Home ஆன்மீக செய்திகள் வாஸ்து என்றால் என்ன? அதை எவ்வளவு தூரம் நம்பலாம்

வாஸ்து என்றால் என்ன? அதை எவ்வளவு தூரம் நம்பலாம்

by Sarva Mangalam


வாஸ்து என்றால் என்ன? அதை எவ்வளவு தூரம் நம்பலாம் என்பதை பற்றி சத்குரு அவர்கள் விரிவாக சொல்வதை தெரிந்து கொள்ளலாம்.

சத்குரு: வாஸ்து என்பது எளிமையான கட்டிடக்கலை வழிகாட்டி. நீங்கள் ஒரு வீடு கட்டினால், அது இந்த அளவுகளில், இத்தனை சதுர அடியில், இத்தனை ஜன்னல்களுடன் இருக்க வேண்டும் என்று கூறும் அடிப்படையான விதிமுறைகள் அடங்கியது.

கட்டிடக் கலைக்கும், கட்டிடங்களைக் கட்டுவதற்கு இருக்கும் அடிப்படை வழிகாட்டுதல்களைத்தான் நாம் வாஸ்து என்றுஅழைக்கிறோம். இந்த விதிமுறைகள் இடத்துக்கு இடம் மாறுபடும். வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமான வாஸ்துக்கள் இருக்கின்றன.

மலைப் பகுதிகளில் ஒரு விதமான வாஸ்துவும்,
நிலப்பகுதிகளில் வேறுவிதமான வாஸ்துவும்,
கடற்கரையோரப் பகுதிகளில் மற்றொரு விதமான வாஸ்துவும் இருக்கின்றன. அந்தந்த பகுதிகளில் இருக்கும் குறிப்பிட்ட தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட வகையான கட்டிடக்கலை வழிகாட்டிகளை உருவாக்கினார்கள்

கடந்த சில ஆண்டுகளில் யாரோ சிலர் இதை ஒரு மிகப் பெரிய வியாபாரமாக்கி நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். கடந்த 10 ஆண்டுகளில், இந்த வியாபாரம் அளவிட முடியாத அளவு பெரிதாகி விட்டது. இது உங்கள் ஆரோக்கியத்தை, வர்த்தகத்தை எல்லாம் சரி செய்கிறது. விட்டால் உங்களை நிலாவுக்குக் கூட அழைத்துச் செல்லும் என்று சொல்கிறார்கள். இதில் அத்தனை முட்டாள்தனமான செயல்கள் நடைபெறுகின்றன.

அடிப்படையில், பயம்தான் மக்களைப் பிடித்து ஆட்டிப் படைக்கிறது. அதனால்தான், இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. நீங்கள் பயத்தில் இருக்கும் போது, உங்களிடம் எதை வேண்டுமானாலும் சொல்லி நம்ப வைக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

என் வீட்டின் அளவும், வடிவமும் நான் யார் என்பதை முடிவு செய்யும் என்றால், அதை நினைத்து நான் வெட்கப்பட வேண்டும், இல்லையா? மனிதத் தன்மையின் தரத்தை உயிரற்ற பொருட்கள் நிர்ணயிக்க வேண்டுமா அல்லது நாம் பயன்படுத்தும் பொருட்களின் தரத்தை மனிதத் தன்மை நிர்ணயிக்க வேண்டுமா என்பதை நீங்களே சொல்லுங்கள்.

மனிதத் தன்மைதான் அதை நிர்ணயிக்க வேண்டும், இல்லையா? உங்களைச் சுற்றியிருக்கும் பொருட்களின் வடிவத்துக்காகவும் அளவுக்காகவும் உங்களுடைய தனிப்பட்ட பண்புகளை கைவிட்டு விட்டால், அது மிகவும் துரதிருஷ்டவசமானது.

வெறும் கற்களும் கண்ணாடிகளும் எல்லாவற்றையும் சரிசெய்து விடும் என்று மக்கள் நம்புகிறார்கள். தங்கள் சக்தியையும் அறிவையும் இது போன்றவற்றில் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

You may also like

Translate »