Home ஆன்மீக செய்திகள் திருப்பதி பெருமாளின் சிறப்பு பிரசாதம் `லட்டு’ உருவான கதை!

திருப்பதி பெருமாளின் சிறப்பு பிரசாதம் `லட்டு’ உருவான கதை!

by Sarva Mangalam

 

 


திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது ஏழுமலையானும் லட்டுவும்தான். ஏழுமலையானின் அருட்பிரசாதமான  திருப்பதி  லட்டுக்கு அத்தனை சிறப்புகள் உள்ளன. ‘திருப்பதிக்குச் சென்று பெருமாளை தரிசித்துவிட்டு வந்தோம்’ என்று சொன்னதுமே நம்மிடம் கேட்கப்படும் கேள்வி, ‘எத்தனை லட்டு வாங்கிட்டு வந்தீங்க?’ என்பதுதான். ஏழுமலையானுக்கு நிவேதனம் செய்யப்படும் பிரசாதங்கள் வடை, பொங்கல், சர்க்கரைப்பொங்கல்… இப்படி எத்தனையோ உண்டு. அவை அனைத்தையும் தாண்டி அன்றும், இன்றும், என்றும் முதல் இடத்தில் நிற்பதென்னவோ லட்டு மட்டும்தான்.

சரித்திரக் காலம் முதல் பெருமாளுக்கு பல வகையான நைவேத்தியங்கள் படைக்கப்பட்டுவருகின்றன. இரண்டாம் தேவராயர் காலத்தில் நைவேத்தியங்கள் எண்ணிக்கை பலவாகப் பெருகியது. அந்தக் காலகட்டத்தில் அரசவையில் பணிபுரிந்த சேகர மல்லாண்ணன் எனும் அமைச்சர், பெருமாளின் நைவேத்தியத்துக்காகப் பல தானங்களை வழங்கினாராம். அப்போதுதான் `ஸ்ரீவாரி நைவேத்திய சமயம்’ எனும் முறை ஏற்படுத்தப்பட்டது.

அந்தக் காலத்தில் திருமலையில் உணவகங்கள் அவ்வளவாக இல்லை. பிரசாதங்கள்தான் பக்தர்களின் பசியைப் போக்கும் அருமருந்தாக இருந்தன. மேலும், பக்தர்களுக்கு அளிக்கப்படும் பிரசாதம் ‘திருப்பொங்கல்’ என்று அழைக்கப்பட்டது. பின்னரே அதிரசம், அப்பம், வடை, சுய்யம், மனோகரப்பொடி பிரசாதங்கள் தயார் செய்யப்பட்டன.

இவற்றில் வடை தவிர வேறு எதுவும் வெகு நாள்கள் தாங்காது. மற்ற பிரசாதங்கள் கெட்டுப் போய்விடும் நிலையில் அவற்றை பக்தர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல இயலாமல் போனது. இதனால் அதிக  நாள்கள் கெடாமலிருக்கும் வடைக்குத்தான்  அப்போது மவுசு இருந்தது.

இதைக் கவனத்தில் கொண்ட மதராச அரசாங்கம் 1803-ம் ஆண்டிலிருந்து பிரசாதங்களை விற்பனை செய்யத் தொடங்கியது. அன்றிலிருந்து ஸ்ரீவாரி ஆலயத்தில் பிரசாத விற்பனைக் கூடம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது லட்டு பிடிப்பதற்கு முன்னர் உதிரியாக இருக்கும் பூந்தி, இனிப்புப் பிரசாதமாக வழங்கப்பட்டது. அந்த பூந்திதான் லட்டாக  உருப்பெற்றது.

ஏழுமலையானுக்கு பிரசாதங்களைத் தயாரித்து பூஜைக்கு வழங்கியவர் கல்யாண ஐயங்கார் குடும்பத்தினர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் , திருமலையில் லட்டு பிரசாதம் உருவான வராற்றை நம்மிடம்  விளக்கமாகவே பேசினார்கள்.

“லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள்களை `திட்டம்’ என்று அழைப்பார்கள். லட்டை அன்றாடப் பிரசாதமாக்கிய பெருமை அப்போது ஆலயப் பிரசாதங்களைத் தயாரித்து அளித்த கல்யாணம் ஐயங்கார் என்பவரையே சாரும். `கல்யாணம் ஐயங்கார்’ என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்டவரின் இயற்பெயர் ஸ்ரீமான் பூதேரி பத்தங்கி ஸ்ரீனிவாசராகவன்.

இவர், திருமணம் என்று யார் பத்திரிகை கொடுத்தாலும் சரி, அவர்களுக்கு பட்டுப்புடவை, மாங்கல்யம் போன்ற சீர்வரிசை அளித்து ஆசீர்வாதம் செய்துவிட்டு வருவார். இவர் காஞ்சிபுரம் அருகேயுள்ள பூதேரி என்ற கிராமத்திலிருந்து தமது உறவினர்களுடன் திருப்பதியில் தங்கி திருமலை ஏழுமலையானுக்கு கைங்கர்யம் செய்ய தம்மையும் தம் குடும்பத்தையும்  ஈடுபடுத்திக்கொண்டவர். நாள்தோறும் திருமலைக்கு நடந்து படியேறிச் சென்று பெருமாளுக்கு அன்றாடப் பிரசாதங்களைத் தயாரித்து அளிக்கும் திருப்பணியை செய்துவந்தார்.

ஒருநாள் பெரும் செல்வம் படைத்த வியாபாரி ஒருவர், தனது கோரிக்கையை நிறைவேற்றினால், மலை போன்ற பிரமாண்டமான லட்டைத் தயாரித்து பெருமாளின் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அளிப்பதாக வேண்டிக்கொண்டாராம். பெருமாளும் அவருடைய வேண்டுதலை நிறைவேற்றினார். அப்போது உருவானதுதான் லட்டுப் பிரசாதம். பக்தரின் லட்டு வேண்டுகோளைக் கேட்ட கல்யாண ஐயங்கார், அப்போது இருந்த திருமலை தேவஸ்தான அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, மிகப் பிரமாண்ட லட்டைத் தயாரித்து, அதை உடைத்து வழங்குவதைவிட சிறிய லட்டாக அன்றைய தினம் கல்யாண உற்சவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு அளிக்கலாமே என்று யோசனை தெரிவித்தார்.

இதை ஒப்புக்கொண்ட தேவஸ்தானம், அதன்படியே அன்றைய தினம்  கல்யாண உற்சவத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதத்தை அளித்தது. அன்றிலிருந்து சில காலம் கல்யாண உற்சவத்தில் மட்டும் லட்டு அளிக்கும் முறை உருவானது. பின்னர் அதுவே இன்றளவில் அனைத்து சேவைகளுடன்  லட்டு அளிக்கும் முறையாக மாறியது.

இந்தப் பிரசாதங்கள் ஆலயத்தின் உள்புறத்தில் கொலுவிருக்கும் பெருமாளின் அன்னையான வகுளாதேவியின் நேரடிப் பார்வையில் மடப்பள்ளி அறையில் தயாரிக்கப்பட்டது. அங்கு மகனுக்கு தயாரிக்கப்படும் பிரசாதங்களை தாய் வகுளாதேவி மேற்பார்வையிட்டு அனுப்புவதாக ஐதீகம். உண்மைதான்! மகனின் பசி அன்னைக்குத்தானே தெரியும்?  நாளடைவில் லட்டு விற்பனை அதிகரித்ததையொட்டி,  ஆலயத்தின் உள்ளே மட்டுமல்லாமல் வெளிப் பகுதியிலும் லட்டு தயாரிக்கும் அறைகள் ஏற்படுத்தப்பட்டன.

லட்டு தயாரிக்க 51 பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆலய உக்கிராண (பொருள்கள் சேமிக்கும் அறை) அறையிலிருந்து இந்த பொருள்கள் லட்டு தயாரிக்க அளிக்கப்படுகின்றன. 5,100 லட்டுகள் தயாரிக்க 185 கிலோ பசு நெய், 200 கிலோ கடலை மாவு, 400 கிலோ சர்க்கரை, 35 கிலோ முந்திரிப் பருப்பு, 17.5 கிலோ உலர்ந்த திராட்சை, 10 கிலோ கற்கண்டு, 5 கிலோ ஏலக்காய் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, 5,100 லட்டுகள் தயாரிக்க 852.5 கிலோ பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இது, `ஆஸ்தான லட்டு’,  `கல்யாண உத்சவ லட்டு’, `ப்ரோக்த லட்டு’ என்று மூன்று வகைப்படும். இது விசேஷ உற்சவ நாள்களில் மட்டுமே தயாரிக்கப்படும்.

ஆஸ்தான லட்டு: இது முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் அளிக்கப்படும். இதன் எடை 750 கிராம். இந்த லட்டில் குங்குமப்பூ சேர்க்கப்படுவதோடு திட்டத்துக்கு அதிகமான அளவு பருப்பு வகைகள் மற்றும்  நெய் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும்.

கல்யாண உத்சவ லட்டு: இன்றைய விலை 100 ரூபாய்.

புரோக்த லட்டு: இதன் எடை 175 கிராம். இந்த லட்டு  முதலில்  8 அணாவில் விற்கப்பட்டது. பின்பு 2 ரூபாய், 4 ரூபாய் என்று படிப்படியாக ஏறி இன்று இதன் விலை ரூ.50.

முதலில் மிராசுதாரர்கள் லட்டு மட்டுமல்லாமல் மற்ற பிரசாதங்களையும் தயார் செய்தனர். அப்போதைய தேவஸ்தான நிர்வாக அதிகாரி அன்னாராவ், லட்டு தயாரிக்கும் மிராசுதாரர்களுக்கு லட்டையே வருமானமாக அளிக்க உத்தரவிட்டார். அதன்படி 51 லட்டு தயாரித்தால் 6 லட்டு அவர்களுக்குச் சொந்தம். 6 லட்டுகளை அவர்கள் விற்றுக்கொள்ளும் உரிமையும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. இப்படித் தொடங்கிய லட்டு தயாரிக்கும் முறையில் ஒரு நாளைக்கு 1,000 லட்டுகள் தயாரித்த மிராசுதாரர்கள், ஒரு நாளைக்கு லட்சம் லட்டு தயாரிக்கும் நிலைக்கு  உயர்ந்தார்கள்.

இந்தச் சட்டம் 1996-ம் ஆண்டில் மாற்றபட்டது. மிராசு உரிமையை நீக்கிவிட்டு தேவஸ்தானமே லட்டு  தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது. தற்சமயம் தேவஸ்தானம் தற்காலிகப் பணியாளர்களை நியமித்து, அவர்களைக் கொண்டு லட்டு மற்றும் பிற பிரசாதங்களைத் தயாரித்து வருகின்றது. ஆயினும் அந்த நாளைய ருசி இன்றிருக்கும் லட்டுகளில் இருப்பதில்லை என்பதே பக்தர்களின் கருத்து. முன்பு வெகு தூரத்திலிருந்து பயணித்து வரும் யாத்திரிகர்கள், தரிசனம் செய்துவிட்டு வாங்கிச் செல்லும் லட்டுகள், ஊர் சென்று சேரும் வரையில் கெடாமல் இருந்தன. இப்போது அதுவும் காலப்போக்கில் மாறி, சீக்கிரமாக கெட்டுவிடும் நிலை உள்ளது .

காரணம், அதிகாரிகள் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தும் கடலைப் பருப்பு, சர்க்கரைக்குத் தேவையான கரும்பு ஆகியவற்றை தரமாக விளைவித்துப் பயன்படுத்தினர். இப்போதும் தரமான பொருள்களையே லட்டுத் தயாரிப்பில் பயன்படுத்தினாலும்கூட, அந்த ருசி வருவதில்லை என்று அதிகாரிகள் ஆதங்கத்துடன் தெரிவித்தார்கள்.

லட்சக்கணக்கில் லட்டுகளைத் தயாரிக்க முன்புபோல விறகு அடுப்பு சாத்தியமாகாது. ஆகையால், பெரிய காஸ் அடுப்பில் லட்டு பூந்தி சலிக்கப்படுகின்றது. பின்னர், அந்த பூந்தியுடன் சர்க்கரைபாகைக் கலப்பதற்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்போதிருக்கும் விலை ஏற்றத்தை அனுசரித்து முந்திரி, திராட்சை, பாதாம் பருப்புகள் சேர்க்கப்படுவது குறைவு என்பது போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் பக்தி சிரத்தை இப்போது குறைவு என்பதே உண்மை. எது எப்படியோ லட்டு விற்பனை ஒரு நாளைக்கு லட்சங்களைத் தொடுவது மட்டும் குறைவதில்லை என்பது மட்டுமே உண்மை

You may also like

Translate »