை

“ஓம் உவ்வும் சவ்வும் ஐயும் கிலியும் ஸ்வாஹா

எவ்வகை திருஷ்டியும் நசிநசி ஸ்வாஹா”

சொல்லி ,அந்த நீரை வாசலில் கொட்டிவிட்டு

கையை கழுவி விட்டு உள்ளே வரவும்.

அடிக்கடி தர்க்காவிற்குப் போய்

தொழுகை முடிந்து வருவர்களிடம் ஓதுவது,

பக்கீர்கள் மயில் தோகையால் தடவுவது

அனைவரும் அறிந்த திருஷ்டி பரிகாரங்கள்.

தர்க்காவிற்குப் போக முடியாத போது

தோகையை சுவாமி படத்தின் முன் வைத்து வணங்கி விட்டு

குழந்தையை கிழக்கு நோக்கி நிற்க வைத்து,

குழந்தையின் உச்சி முதல் பாதம் வரை தடவவும்.

“கண்ணேறு கழிந்து குழந்தை முன்னேற வேண்டும்”

என்று சொல்லியபடியே 7 அல் 11 முறை தடவவும்.

முடிந்ததும் குழந்தையை அங்கிருந்து போக சொல்லிவிட்டு

தோகையை மூன்று முறை ஊதவும்.

கை,காலை கழுவி விட்டு தோகையை

பூஜை அறையில் வைக்கவும்.

இந்த பரிகாரம் திடீர் என்று குழந்தை

சுணங்கி,சோர்ந்து இருக்கும் போது செய்ய வேண்டும்.

பொதுவாக அமாவாசை, ஞாயிற்று கிழமைகளில்

ஏதோ ஒரு திருஷ்டி கழிப்பது மிகவும் உத்தமம்.

ஒரு தட்டில் ஆரத்தி கரைத்துக் கொள்ள வேண்டும்.

[மஞ்சள்தூள், சிறிது சுண்ணாம்பு – நீர் விட்டு கரைத்து

அதில், இருந்தால் ஒரு வெற்றிலையை பிய்த்துப் போடுவது

ஒரு வர மிளகாயை போடலாம் ]

அருகில் ஒரு சொம்பில் அல் சிறிய பாத்திரத்தில் நீர் வைக்கவும்.

தாயும் சேயும் அல் குழந்தை மட்டும்

கிழக்கு நோக்கி நிற்க வைத்து,முதலில்

ஆரத்தியால் தலைக்கு மேல்

இடமிருந்து வலமாக மூன்று முறையும்,

வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றவும்.

பின் நீர் பாத்திரத்தால் இதே போல் செய்யவும்.

அவர்களை அந்த இடத்தை விட்டு நகர்ந்து போக சொல்லவும்.

ஆரத்தியையும், நீரையும் வாசலில் போய் கொட்டவும்.

கையைக் கழுவிக்கொண்டு வரவும்.

வீட்டில் உள்ள அனைவருக்கும் செய்யலாம்.

அம்மாவாசையன்று இது போல் செய்வது நல்லது.

ஒரு பெரிய சிகிச்சைக்குப்பிறகு மருத்துவமனையிலிருந்து

வீ ட்டிற்கு வரும்போதும் ,

குழந்தையை முதன் முதலாக வீ ட்டிற்கு எடுத்து வரும்போதும்

வீட்டில் ஒரு சுப காரியம் நடந்து முடிந்ததும் வீட்டோர் அனைவருக்கும்,

மணமக்கள் முதன் முதலாக வீ ட்டிற்கு வரும்போதும்

இந்த முறையில் திருஷ்டி கழிப்பது மிகவும் உத்தமம்.

தேங்காய் மீது கற்பூரம் ஏற்றி தலையை சுற்றி வாசலில் உடைப்பதும்

இந்த முறையில் வாகனங்களுக்கு திருஷ்டி கழிப்பதும் தெரிந்த விஷயம்.

ஒரு எழுமிச்சை பழத்தை நான்காக கீறி

உள்ளே குங்குமம் பூசி தலையை சுற்றி

நாற் சந்தியில் பழத்தை நான்காக பிரித்து

நான்கு திசைகளிலும் வீசி எறிந்து விட வேண்டும்.

மிக எளிதாக பெரியவர்கள் திருஷ்டி கழிப்பது உண்டு.

ஒரு படியில் கொஞ்சம் வரமிளகாய், கடுகு,உப்பு எடுத்துக் கொண்டு

எப்பவும் செய்வது போல் தலையை சுற்றி

விறகடுப்பில் போடுவார்கள்’

அது எவ்வளவு சடசட சப்தம் கொடுக்கிறதோ

அவ்வளவு திருஷ்டி இருப்பதாக சொல்வார்கள்.

குழந்தை பெற்ற தாய், பட்சி கூடு அடையும் நேரம்

[அதாவது மாலை 6 மணிக்கு மேல் ]

வெளியில் வரக் கூடாது

அவர் இருக்கும் அறை வாசலில் 6 மணிக்கு

சாம்பலால் மூன்று கோடு போடுவார்கள்.

[நான் அப்படித்தான் இருந்தேன்].

அடுத்த நாள் காலையில் தான் வெளியில் வர வேண்டும்.

இது பெயர் வைக்கும் நாள் வரை செய்வார்கள்.

குழந்தைக்கு மூன்று மாதங்கள் ஆகும் வரை

அமாவாசை, ஞாயிற்று கிழமைகளில்

திரி சுற்றி ஆரத்தி சுற்றுவார்கள்.

மூன்று துணி திரி திரிப்பார்கள்.

வழக்கம் போல் ஆரத்தி கரைப்பார்கள்.

ஒரு சொம்பில் அல் சிறிய பாத்திரத்தில் நீர் இருக்கும்.

ஒருஒரு திரியாய் பற்ற வைத்து

வழக்கம் போல் தலையை சுற்றி

ஆரத்தி தட்டில் போட்டு .

பின் வழக்கம் போல் ஆரத்தி சுற்றி

நீர் பாத்திரத்தால் இதே போல் செய்து

வாசலில் கொட்டி விடுவார்கள்.

பாடம் போடுவது பரவலான பரிகாரம்.

பாடம் போடுபவரிடம் குழந்தையை காட்டி

அவர் பாடம் போட்டு வீபூதி பூசி விடுவார்.

மிக சிறிய குழந்தையை தாயின் மடியில் அமர்த்தி,

பூந்துடைப்பக் குச்சிகள் எட்டினை எடுத்து

அதில் பெருக்கும் பகுதியை கையால் பிடித்துக் கொண்டு

மறு முனையால் குழந்தையின் தலைக்கு மேல்

இடமிருந்து வலமாக மூன்று முறையும்,

வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றவும்.

பின் தலை முதல் கால் வரை தொடுவது போல்

மெதுவாக மூன்று முறை தடவவும்.

அக்குச்சிகளை வீட்டின் பின் புறம்

தென்கிழக்கு மூலையில் சாய்த்து வைத்து கொளுத்தவும்.

பட்பட் என்ற சப்தத்துடன் எரிந்து சாம்பல் ஆவது போல்

குழந்தைக்கு பயத்தால் வந்த திருஷ்டி

பட் என்று போய்விடும் என்பார்கள்.

ஒரு புதிய மண் சட்டியில் ஊமத்தங்காய் ஒன்று,

படிகாரம் ஒரு கட்டி,தெருமண் கொஞ்சம் எடுத்துக் கொள்ளவும்.

பயந்து வந்த பெரிய குழந்தையை

கிழக்கு நோக்கி நிற்க வைத்து

மண் சட்டியை வழக்கம் போல் தலையை சுற்றவும்.

பின் குழந்தையின் உச்சி முதல் பாதம் வரை

மூன்று முறை இடம், வலமாக சுற்றவும்.

அச்சட்டியை மூன்று தெருக்கள் கூடும்

முச்சந்தியில் போட்டு உடைக்கவும்.

பின் ஓரமாக தள்ளி விடவும்.

வீட்டு வாசலிலேயே காலை கழுவி விட்டு

தண்ணீரை தலையில் தெளித்துக் கொண்டு

வீட்டுக்குள் போக வேண்டும்.

குழந்தையை குளிப்பாட்டும் போது

காலில் படுக்க வைத்து தான் குளிப்போம்.

காலுக்கு அடியில் ஒரு சொம்பில்

குழந்தை உடலில் இருந்து வடியும் நீரை பிடித்து

அதை தலையை சுற்றி கிழே ஊற்றி விட்டு

சொம்பை தலை கீழாக கவிழ்த்து விட்டு

அதன் மேல் கையை வைத்து நெட்டி முறிப்பதும்

பாலாடையில் பால் புகட்டி விட்டு

பாலாடையை தலையை சுற்றி விட்டு

கவிழ்த்து வைப்பதும் திருஷ்டி பரிகாரம்தான்.

தாய்க்கு பிள்ளைகள் எத்தனை வயதானாலும்

குழந்தை போல் தான் தெரிகிறார்கள்.

அதனால் இந்த திருஷ்டி பரிகாரங்கள்

நடந்து கொண்டே தான் இருக்கும்.

You may also like

Translate »