ஓம் பூர்புவஸ்ஸுவ:’ என்று துவங்கும் காயத்ரி மந்திரம், ‘த்ரயம்பகம் யஜாமஹே’ என்று துவங்கும் ம்ருத்யுஞ்சய மந்திரம் ஆகிய இந்த இரண்டு மந்திரங்களுக்கும் அர்த்தத்தைத் தெரிவிக்கவும்.
.
“ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயான: ப்ரசோதயாத்” என்பது காயத்ரி மந்திரம். ஓங்காரப் பரம்பொருள் ஆன ‘எந்த பரமாத்மா நம்முடைய புத்தியையும், சக்தியையும் தூண்டுகிறாரோ, அந்த அனைத்தையும் படைக்கின்ற பகவானுடைய சிறந்த ஜ்யோதி ஸ்வரூபத்தை விடாமல் தொடர்ந்து தியானிக்கின்றேன்’ என்பது இதன் பொருள். ‘உலகிற்கு ஒளி கொடுக்கும் சூரிய தேவனே, உன்னை விடாது தியானிக்கிறேன். எனக்கு அறிவு கூர்மையையும், மனோ தைரியத்தையும் தந்தருள்வாயாக’ என்று எளிமையாகப் பொருள் கொள்ளலாம்.
“த்ரயம்பகம் யஜாமஹே ஸூகந்திம் புஷ்டிவர்த்தநம் உர்வாருகமிவ பந்தநாந் ம்ருத்யோர்முக்ஷீய மாம்ருதாத்” என்பது பரமேஸ்வரனை பிரார்த்திக்கின்ற மிக உயரிய மந்திரம். ‘நறுமணம் மிக்கவரும், குறைகள் ஏதுமின்றி அத்தனையையும் நிறைவாக்குபவரும் ஆன முக்கண்ணனை போற்றுகின்றேன். பழுத்த வெள்ளரிப்பழமானது
எத்தனை எளிதாக அதனுடைய காம்பிலிருந்து விடுபடுமோ, அதுபோல மரண பயத்திலிருந்து, அதாவது, மரண பயம் அளிக்கின்ற சம்சார பந்தத்திலிருந்து என்னை விடுவிப்பாயாக – ஆனால், மோக்ஷ மார்க்கத்திலிருந்து அகலாதிருக்க அருள்வாயாக’ என்று சர்வேஸ்வரனை பிரார்த்தனை செய்வதே இதன் பொருள்.
மேற்சொன்ன இந்த இரண்டு மந்திரங்களின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொண்டு காலை, மாலை இரு வேளையும் தினசரி ஜபித்து வருபவர்களை வாழ்வில் எந்த துன்பமும் அண்டாது என்பது நிதர்சனமான உண்மை