Home ஆன்மீக செய்திகள் அகத்தியர் சொன்ன அற்புத ரகசியம்:

அகத்தியர் சொன்ன அற்புத ரகசியம்:

by Sarva Mangalam

*அகத்தியர் சொன்ன அற்புத ரகசியம்*

உண்ணும் உணவு வழி இத்தனை பாபத்தை மனிதன் சேர்த்துக் கொள்வது கூட யாருக்கும் புரியவில்லை, என்பதே உண்மை. இன்னொன்று தெரியுமோ, மனிதர்களை ஆட்டிப்படைக்கவே இறைவன் இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம் போன்ற சுவைகளை உருவாக்கினான். இதற்குள் மனிதன் அடைபட்டு கிடந்தால், நவகிரகங்களுக்கு தன் வேலையை முடிப்பது எளிதாகும். அதனால், உணவில் எவனொருவன் கவனமாக, கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கிறானோ, அவன் நவகிரகங்கள் தன் அருகில் வராமல், அவர்கள் பாதிப்பிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்கிறான் என்று பொருள். அவனிடம் எந்த கெடுதலும் அண்டாது. உடலில் நவகிரகங்கள் பாதிப்புக்கும் அனைத்து வியாதிக்கும் காரணம், உணவு வழியாக உள் செல்லும் பாபங்கள் தான். சரி இதிலிருந்து தப்பிப்பது எப்படி என்று பார்ப்போம்.
எந்நேரமும் உணவை உண்ணும்முன் வலது கையில் நீர் எடுத்து, தனக்கு தெரிந்த ஜபத்தை செய்து, அந்த நீரை தெளித்து, உணவை சுத்தம் செய்த பின் உண்ணலாம். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் அக்னியானது, வலது உள்ளங்கையில் கொதிப்பாக இருக்கும். மந்திர ஜபம் அதை மெருகூட்டும். அந்த அக்னி நீர் தெளிப்பதால் நிச்சயமாக உணவின் தோஷங்கள் விலகும்.
உண்ணும் முன் இறைவனை அழைத்து, நீயே என்னுள் அமர்ந்து இந்த உணவை உனக்கு படைக்கும் நிவேதனமாக ஏற்றுக்கொள் என பிரார்த்தித்துவிட்டு, முழு சரணாகதி தன்மையுடன் உண்டால், அந்த உணவின் தாத்பர்யம், இறைவனை சென்று சேர்ந்துவிடும். இவனை/இவளை எந்த உணவு தோஷமும் அண்டாது.
மிக எளிதாக செய்ய விருப்பப்பட்டால், உணவை வாய்க்குள் இடும்பொழுது, “சர்வம் கிருஷ்ணார்ப்பணம், அல்லது சர்வம் சிவார்ப்பணம்” என்று முழு மனதாக நினைத்து உண்ணுவது கூட மிகச் சிறந்த பயனை கொடுக்கும்.
ஒருவன் உண்ணும் சூழ்நிலை அமைதியாக இருக்க வேண்டும். மிக சப்தம் நிறைந்த சூழ்நிலை, வேண்டத்தகாத வார்த்தைகளை பேசுகிற சூழ்நிலைகள் அன்னதோஷத்தை உருவாக்கும். மிக மிக அமைதியாக சூழ்நிலை கிடைத்தால், அது இறைவன் அருளியது என்று உணரவேண்டும்.
சமைப்பவர்கள், சுத்தமாக, நல்ல எண்ணங்களுடன், முடிந்தால் தனக்கு தெரிந்த நன் மந்திரங்களை கூறியபடி சமைத்தால், தெரியாமலேயே உணவில் உள்புகும் தோஷங்கள் விலகிவிடும். இன்றைய காலகட்டத்தில், இங்குதான் அத்தனை அன்னதோஷமும் ஒன்று கூடுகிறது.
உண்ணும் முன் ஒருபிடி உணவெடுத்து, அத்தனை குருவையும், பித்ருக்களையும் நினைத்து பிரார்த்தித்து, அதை பிற உயிரினங்கள் உண்ணக் கொடுத்து, பின் தான் உண்டால், அவனுக்கு அனைவரின் அருளும், ஆசிர்வாதமும் கிடைக்கும். பிற உயிரினங்கள் உண்டாலும், அவன் யாரை எல்லாம் நினைத்து அதை படைத்தானோ, அவர்களை, எங்கு எந்த ரூபத்தில் இருந்தாலும், அந்த தாத்பர்யம் சென்று சேரும். அவனுக்கு சிறப்பான வாழ்க்கை அமையும்.
பசிக்கிறவனுக்கு, புசிக்க அன்னம் கொடுப்பவன், தன் பிணியை அறுக்கிறான். அதை இறை சிந்தனையோடு செய்கிறவன், இறைவனாகவே ஆகிறான், அந்த ஒரு நிமிடத்தில். தன் பசியை புசித்து போக்கிக்கொண்டால், கிடைக்கும் திருப்தியை விட மேலானது பிறர் பசியை போக்கி கிடைக்கும் நிம்மதி. அதை செய்து உணரவேண்டும், இந்த மனித குலம்.
ஒரே ஒரு சிறு இலையை உண்டால் நீண்ட காலங்களுக்கு பசியே வராது. அப்படியும் இறைவன் இங்கு படைத்து வைத்திருக்கிறார். ஒரு இலையால், எந்த வியாதியையும் மாற்றவும் முடியும், ஒரு இலையால் எந்த உலோகத்தையும், தங்கமாகவும் மாற்றமுடியும், என்றபடியும் இறைவன் படைத்திருக்கிறான். விஷயம் தெரிந்த தவசிகள் காட்டில் ஆனந்தமாக பாபத்தை சேர்த்துக்கொள்ளாமல், த்யானத்தில் இருக்க காரணமும் அதுதான். இவைகளில், அவர்கள் கவனம் சிதறாமல் இருப்பதே காரணம். தவசிகள், ஆனந்தமாக இருக்கவும், இவைகளே காரணம்.
“அனைத்து சித்தர்களும், தவசிகளும், ரிஷிகளும், முனிவர்களும், சித்த வித்யார்த்திகளும், தங்கள் தியானத்தின் முடிவில், மனிதர்களும் இவ்வளவு சிறப்பாக வாழ இறைவன் அருளியத்திற்கு, நன்றியை, அகத்தியப் பெருமானிடம் தான் சமர்ப்பிக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா? எந்த குருவிடம் சமர்ப்பித்தாலும், அந்த விண்ணப்பம், குருவழி அகத்தியப்பெருமானிடம்தான் சென்று சேரும். அவர் காணாத எந்த பிரார்த்தனையையும், இறைவன் ஏற்றுக்கொள்வதில்லை என்பதே உண்மை, என்று உனக்குத் தெரியுமா?” என்று அவர் கூறவும், மனத்தால், இரு கரம் கூப்பி அகத்தியரின் உயர்ந்த நிலையை நினைத்து வணங்கினேன்.
“அடடா! இப்படிப்பட்ட உயர்ந்த ஒரு சித்தரைப் பற்றி தெரிந்து கொள்ள, அவர் வழி நடக்க நமக்கு கிடைத்த மிகப் பெரிய வரமாக இந்த வாழ்க்கை அமைந்துள்ளதே” என்று பூரித்துப் போனேன். *அன்புடன் திருமலை*.

 

You may also like

Translate »