தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார். பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள்.
எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான். மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை.
சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும். இதுவும் கண்ணன் ஆலிலையை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் ஆகும். ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது.
கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன்மூலம் நிரூபிக்கிறான். ஆலிலையில் படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான். அடே பக்தனே! நீ எதற்கும் கவலைப்படாதே. என்னைப் போலவே நீ குழந்தை உள்ளத்துடன் இருந்தால், உலக வாழ்க்கை என்ற கொடுமையான அலையால் தாக்கப்படமாட்டாய்.
குடும்பம் என்ற சம்சாரக்கடலில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு என்னைப் போல் ஆனந்தமாய் இரு என்கிறான். இதுதான் கண்ணன் ஆலமர இலையில் மிதக்கும் தத்துவம் ஆகும்