Home பரிகாரங்கள் தானங்களும் அவற்றின் பலன்களும்

தானங்களும் அவற்றின் பலன்களும்

by Sarva Mangalam

 

 

அன்னதானம்

அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும் . பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

பல்வேறு தானங்களில் தனிச் சிறப்பு மிக்கது அன்னதானம். தானங்களில் மிக உயர்ந்த சிறப்பான ஒரு இடம் அன்னதானத்திற்கு உண்டு. காரணம், ஒரு மனிதன் உணவை மட்டுமே போதும் என்று சொல்வான். “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்று புறனாநூற்றுப் பாடலும் கூறுவது இதைத் தான்.

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். (குறள் 225)

என்கிறார் திருவள்ளுவர்.

அதாவது பசியை பொறுத்துக்கொண்டு தவமியற்றுபவர்களின் ஆற்றலைவிட அப்பசியை தணிப்பவர்களின் ஆற்றல் மிகப்பெரிது என்கிறார் வள்ளுவர். எத்தனை சத்தியமான வார்த்தைகள் இவை. அன்னதான அருந்தொண்டை இதைவிட யாராவது சிறப்பித்து கூறமுடியுமா?

ஆடை தானம்

மானத்தை மறைக்க உதவும் ஆடைதானம் செய்தால் தகாத உறவுக் குற்றங்கள் நீங்கும். பெண்களின் கற்பிற்கு ரட்சையாக இருக்கும்.

ராமகிருஷ்ண மிஷன் இல்லங்கள் மற்றும் தேர்நெதெடுக்கப்பட்ட சில முதியோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் இதை செய்யலாம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை பிள்ளைகளை கணக்கெடுத்து அவர்களுக்கு சீருடை வாங்கித் தரலாம்.

தெய்வத் திருக்கல்யாணங்கள் நடைபெறும்போதும் ஆடை தானம் (வஸ்திர தானம்) முக்கிய பங்கு வகிக்கிறது.

காலணி தானம்

காலணி தானம் செய்தால் பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும். தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.

நம்மை சுற்றி நாம் தினசரிக் காணக்கூடிய பலருக்கு இந்த உதவியை செய்யலாம். காய்கறி விற்கும் பெண், கூலியாட்கள். கட்டிட வேலை செய்பவர்கள், வயது முதிர்ந்த யாசகம் பெறுபவர்கள் இவர்களெல்லாம் காலில் செருப்பு இல்லாமல் இருப்பதை கண்டால் அவர்களுக்கு காலணிகள் வாங்கித் தரலாம். கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கும் இதை வாங்கி தரலாம்.

மாங்கல்ய சரடு தானம்

மாங்கல்ய சரடு தானம் செய்தால் காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும்.

ஆடி மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. மாங்கல்ய சரடு + வளையல் + கண்ணாடி } மஞ்சள் + குங்குமம் அடங்கிய கிப்ட் பேக் கடைகளில் கிடைக்கிறது. நல்ல தரமானதாக, அவரவர் சக்திக்கேற்ப 54 அல்லது 108 வாங்கி அம்மன் கோவில்களில் கொடுத்து வெள்ளிக்கிழமை அம்மனை தரிசிக்க வரும் பெண்களுக்கு கொடுக்கலாம். அல்லது அர்ச்சகரிடம் கொடுத்து கொடுக்கச் சொல்லலாம்.

பொன் மாங்கல்யம் தானம்

பொன் மாங்கல்யம் தானம் செய்தால் மாங்கல்ய தோஷங்கள் நீங்கும். திருமண தடங்கல்கள் நீங்கும்.

ஏழை எளியோரின் திருமணத்திற்கு பொன் மாங்கல்யம் தானம் செய்யலாம். இதற்கு பயனாளிகளை தேடி அலையவேண்டியதில்லை. நமது உற்றார் உறவினர்களிலேயே சற்று சல்லடை போட்டு தேடினால் யாரேனும் பயனாளிகள் கிடைக்கக்கூடும்.

குடை தானம்

குடை தானம் செய்தால் தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும் . குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.

குடை தானம் என்பது நேரடியாகவும் செய்யலாம். சற்று மாறுபட்டும் செய்யலாம்.

இந்த காலங்களில் நமக்கு பலவிதங்களில் சேவையாற்ற வருபவர்கள் உண்டு. உதாரணத்துக்கு தபால்காரர், கூரியர் பாய், பால்காரர், சிலிண்டர் கொண்டு வந்து போடும் ஊழியர்…. இவர்கள் எல்லாம் வெயில் மழை பாராமல் பணியாற்றுபவர்கள். இவர்களுக்கு நல்ல ரெயின் கோட் ஒரு செட் வாங்கித் தரலாம்.

நீங்கள் நன்றாக கவனித்தீர்கள் என்றால் புரியும், மழைக்காலங்களில் இவர்கள் மழையில் நனைந்தபடி தான் சேவை செய்வார்கள். இவர்களுக்கு ரெயின் கோட் வாங்கி கொடுத்து பாருங்கள். இவர்களின் சேவையின் தரமே உயர்ந்துவிடும். உங்களுக்கு மட்டுமல்ல… சமூகத்துக்கே அது பயனளிக்கும்.

பாய் தானம்

பாய் தானம் செய்வதால் பெற்றவர்களை பெரியவர்களை புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும் . அமைதியான மரணம் ஏற்படும் .

கோரைப் புற்களால் வேய்ந்த பாயை வாங்கித் தருவது விசேஷம். முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவற்றில் இதை செய்யலாம்.

பாய் தேவையில்லையெனில் நல்ல பெட்ஷீட் அல்லது போர்வை நிச்சயம் தேவையிருக்கும். இந்த தேவையுடையோர் சமூகத்தில் கீழ்மட்டத்தில் பலர் உண்டு. தேவை சற்று விசாலமான கருணையான பார்வை மட்டுமே.

பசு தானம்

பசு தானம் செய்தால் இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.

இந்த காலத்தில் பசு தானம் செய்வது எளிதல்ல. அதை வாங்குபவர்கள் சரியாக பராமரிக்காமல் போகும் அபாயம் உண்டு. ஏற்கனே பல கோவில்களில் கோ-சாலைகளில் பசுக்களை வைத்து பராமரிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள்.

சமீபத்தில் பூவிருந்தவல்லி வரதராஜப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற கோ சமரட்சணத்தின்போது..
அறுப்புக்கு போகும் பசுக்களை காப்பாற்றி கொண்டு வந்து ரட்சிக்கும் கோ-சாலைகளுக்கு தீவனம், வைக்கோல் முதலியவற்றை வாங்கித் தரலாம். நிச்சயம் அது கோ தானத்தின் பலனை கொடுக்கும்.

சாஸ்திர ரீதியாக உங்களுக்கு கோ தானம் செய்யவேண்டும் என்று யாராவது பரிகாரம் சொன்னால் கூட, அதற்கு பதில் பசுக்களுக்கு தீவனம் வாங்கித் தர முயற்சி செய்யுங்கள். பசுக்களை தானமளிப்பதோடு உங்கள் வேலை முடிந்து போய்விடுவீர்கள். ஆனால் சென்னை போன்ற நகரங்களில் அதை பராமரிப்பது கஷ்டம். எனவே கோ தானத்திற்கு பதில், கோ சம்ரட்சணம் செய்யுங்கள்.

* சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் ஒரு மிகப் பெரிய கோ-சாலை உள்ளது. அங்கு விரைவில் இதன் பொருட்டு செல்லவிருக்கிறோம்.

பழங்கள் தானம்

பழங்கள் தானம் செய்தால் பல ஜீவன்களை வதைத்த சாபம் தீரும். ஆயுள் விருத்தியாகும்.

பழங்களை யாருக்கு எங்கு வேண்டுமானாலும் தானம் செய்யலாம். ஏதேனும் ஒரு அரசு மருத்துவமனைக்கு சென்று, நோயாளிகளை சந்தித்து, அவர்களுக்கு ஆப்பிள், மாதுளை போன்ற விலை அதிகமுள்ள அவர்களால் வாங்க இயலாத பழங்களை வாங்கிக் கொடுக்கலாம்.

காய்கறிகள் தானம்

காய்கறிகள் தானம் செய்தால் பித்ரு சாபங்கள் விலகும். குழந்தைகளின் ஆரோக்யம் வளரும்.

கோவில்களில் தெய்வத் திருமணங்கள் நடைபெறும் போது அன்னம் பாலிப்புக்கு காய்கறிகளை வாங்கித் தந்துவிடலாம். இதெல்லாம் பணமாக இல்லாமல் நீங்கள் பொருளாகவே வாங்கித் தரலாம்.

அரிசி தானம்

அரிசி தானம் செய்தால் பிறருக்கு ஒன்றுமே தராமல் தனித்து வாழ்ந்த சாபம் தீரும். வறுமை தீரும்.

வேத பாடசாலைகள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவற்றுக்கு அரிசி வாங்கித் தரலாம். தற்போது ஆடி மாதம் கூழ் வார்த்தளுக்கு அரிசி வாங்கித் தரலாம்.

எண்ணெய் தானம்

எண்ணெய் தானம் செய்தால் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த கர்ம வினைகள் அகலும். கடன்கள் குறையும்.

ஆலயங்களுக்கு விளக்கெரிக்க எண்ணெய், மற்றும் தர்ம சாலைகளுக்கு சமையலுக்கு எண்ணை இப்படி வாங்கித் தரலாம்.

பூ தானம்

பூ தானம் செய்தால் அந்தஸ்து காரணமாக பிறரை அவமதித்ததால் ஏற்படும் தீவினைகள் நீங்கும். குடும்ப வாழ்க்கை சுகமாகவும் , சாந்தமாகவும் அமையும்.

கோவில்களுக்கு பூக்களை 30 முழம் 40 முழம் வாங்கித் தந்து வரும் பெண்களுக்கு கொடுக்கச் சொல்லலாம். குறைந்தது அரை முழமாவது கொடுக்கச் சொல்லுங்கள். (நீங்களே அரை அரை முழமாக கத்திரித்து கத்தரித்து கொடுத்துவிடலாம்.).

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்… ஏதோ ஒரு ஆலயத்துக்கு செல்கிறீர்கள்… அரை முழம் மல்லிகை பூவை உங்களிடம் சூடிக்கொள்ள கொடுத்தால் உங்களுக்கு எத்தனை சந்தோஷமாக இருக்கும்?

மேலே கூறியவற்றிலிருந்து என்ன தெரிகிறது?

மனமிருந்தால் மார்க்கமுண்டு!

ஆம்! தானம் செய்யவேண்டும் என்கிற மனம் இருந்தால் போதும். அவற்றிற்கான சரியான வழிமுறைகள் பயனாளிகள் கண்களுக்கு புலப்படுவர். இவற்றை செய்யும்போது ஒரு சில கசப்பான அனுபவங்கள் உங்களுக்கு கிடைக்கலாம். சில இடங்களில் ஏமாற்றப்பட்டதாக கூட உணரலாம். ஆனால், அது உங்கள் சேவையை மேலும் செம்மைப்படுத்திக்கொள்ளவே என்று கருதி செயலாற்ற வேண்டும். சுணங்கி விடக்கூடாது.

You may also like

Translate »