441
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர் மன மகிழ்மீற அருளாலே
அந்தரியொடு உடனாரு சங்கரனும் மகிழ்வுற
ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக
மண்டலமும் முனிவோரும் எண் திசையில் உளபேறும்
மஞ்சனமும் அயனாரும் எதிர்காண
மங்கையுடன் அரிதானும் இன்ப முற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா!
புந்தி நிறை அறிவாள! உயர்தோளா !
பொங்கு கடலுடன் நாகம் விண்டுவரை இகல்சாடு
பொன்பரவு கதிர்வீச வடிவேலா
தண்மரள மணிமார்ப ! செம்பொன் எழில் செறிரூப !
தண்தமிழன் மிகுநேய முருகேசா
சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான
தண் சிறுவை தனில்மேவு பெருமாளே !