Home ஆன்மீக செய்திகள் கடவுளைத் தேடுவோம் :

உலகத்தினுடைய விவகாரங்களிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்று பகவான் ரமண மகரிஷி சொல்கிறார்.‘‘கடவுள் தேடல்தான் மிக முக்கியம். நான் யார் என்று கவனிப்பதுதான் மிக உன்னதமான வழி என்று ஏற்றுக்கொண்டு விட்டீர்களென்றால் மற்ற விஷயங்களெல்லாம் பின்னுக்குப் போய்விடும்; உங்களைவிட்டு தானாக அகன்றுவிடும். கடவுள் தேடலை நாடகமாக… உங்கள் உள்ளுக்குள் உங்களை அறிவதை ஒரு சடங்காக நீங்கள் செய்யத் துவங்கினால் துறவியாக இருக்க முடியாது.

அங்கேயும் போலிவேஷம் போட்டுக்கொண்டு நான் தியானம் செய்கிறேன். நான் மூச்சுப் பயிற்சி செய்கிறேன் என்று உலகத்தாருக்காக நடிப்பதாகத்தான் முடியும். உங்களுக்கு நீங்களே நடித்துக்கொண்டால் எந்த முன்னேற்றமும் ஏற்படாது. மாறாக பாழ்குழிக்குத்தான் செல்வீர்கள் என்று தெளிவாக பெரியோர்கள் சொல்கிறார்கள்.

முழுநேரமும் மனம் அடங்குவதற்கு என்ன செய்வது?
எது உலக விவகாரம்?

அரசியல் குறித்தோ, மொழியின் மீது அக்கறையோ, மதத்தின் மீது பற்றோ, ஊர்மீது விசுவாசமோ அல்லது தங்கள் இனத்தின் மீது மிகப்பெரிய ஈடுபாடோ வைத்துக்கொண்டால் இவற்றிலிருந்து தப்பிப்பது மிகவும் கடினம்.

மதம் ஒரு அமைப்பு. மொழி ஒரு கருவி. இனம் ஒரு சிறு கூட்டம். இந்த பூமி உயிரினங்கள் எல்லாவற்றிற்கும் சொந்தம். எனக்கு மட்டும் சொந்தமல்ல என்பது தெளிவு. இப்படியெல்லாம் யோசித்து இவற்றிலிருந்து விலகிவிட வேண்டும்.

அரசியல் என்பது கோபங்களும் தாபங்களும் காழ்ப்புகளும் சுயநலங்களும் பேராசைகளும் கொண்ட இடம். எனக்கு அது உதவாது என்று
தெள்ளத்தெளிவாக புரிந்துகொண்டு அதிலிருந்து தள்ளியிருத்தல் வேண்டும்.

குடும்பம் இன்னொரு குறியீட்டுடன், சம்சாரம் சாகரம் என்றெல்லாம் பேசப்படுகிறது. குடும்பத்திலிருந்து கொண்டே தனித்திருப்பது பற்றி யோசிக்க வேண்டும். மிகக் குறைந்த அளவு பொறுப்புகளை சுமப்பதாக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். உடலுறவு என்பது பொறுப்பை அதிகப்படுத்துகின்ற வழி. இதனால் சுமைகள் அதிகமாகும். எனவே, இதிலிருந்தும் தள்ளி நிற்க
வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையெல்லாம் இன்னொருவரிடம் கேட்டுக் கொண்டில்லாமல் நீங்களாகவே எது சுமை, எது கட்டு, எது பிணைத்திருக்கிறது என்று பார்த்து மெல்ல மெல்ல இந்த உலக விவகாரங்களிலிருந்து விடுபட்டு தனியே அமர்ந்து கொண்டால் உள்ளுக்குள் பயணப்படுவது சரியாகவரும் என்று சொல்லப்படுகிறது. தீவிரமாக இதில் ஈடுபட முடியும் என்றும் அறிவுறுத்தப்
படுகிறது.

செல்வந்தர்களால் ஞானமடைய முடியுமோ என்ற கேள்வி பகவான் ரமண மகரிஷியிடம் வைக்கப்பட்டது.

“இல்லை. செல்வந்தர்கள் செல்வத்தை சேகரிப்பதிலும் அதை பாதுகாப்பதிலுமே நாட்டமுடைபவர்களாக இருப்பார்கள். அவர்கள் மனம் விடுதலையுடன் இருக்காது. எனவே, அவர்களுக்கு ஞானமடைவது எளிதல்ல. மனம் ஏதேனும் ஒன்றை பற்றிக் கொண்டுதான் இருக்கும். செல்வம் இருப்பின் செல்வத்தைத்தான் பற்றிக் கொண்டிருக்கும். கடவுளை பற்ற முடியாது தவிக்கும்.

செல்வமில்லையென்றால் எப்படி வாழ்வது? காசு சேகரித்து குடும்பத்தோடு சௌகரியமாகவும் கவுரவமாகவும் வாழ்வதுதானே வாழ்க்கை? என்ற கேள்விகள் யதார்த்தமானதே.

செல்வம் சேகரிப்பதில் முழு மனதாக ஈடுபடுங்கள். இதில், உங்களை அறிவதில், கடவுளைத் தேடுவதில், நீங்கள் நாட்டம் கொள்வதில் அர்த்தமில்லை. முழு மூச்சாய் வீட்டு வசதிகளை, மனைவி குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். அதேசமயம் கடவுள் என்ற விஷயம் இருக்கிறது. அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு ஏதேனும் ஒரு கணத்தில் ஏதேனும் ஒரு ஜென்மத்தில் இது எனக்கு லயிக்கட்டும் என்ற ஆசையோடு இருங்கள். அதேசமயம் மனதை
கவனிப்பதையும் பழகிக் கொள்ளுங்கள். அது குரங்காட்டம் போடுவதை கவனியுங்கள்.

குடும்பச் சுமையை தூக்குவதென்றால் வெகு நிச்சயம் பொருளாதாரம் மேம்பட்டிருக்க வேண்டும். பொருளாதாரத்தில் மனம் லயித்துவிட்டால் கடவுள் தேடல் தன்னையறிதல் என்பது எளிதில் வராது. எதற்கு கடவுள் தேட வேண்டும்? காசு சம்பாதித்து குழந்தைகளை வளர்த்தால் அது போதாதா என்று கேள்வி கேட்டால் அதற்கு பதில் ஏதுமில்லை. உங்களுக்குப் பிடித்தமானதை தாராளமாகச் செய்து கொண்டிருங்கள். அலுத்துப்போகும் வரை
செய்யுங்கள்.

ஆனால், ஏதோவொரு கணம் வாழ்வின் கடைசி பகுதியில் தவறவிட்டு விட்டோமோ, தன்னையறியாது வெறுமே உழன்று விட்டோமோ, எங்கெங்கோ மாட்டிக்கொண்டு அலைந்து, திரிந்து அழிந்து விட்டோமோ என்ற துக்கம் ஏற்படின் தன்னைத் தேடுதல் எவ்வளவு பெரிய விஷயம் என்று அப்போது புரியும். அந்த நேரத்தில் உங்களால் எதுவும் செய்ய முடியாது.

அதற்குண்டான பயிற்சி இருக்காது. மரணம் பற்றிய பயமே மேலோங்கியிருக்கும். தள்ளாமை ஏற்பட்டு மரணம் பற்றிய பீதிகள் உள்ளுக்குள்ளே பொங்கத் துவங்கி இன்றைக்கு சாவா, நாளைக்கு சாவா, இந்த மாதம் மரணமா, அடுத்த மாதமா, புதன் கிழமையா, வெள்ளிக்கிழமையா என்று தவித்துக் கொண்டிருப்பின் அதைவிடக் கொடுமை உலகத்தில் எதுவுமில்லை. நீங்கள் வாழ்ந்ததற்கு அர்த்தமும் இல்லை.

குடும்பத்தை துறக்க வேண்டாம். செல்வத்தை உதற வேண்டாம். ஆனால், கடவுள் தேடுதல் என்பதை சிறுசிறு விஷயங்களாக செய்து கொண்டிருங்கள். மூச்சுப்பயிற்சி, யோகாசனம், ஹோமங்கள், யாகங்கள், அபிஷேக ஆராதனைகள், க்ஷேத்ராடனங்கள் என்று பலதும் செய்து கொண்டிருங்கள். கடவுளைத் தேடுவதற்கு நீங்கள் நாத்திகராகக் கூட இருக்கலாம்.
வாழ்க்கையில் மிக சுவாரசியமானது பொருள் தேடலோ, பெண் சுகமோ, குழந்தைகள் பெறுதலோ, கலைகளின் வியக்தியோ அல்ல. இவைகளுக்கெல்லாம் மூலகாரணமாக இருக்கின்ற நான் யார் என்ற கேள்வியே. எது நான் என்கிற வினாவே மிக முக்கியமாக இருக்கிறது. நான் யார் என்ற கேள்வியும் கடவுள் தேடலும் ஒரே மாதிரியான விஷயம். நான் யார் என்று தெரிபவர்களுக்கு கடவுள் என்ற விஷயம் மிக எளிதாக, மிக முழுமையாக புரிந்து போகிறது என்று சொல்லப்படுகிறது.

மனித குலத்தில் மற்ற எல்லா விஷயத்தையும்விட கடவுள் தேடல் என்கிற விஷயம்தான் எப்பொழுதுமே கிளர்ந்து கிளர்ந்து முதன்மையாய் நின்றிருக்கிறது. அதனாலேயே இத்தனை மதங்கள், இத்தனை மொழிகள். இந்த மொழிகளெல்லாம் கடவுளைத்தான் அதிகம் பேசியிருக்கின்றன. இந்த மதங்களெல்லாம் கடவுளைத் தேடித்தான் ஒன்றாக கூடியிருக்கின்றன. இந்தக் கலைகளெல்லாம் கடவுள் தேடலை ஆதரவாக வைத்துக்கொண்டுதான் மிகப் பெரிதாக வளர்ந்திருக்கின்றன.

கடவுள் இல்லை என்று சொல்கின்ற விஷயத்திற்கு மேலாக கலையோ, மொழியோ அல்லது வேறு ஏதேனும் ஒரு விஷயமோ வளர்ந்ததாக சரித்திரம் இல்லை. கடவுள் இல்லை என்பவர் எல்லா இடத்திலும் மிகச் சிறிய குழுவாகவே இருக்கிறார்கள். அவர்கள் வெறுமேதான் இருக்க முடிகிறது. எனவே, கடவுள் தேடல் என்பதுதான் சுவாரசியமான கலைச்செறிவு மிகுந்த பண்பாடு வளர்க்கின்ற ஒரு விஷயமாக மனித குலத்தை வளர்த்திருக்கிறது.

You may also like

Translate »