“உயர்ந்த வாழ்வாக எதை கருத்தில் கொள்ளவேண்டும்?’ என்று குருநாதரிடம் சீடன் ஒருவன் கேட்டான். “குற்றமில்லாமல் வாழ்வதே உயரிய ஜீவனம்’ என்றார் அவர். குற்றம் எது? சட்டமும் தர்மமும் மாறுபட்ட பார்வையில் நிர்ணயிக்கும் விஷயமிது. திருடுவது ஒரு குற்றச்செயல். ஒருவன் திருடினான் என்பது காட்சியாலோ, சாட்சியாலோ, ஆவணங்களாலோ நிரூபணமான நிலையில்தான் அச்செயல் புரிந்தவனை குற்றவாளியாகக் கருதுவது சட்டத்தின் பார்வை. தர்மம் இதில் முழுவதுமாக முரண்படுகிறது.
“ஆஹா! இந்தப் பொருள் மிக அழகாக இருக்கிறதே. யாரும் பார்க்காதபோது எடுத்துக்கொள்ளலாமே’ என நினைத்த நிலையிலேயே அவனை குற்றவாளியென முடிவுகட்டிவிடுகிறது தர்மசாஸ்திரம். “நினைத்தலும் செய்தலோடு ஒக்கும்’ என்பது பரிமேலழகர் உரை. இந்த நீதியை நமக்கு உணர்த்துகிறாள் வனபத்ரகாளி.
அகிலமெல்லாம் ஆளுகின்ற மகாசக்தி கொங்கு மண்டலத்தில், தேக்கம்பட்டி கிராமத் தில் “ஸ்ரீவனபத்ரகாளி’ என்ற திருநாமத்துடன் அருளாட்சி செய்கிறாள்!
பிரதான தெய்வம்: ஸ்ரீவனபத்ரகாளி.
இறைவன்: நெல்லீஸ்வரர்.
இறைவி: காந்திமதி அம்மன்.
ஊர்: தேக்கம்பட்டி, நெல்லித்துறை.
தீர்த்தம்: பவானி தீர்த்தம்.
தலவிருட்சம்: தொரத்தி மரம்.
விநாயகர்: ஆற்றங்கரை விநாயகர்.சாகா வரம்பெற்ற மகிஷாசுரனை, அம்பாள் சிவனை வழிபட்டு அழித்ததாகவும், அம்பாள் இந்த வனத்தில் சிவனை நினைத்து தியானம் செய்ததால் வனபத்ரகாளியம்மன் என்று பெயர் பெற்றதாகவும் தலபுராணம் சொல்கிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமை யான இந்த ஆலயம் தற்பொழுது தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையத்திற்கு மேற்கே நீலமலையின் அடிவாரத்தில் தேக்கம் பட்டி கிராமம் உள்ளது. இங்கு வற்றாத ஜீவநதியாக பவானி ஆறு பாய்ந்துசெல் கிறது. இந்த பவானி ஆற்றைக் கடந்து மேற்கே சென்றால் நெல்லிமலை வரும். அந்த குறிப்பிட்ட பகுதிக்கு நெல்லூர், நெல்லிமலை, நெல்லூர்க்காடு, நெல்லித் துறை, பாஞ்சாலிக்காடு, நெல்லூர்பட்டினம், ஆரவல்லிக்கோட்டை என்ற பெயர்கள் இருந்தன. நெல்லித்துறை என்பது சொல்வழக்கில் உள்ளது.
ஆரவல்லி, சூரவல்லி, வீரவல்லி உள்ளிட்ட ஏழு சகோதரிகள் இப்பகுதியை ஆண்டுவந்தனர். அவர்கள் ரெட்டி சமூகத் தைச் சார்ந்தவர்கள். மந்திர தந்திரக் கலையில் நிபுணர்கள். ஆண் ஆதிக்கமே கூடாதென்ற எண்ணம் கொண்ட அந்த ஏழு சகோதரிகளும், அனைத்து அரசர்களையும் சிறைப்பிடித்து வந்து சித்ரவதைப்படுத்தினர். அதைக்கண்ட கிருஷ்ண பகவான் அவர்களை அடக்கு மாறு அஸ்தினாபுரத்தை ஆண்டுவந்த பாண்டவர்களிடம் கூறினார். பீமன் அவர்கள்மீது படையெடுத்துச்சென்று பெரும்பான்மையான படையினரைக் கொன்றபோது, அவனும் மந்திர வசியத்தினால் சிறைபிடிக்கப்பட்டான். கிருஷ்ணர் தனது சக்தியைப் பயன்படுத்தி அவனுக்கு விடுதலைதர வேண்டியதாயிற்று.
இந்த செய்தியை அறிந்த ஆரவல்லி, “பெண்களைப் பார்த்து பயப்படுபவர் ஒரு ஆணா?’ என கேலியாகக் கேட்டு பீமனுக்கு கடிதம் அனுப்பினாள். இதனால் கோபமடைந்த பாண்டவர்கள் அவர்களை சிறைபிடிக்க, தங்களுடைய சகோதரி சங்கவதியின் மகன் அல்லிமுத்துவை அனுப்பினார்கள்.
நெல்லூர்பட்டினத்தில் பிரவேசிக்கும் முன்னர் அல்லிமுத்து அருகிலிருந்த வனத்திற்குச் சென்று, அங்கு சுயம்புவாய் எழுந்தருளிய வனதேவியை வேண்டினான். அந்த தேவி அவனுக்கு சக்திவாய்ந்த வாளையும், சிறிது விபூதியையும் தந்தாள். அவற்றைப் பெற்றுக்கொண்டவன் ஆரவல்லி சகோதரி களிடம் சண்டையிட்டு மண்டியிடச் செய்தான். அவர்கள் அவனிடம், “”நீ பெரிய வீரன் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். எங்கள் மகளான பல்வரிசையை மணந்து கொண்டு, அவளையும் அழைத்துக்கொண்டு உமது நாடு செல்க” என வேண்டிக்கொண்டனர்.
பல்வரிசையின் அழகில் மயங்கிய அல்லி முத்து அவளை மணக்க சம்மதித்தான். அப்போது ஆரவல்லி எலுமிச்சை சாறு கொண்டுவந்து கொடுக்க, அதை வனதேவி கொடுத்த விபூதியைப் பயன்படுத்த மறந்து குடித்துவிட்டான். பல்வரிசைக்கும் அதுபற்றி எதுவும் தெரியாது. அதில் அதிபயங்கரமான மந்திரம் இருந்ததனால் அவன் மரணமடைந்துவிட்டான். இதையறிந்த அர்ஜுன னின் மகன் அபிமன்யு, இந்திரலோகத்திற்குச் சென்று இறந்த உயிரை ஒரு குடுவையில் போட்டு எடுத்துவந்து மீண்டும் அல்லிமுத்து வுக்கு உயிர்கொடுத்துவிட்டான்.
பாண்டவர்கள் வனதேவியிடம் சென்று அவளுடைய ஆசிகளைப் பெற்றுக்கொண்டு ஆரவல்லி சகோதரிகள்மீது மீண்டும் படையெடுக்க, ஒரு சகோதரி கேரளாவுக்கு ஓடிவிட்டாள். மற்றவர்களை சிறைபிடித்து அவர்களது மூக்கை பாண்டவர்கள் அறுத்து விட்டனர். அதுமுதல் அந்த நாட்டில் அமைதி நிலவியது. அவர்களை அழிக்க வனபத்ரகாளி உதவியதால் அன்றுமுதல் வனதேவியை அனைவரும் வழிபடத் தொடங்கினர்.
பல்வரிசை வாலம்மா என பெயர் மாற்றம் செய்துகொண்டு அல்லிமுத்துவை மணந்துகொண்டாள். தேவி வனபத்ரகாளி யம்மன் ஆசியோடு புதுமணத்தம்பதிகள் நீண்டகாலம் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர் என்று தலபுராணம் சொல்கிறது.
வனபத்ரகாளியை மக்கள் வணங்கத் துவங்கியதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அவள் ஆலயத்தின் வடமேற்கு பக்கம் பகாசூரன் கோட்டை இருந்தது. அக்கோட்டையிலிருந்த அசுரன் அனைவரையும் துன்புறுத்தி, தினமும் ஒவ்வொருவரை அழைத்து விழுங்கிவந்தான். ஒருமுறை தங்கள் வீட்டிலிருந்த ஒரே ஒரு மகனை அசுரனுக்கு கொடுக்க வேண்டுமென்ற நிலை வந்தது. இதையறிந்த பீமன் தானே புறப்பட்டுச் சென்றான். பகாசூரனை எப்படி வெட்டினாலும் அவனுக்கு மீண்டும் மீண்டும் உயிர் வந்துகொண்டே இருந்தது. ஆகவே பீமன் வனபத்ரகாளியை வேண்டிக்கொள்ள, அவள் அந்த அசுரனை வெட்டியபின் உடல் பாகங்களின் பக்கத்தை எதிர்திசைகளில் வைத்துவிடுமாறு கூறினாள்.
அப்படியே பீமனும் செய்ய, அசுரன் மடிந்தான். அப்போது பகாசூரன் காளியிடம் தன்னை அந்த கிராமத்து காவல் தெய்வமாக ஆக்குமாறு வேண்டிக்கொள்ள, அவளும் பகாசூரன் விருப்பப்படியே அருள்புரிந்தாள்.
சிறப்பம்சங்கள்
வனபத்ரகாளியம்மன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறாள்.
அமாவாசையன்று ஆற்றங்கரையில் ஏழு கற்களை எடுத்து, அதற்கு விபூதி, பொட்டு வைத்து, முன்னோர்களை நினைத்து படையலிட்டு வழிபாடு செய்துவருவது சிறப்பு.
அம்மனிடம் குழந்தை வரம் வேண்டி, தலவிருட்சமான தொரத்தி மரத்தில் கல்லைக் கட்டி வழிபட்டால் பிரார்த்தனை நிறைவேறுகிறது.
ஆடிமாதம் அன்னையிடம் முறைப்படி அனுமதிபெற்று, 36 அடி நீளமுள்ள திருக் குண்டம் அமைத்து ஆடி மாத முதல் செவ்வாயில் பூச்சாட்டி, இரண்டாவது செவ்வாயில் பூக்குண்டத்தில் இறங்கும் நிகழ்ச்சி (தீ மிதிக்கும் நிகழ்ச்சி) நடைபெறும். மூன்றாவது செவ்வாயில் மறுபூஜை செய்து விழா கொண்டாடப்படும். குண்டம் இறங்கும் நிகழ்ச்சியன்று அம்மனை தரிசிக்க சுமார் இரண்டு லட்சம் பேர் கூடுவது கண்கொள்ளாக் காட்சி.
செய்வினை, பில்லி, சூன்யம், மந்திரம், மாந்திரீகத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருமுறை வந்து அம்மனை மனமுருக வேண்டிக்கொண்டால், அத்தகைய கோளாறு கள் அறவே நீங்குவது பக்தர்கள் அனுபவத்தில் கண்ட உண்மை.
புதிதாக தொழில் தொடங்கவோ, திருமணத்தைப் பற்றியோ அல்லது வேறு ஏதாவது முக்கிய முடிவு எடுக்கவேண்டுமென்றால் சுவாமி முன்பு பூ கேட்பது வழக்கம். சிவப்பு மற்றும் வெள்ளைநிறப் பூக்களை தனித்தனி பொட்டலங்களில் போட்டு அவற்றை அம்பாளின் காலடியில் வைத்து பின் எடுத்துப் பார்க்கும்போது, மனதில் எந்தப் பூ நினைக்கிறோமோ அந்தப் பூ வந்துவிட்டால் அம்பாள் உத்தரவு தந்ததாக ஐதீகம். இது அந்தக்காலம் முதல் இன்றுவரை நடைமுறை யில் உள்ளது.
பத்ரகாளியம்மன் கோவில் என்றாலே மக்கள் மனதில் கிடா வெட்டுவதுதான் நினைவுக்கு வரும். ஆனால் இங்கு அம்மனுக்கு உயிர்பலி தரப்படுவதில்லை. பகாசூரனுக்குதான் வாரத்திற்கு 300 முதல் 400 வரை உயிர்கள் பலியிடப்படுகின்றன.
புதிய வாகனங்கள் வாங்குபவர்கள் வனதேவியிடம் முதல் வழிபாடு செய்வது நடை முறையில் உள்ளது.
அம்மனுக்கு சமர்ப்பிக்கப்படும் எலுமிச்சை மாலையில் பல வியாதிகளை குணப்படுத்துகின்ற அற்புதம் உண்டு.
செவ்வாய், வெள்ளி ராகு காலத்தில் எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவதும் சிறப்பு.
தொடர்ந்து மூன்று அமாவாசைகளில் ஒரு நேரம் விரதமிருந்து, ஒன்பது நெய்தீபமேற்றி செவ்வரளியால் அர்ச்சனை செய்து வழிபட் டால், சொல்லொணா துயரங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு இன்சுகம் பெறுவர்.
கோவில் அமைப்பு
ராஜகோபுரம் இல்லை. வடக்கு பார்த்த நுழைவாயில். கொடிமரம், பலிபீடம் உள்ளது.
சிம்மவாகனம், அதைச் சுற்றி அகல்விளக்குகள். எலுமிச்சை தீபமேற்ற தனிஇடம் ஒதுக்கப் பட்டுள்ளது. விநாயகர், முருகர் சிலைகள் உள்ளன. கருவறையில் வடக்குநோக்கி பரவசமாய் அருள்புரிகிறாள் வனபத்ரகாளி. கோஷ்டத்தில் வைஷ்ணவி, வராஹி, சாமுண்டி, துர்க்கை அருள்புரிகின்றனர். ஸ்தலவிருட்சமான தொரத்தி மரத்தருகே நெல்லீஸ்வரர்- காந்திமதியம்மன் அருள்புரிகிறார்கள். ஆலயத்தின் நேரெதிரே 200 மீட்டர் தொலைவில் பகாசூரன் காவல் தெய்வமாய் அருள்புரிகிறார். அருகில் முனீஸ்வரர் சந்நிதியும், ஆற்றுக்கு செல்லும் வழியில் நாகர் சந்நிதியும், ஆற்றின் கரையோரத்தில் விநாயகர் சந்நிதியும் உள்ளன. இங்கு பவானி ஆறு தெற்கு வடக்காகப் பாய்ந்து கிழக்குநோக்கிச் செல்வது சிறப்பம்சம்.
வாழ்வாங்கு வாழ வளப்படுத்தும் வனபத்ரகாளியை வழிபடுவோம். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வோம்.
காலை 6.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை ஆலயம் திறந்திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு: செயல் அலுவலர், தொலைபேசி: 04254- 222286.
அமைவிடம்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திற்கு மேற்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் ஆலயம்.