Home ஆன்மீக செய்திகள் எமதர்மன் வரலாறு

உலகில் பிறந்தவர்கள் அனைவரும் இறந்தே தீரவேண்டும் என்பது வாழ்க்கை நியதி.

ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டாலும் மாண்டார் திரும்பி வரமாட்டார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
மரணம் எனும் நிகழ்வைக் கட்டுப்படுத்துகிற தேவன் எமன். அவனுக்கு எமதருமன் என்றும் தர்மராஜன் என்றும் பெயருண்டு. காலம்  தவறாமல் உயிர்களைக் கவர்வதால் அவனுக்குக் காலன் என்ற பெயரும் உண்டு.

அஷ்டதிக் பாலகர்களில் தென்திசைக் காவலன் எமன். இவன் மகாவிஷ்ணுவின் பாரம்பரியத்தில் தோன்றியவன். மகாவிஷ்ணுவிடமிருந்து தோன்றியவர் பிரம்மதேவன். அவரிடமிருந்து தோன்றியவர்கள் மரிசி, காஸ்யபர், சூரியதேவன் ஆகியோர். சூரியனிடமிருந்து தோன்றியவன் எமதருமன்.

அவனுக்கு சூரியபுத்திரன் என்ற பெயரும் உண்டு.விஸ்வகர்மா எனும் தேவலோகச் சிற்பியின் மகள் (சஞ்ஞாதேவி) சம்ப்ஜனா. இவளை சூரியதேவன் மணந்தார். அவர்களுக்கு மனு, எமன் என இரண்டு புத்திரர்களும், எமி என்ற மகளும் தோன்றினர். சூரியனின் கடும் வெப்பத்தைத் தாங்கமுடியாத சம்ப்ஜனா, தனது நிழலான சாயாவை சூரியனிடம் விட்டுவிட்டு, தவம்புரிய வெகுதூரம் சென்றுவிட்டாள். சாயாவையே சம்ப்ஜனா என எண்ணிக் கொண்டிருந்த சூரியதேவனுக்கு அவள் மூலம் மூன்று குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் சனி, மனு, தப்தி ஆகியோர். எமனும் சனியும் சூரிய புத்திரர்கள். எனவே, சகோதரர்கள்.

எமன் இயற்கையிலேயே நியாயஸ்தன். நீதி, நேர்மை தவறாதவன். சத்தியத்தின் பிரதிநிதி. சம்ப்ஜனாவின் நிழல்தான் சாயா என்ற உருவத்தில் சூரியனின் பத்தினியாக வாழ்ந்துகொண்டிருந்ததை அறிந்த எமன், சாயாவைக் குற்றம் சாட்டினான். அவள் சூரியனை ஏமாற்றுவதாகக் குறை கூறி, கோபத்தில் காலால் உதைத்தான். இதனால் கோபமடைந்த சாயா, எமனுக்குக் கால்களில் ஆறாத புண் ஏற்பட்டுத் துன்பப்படுமாறு சாபம் அளித்துவிடுகிறாள்.

பின்னர் சூரியனின் ஆணைப்படி எமன் சிவனைக் குறித்துக் கடும் தவம் இயற்றினான். சிவபெருமான் தோன்றி, அவனைத் தென் திசைக்குக் காவலனாக்கி, மனித உயிர்களின் ஆயுள் முடியும்போது, அவற்றைக் கவர்ந்து பாவங்களுக்கேற்ப தண்டனை அளிக்கவும், புண்ணிய பலன்கள் அளித்து வாழ வழி செய்வதற்கும் அதிகாரத்தை வழங்கி, அவனை நரகலோகம் எனும் எமலோகத்துக்கு அதிபதியாக்கினார்.

இரண்டு கூரிய சிகரங்களிடையே அதலபாதாளத்தில் அக்னி ஆறு.  சிகரங்களை இணைத்துக் கட்டப்பட்ட ஒரு தலைமுடியில் ஒரு சிம்மாசனம் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்க, அதில் அமர்ந்துதான் எமதருமன் நீதி வழங்குகிறான்.
அவனது நீதியின் தன்மை எள்ளளவு மாறினாலும் அந்த சிம்மாசனம் அறுந்து, அதனுடன் எமனும் அக்னி ஆற்றில் விழுந்துவிடுவான். இத்தகைய சூழ்நிலையில்தான் எமன் நியாயம் வழங்கிக் கொண்டிருக்கிறான்.
சிவபெருமான், தனது வாகனத்துக்குச் சமமான ஒரு வாகனத்தை எமனுக்குத் தர விரும்பினார்.
ரிஷபத்தைப் போலவே தோற்றமுடைய, கரிய எருமைமாடு ஒன்றை உருவாக்கி, எமனுக்கு வாகனமாக அருளினார்.
விஷ்ணுவின் அம்சமான எமனுக்கு ஜீவன்களின் பாபபுண்ணியங்களை அனுசரித்து நீதி வழங்கும் அதிகாரத்தையும் அளித்தார்.

இந்தப் பணியைத் தவறின்றிச் செய்ய எமனுக்கு பல தடவை அக்னிப் பரீட்சை நிகழ்ந்தது. அவற்றிலெல்லாம் தவறாமல் தனது கடமையைச் செய்தவன் எமதருமன்.

ஆனால், ஸ்ரீராம அவதார முடிவில் எமனுக்கு ஒரு பெரும் சோதனை ஏற்பட்டது. ராவண சம்ஹாரத்துக்குப் பிறகு ஸ்ரீராமன் அயோத்தி திரும்பி முடி சூட்டிக்கொண்டான். இருந்தாலும் யாரோ ஒருவன் சொன்ன அபவாதத்துக்காகச் சீதையைக் காட்டுக்கு அனுப்ப நேர்ந்தது. வால்மீகி மகரிஷியின் ஆசிரமத்தில் ராமனின் புதல்வர்கள் லவ- குசர்கள் தோன்றினர். ஸ்ரீராமன் அனுப்பிய அஸ்வமேத யாகக் குதிரையை லவ- குசர்கள் தடுத்து, அதனால் ராமனே தன் புதல்வர்களை எதிர்த்துப் போரிடும் நிலைமை உருவாயிற்று.

பின்னர், லவ-குசர்கள் யாரென்று அறிந்து மனமகிழ்ந்தார் ஸ்ரீராமன். அவர்களுக்கு முறைப்படி பட்டம் சூட்டப்பட்டது. ஸ்ரீராமன், தனது அவதாரத்தின் கடமைகளை முடித்து மீண்டும் வைகுண்டம் செல்ல வேண்டிய தருணமும் வந்தது. இந்தப் பணி நிறைவேற எமனுடைய கடமை முக்கியமாக இருந்தது.

மகாவிஷ்ணுவின் சக்தியை ஸ்ரீராமனின் ஸ்தூல சரீரத்தில் இருந்து எடுத்து, மீண்டும் வைகுண்டம் சேர்க்க வேண்டியது எமனின் கடமையானது. அப்போது, எமதருமன் பிரம்ம தேவனை வேண்டினான். பிரம்மன் தோன்றி, இதற்கான வழிமுறையை அவனுக்கு எடுத்துரைத்தார்.

அதன்படி எமதருமன் அதிபலா மகரிஷியின் சீடன் போல் வடிவெடுத்து, அயோத்திக்கு வந்தான். அங்கே ஸ்ரீராமனைச் சந்தித்தவன், தான் ராமனுடன் தனியாக சில தேவ ரகசியங்கள் பற்றி பேசவிருப்பதால், யாரும் தங்கள் அறைக்குள் வரக்கூடாது என்று நிபந்தனை விதித்தான் அவனது விருப்பப்படியே ஸ்ரீராமனும் தன் சகோதரனான லட்சுமணனை அழைத்து, அறைக்கு வெளியே காவலுக்கு நிறுத்தினார். தாங்கள் பேசி முடிக்கும் வரையிலும் எவராக இருந்தாலும் உள்ளே விடக்கூடாது என உத்தரவிட்டார்.

எமனும் ஸ்ரீராமனும் அறைக்குள் பேசிக்கொண்டிருந்த போது துர்வாச முனிவர் அங்கு வந்து சேர்ந்தார். ஸ்ரீராமனைப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார். லட்சுமணன் அனுமதிக்க வில்லை. ஆனால், துர்வாசர் அவனை அலட்சியம் செய்யாமல், கோபத்துடன் ராமன் இருந்த அறைக்குள் சென்றுவிட்டார். (வேறு விதமாகவும் சொல்வதுண்டு.) இதனால், தன் கடமையைச் சரியாகச் செய்ய முடியவில்லையே என்று கலங்கினான் லட்சுமணன்.

சரயு நதிக்கரைக்கு ஓடோடிச் சென்று, ஸ்ரீராம் ஸ்ரீராம் என்று ஜபித்தபடியே ஆற்றுக்குள் இறங்கி பிராணத் தியாகம் செய்தான். தகவல் அறிந்த ஸ்ரீராமன், யார் தடுத்தும் கேளாமல் லட்சுமணனைத் தேடி சரயு நதியில் குதித்து, அதன் வெள்ளத்தில் மூழ்கினார். ராமாவதாரம் முடிந்தது.

எமதருமன் தனது கடமையை முடித்துக் கொண்டு ராம- லட்சுமணர்களின் ஆத்மாக்கள் வைகுண்டத்தை அடையவழி செய்தான்.நசிகேதஸ் என்பவன் எமதரும ராஜனை சந்தித்து, அவனோடு பேசி தனது சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டதாக உபநிடதம் கூறுகிறது.
அதுபோலவே, ஸ்ரீராமனும் எமனுடன் உரையாடி, பிறப்பு- இறப்பு, ஆத்ம விடுதலை பற்றிய பல தத்துவங்களைத் தெரிந்துகொண்டார். அடுத்ததாக விஷ்ணுவின் கிருஷ்ண அவதாரத்தில் வேதங்கள், உபநிடதங்கள், சாஸ்திரங்கள் ஆகிய அனைத்து தத்துவங்களையும் அனைவருக்கும் கண்ணன் உபதேசமாக வழங்குவதற்கு, ராமாவதாரத்தில் எமதரும ராஜனோடு உரையாடிய சம்பவமும் உதவியிருக்கலாம்.
அவதார புருஷர்களுக்கே உபதேசம் செய்யும் அளவுக்கு ஞானம் பெற்றவன் எமதருமன். இதற்கான வரலாறும் ஒன்று உண்டு.

பதினாறு வயது நிரம்பிய மார்க்கண்டேயனின் உயிரைக்கவர எமதருமன் சென்றபோது, மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைக் கட்டிக் கொள்கிறான். மார்க்கண்டேயன் மீது எமன் வீசிய பாசக்கயிறு சிவபெருமான் மீதும் விழுந்தது. சிவன் கோபத்துடன் எமனைத் தண்டித்து தடுத்தத்துடன், மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு வயது என்று அருள்புரிந்தார்.

அந்த தருணத்தில் சிவபெருமான் கோபத்தில் காலனை காலால் உதைத்தார் என்ற வரலாறு உண்டு. இதற்கும் ஒரு உட்பொருள் இருந்தது.. நீதியும் நேர்மையும் தவறாமல் சத்தியத்தைக் காக்கும் பொறுப்பேற்ற எமதருமன், அதற்கான மனோபலம் பெறுவதற்காக, ஆதிபராசக்தியைக் குறித்து கடும்தவம் செய்தான். அம்பிகை தோன்றி அருள்புரிந்து அளப்பரிய ஞானத்தை நல்கினாள். ஆதிசக்தியின் திருவடிகள் தன் மார்பின் மீது பட வேண்டும் என்று விரும்பினான் எமன். காலம் வரும்போது அது கைகூடும் எனக்கூறி மறைந்தாள் ஆதிசக்தி. மார்க்கண்டேயனைக் காப்பாற்றியபோது சிவபெருமான், தன் இடது காலால் காலனை உதைத்தார்.  அர்த்தநாரீஸ்வரரான சிவபெருமானின் இடது கால், அன்னை ஆதிபராசக்தியின் காலல்லவா? ஆக, எமன் வேண்டிக்கொண்டபடியே அன்னையின் திருப்பாதங்கள் அவன் மார்பில் பட்டது. ஞானம் வேண்டி எமன் செய்த தவம் பூர்த்தியானது.

பல்வேறு யுகங்களில் எமனும் சில அவதாரங்கள் எடுத்து அருள்புரிந்ததாக புராண வரலாறுகள் உண்டு. மகாபாரத காலத்தில் எமதருமனின் அம்சத்தில் தோன்றியவர்தான் விதுரர். அவர் கூறிய நீதிகளும் வழிகாட்டிய சன்மார்க்க வழிகளும் விதுரநீதி என்ற நூலாக நமக்குக் கிடைத்துள்ளது.

பாண்டவர்களில் மூத்தவரான தருமமும் குந்திதேவிக்கு எமதருமனின் அனுக்ரஹத்தால் பிறந்தவர். எந்த நிலையிலும் தருமம் தவறாது அரசு புரிந்த யுதிஷ்டிரர், எமதருமனின் அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. எமன் என்றதுமே மரணம் என்று பலர் சிந்திக்கின்றனர். பாசக் கயிற்றைப் போட்டு உயிரை எடுத்து நரகத்தில் தள்ளும் கொடிய தேவதையாக நினைத்து பயப்படுகின்றனர்.

ஆசையிலும் பேராசையிலும் மூழ்கி பொன், பொருள், புகழ் ஆகியவற்றை நம்பியே வாழ்பவர்கள் மரணத்துக்கு பயப்படுவார்கள். மரணமில்லாப் பெருவாழ்வு பெறுவதற்கு தவம் செய்பவர்கள், மரணத்துக்கு பயப்படுவதில்லை.
எமன் எனும் தர்மராஜனை அவர்கள் தரிசிக்க விரும்புகிறார்கள்.

சத்தியத்தைக் கடைப்பிடித்து நீதியும் நேர்மையும் தவறாமல் வாழ்பவர்களுக்கு மரண பயம் இருக்காது.

 

You may also like

Translate »