Home ஆன்மீக செய்திகள் ஆனைமுகனின் ஆறுபடைவீடு

ஆனைமுகனின் ஆறுபடைவீடு

by Sarva Mangalam

 

ஆனைமுகனின் ஆறுபடைவீடு இதை முழுவதும் படியுங்கள் விநாயக பெருமானின் அருளை பெறுங்கள்

ஆனைமுகத்தான் விநாயகருக்குரிய ஆறுபடைவீட்டுக் கோவில்கள் இருக்கின்றன.

முதல் படைவீடு திருவண்ணாமலை. கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு பெயர் பெற்ற இங்கு, “அல்லம் போக்கும் விநாயகர்’ வீற்றிருக்கிறார். வணங்குபவர்களின் அல்லலைக் களைவதில் இவர் நிகரற்றவராகத் திகழ்கிறார்.

இரண்டாம் படைவீடாக இருப்பது விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில். காசிக்குச் சமமாகத் திகழும் இக்கோவிலில் “ஆழத்துப்பிள்ளையார்’ என்ற பெயரில் இவர் காட்சி தருகிறார். பெயருக்கேற்ப பள்ளத்திற்குள் படியிறங்கி இவரைத் தரிசனம் செய்ய வேண்டும். (காளஹஸ்தியிலும் இவ்வாறு ஒரு சந்நிதி உள்ளது) தனியாக கொடிமரம் இவருக்கு அமைந்திருப்பதும் தனிச்சிறப்பு. இவரை வழிபாடு செய்தபின் படியேறி மேலேறுவது போல், வாழ்வில் மேன்மைகளைத் தந்தருள்பவர் இப்பெருமான்.
வள்ளலாக விளங்குகிறார்:

மூன்றாவது படைவீடு திருக்கடையூர் அபிராமி கோவில். இங்கு “கள்ளவாரணப்பிள்ளையார்’ என்ற திருநாமம் கொண்டுள் ளார். இவரை வழிபடுவோர் நீண்ட ஆயுளும்,ஆரோக்கியமும் பெற்று மகிழ்வர். அபிராமிப்பட்டர் அந்தாதியில் இவரைப் போற்றி வணங்குகிறார்.

நான்காவது படைவீடு மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், சித்தி விநாயகராக தன்னை நாடி வருபவர்களுக்கு வாழ்வில் சித்தியை (வெற்றியை) அருளும் வள்ளலாக விளங்குகிறார். அம்மன் சன்னதிக்கு செல்லும் வழியிலுள்ள ஊஞ்சல் மண்டபம் அருகில் இவர் உள்ளார். “மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்பதற்கேற்ப,அளவில் சிறியவர் என்றாலும், சக்தி வாய்ந்தவராக உள்ளார். (பிற்காலத்தில் முக்குறுணிப் பிள்ளையார் சன்னிதி உருவானதும் இவரது சந்நிதியில் வழிபாடு குறைந்து விட்டது) மாணிக்கவாசகர், பாண்டியநாட்டு படைக்காக குதிரைவாங்கச் செல்லும் போது இவரை வழிபாடு செய்துவிட்டே கிளம்பினார்.
ஐந்தாம் படைவீடாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிறப்பிடம் பெறுகிறார். சிவலிங்கத்தை வலக்கையில் தாங்கி, சிவபூஜை செய்யும் நிலையில் இப்பெருமான் கேட்ட வரம் தரும் கற்பகவிருட்சமாகத் திகழ்கிறார்.

ஆறாம் படைவீடு பொல்லாப் பிள்ளையார் கோவில் கொண்டிருக்கும் திருநாரையூர் (கடலூர் மாவட்டம்)ஆகும். பொள்ளுதல் என்றால் செதுக்குதல் என்பது பொருள். உளியால் செதுக்கப்படாமல் தானாகத் தோன்றிய சுயம்பு மூர்த்தியாவார். காலப்போக்கில் இப்பெயர் மருவி பொல்லாப்பிள்ளையார் என்று மாறிவிட்டது.

கிரகதோஷம் போக்குபவர் :

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நன்மையோ தீமையோ அவற்றை நிர்ணயிப்பது கிரகங்களே. நவக்கிரக சுழற்சியினால் வாழ்வில் ஏற்படும் சாதக, பாதகங்களைக் கட்டுப்படுத்தி நம்மை காத்தருள்பவர் நவக்கிரக விநாயகர்.விநாயகரின் பலவிதமான அவதாரங்களில் நவக்கிரக விநாயகர் தனிச்சிறப்புடையது. ஒன்பது கிரகங்களையும் இவர் தன்னுள் அடக்கி இருப்பதால், சக்தி மிக்கவராக விளங்குகிறார். இவர் சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக்கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும்,புதனை வலது கீழக்கையிலும், வியாழனைத் தலையிலும், வெள்ளியை இடதுகீழ்க்கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சியளிக்கிறார். நவக்கிரக விநாயகரை வழிபாடு செய்வதால் நவக்கிரகதோஷம் நீங்கி நன்மை உண்டாகும்.
கூப்பிடு விநாயகர் :

காட்டிக் கொடுத்த விநாயகர் என்றதும் தப்புக்கணக்கு போடாதீர்கள். தொலைந்த பொருள் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுத்தவர் இப்பிள்ளையார். ஒருமுறை, தேவாரம்பாடிய மூவரில் ஒருவரான சுந்தரர், தன் நண்பரான சேரமான் பெருமாள் நாயனாரிடம் பொன்னும் பொருளும் ஏராளமாகப் பெற்றுக் கொண்டு, ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். சுந்தரருடன் திருவிளையாடல் புரிய திருவுளம் கொண்டார் சிவன். சிவகணங்களை வேடர் வடிவில் அவரிடம் அனுப்பி, அவரிடமிருந்த பொன்னையும்,பொருளையும் பறித்து மறைத்து வைக்கும்படி ஆணையிட்டார். திருமுருகன்பூண்டி என்ற தலத்துக்கு சுந்தரர் சென்றபோது, பொருள்களை வேடர்களிடம் இழந்தார். இதுபற்றி இறைவனிடம் முறையிட்டார். அங்கிருந்த விநாயகர் சுந்தரரை பெயர் சொல்லி கூப்பிட்டு, பொருளை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டி அருளினார். அதனால் இவ்விநாயகருக்கு “கூப்பிடு விநாயகர்’ என்ற சிறப்புப் பெயர் உண்டானது. கையில் இருக்கும் பொருள்களை தவறுதலாகவோ அல்லது தீயவர்களாலோ இழந்தவர்கள் கூப்பிடு விநாயகரை வழிபட்டால், அவர் அருளால் தொலைந்த பொருள் மீண்டும் வந்து சேரும். கோவை மாவட்டத்தில் திருமுருகன்பூண்டி உள்ளது.
விக்னேஷ் விளக்கம்:

“விக்னம்’ என்றால் “தடை’. எனவே தான், தடைகளை நீக்கும் விநாயகரை “விக்னேஷ்’ என்பர். ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் முன், அது தடையின்றி நடக்க,விநாயகரை வணங்கி அவருடைய அருளை வேண்டுகிறோம். லலிதா சகஸ்ர நாமத்தில் “மஹாகணேச நிர்பின்ன விக்னயந்த்ர ப்ரஹர்ஷிதா’ என்ற நாமா வருகிறது.

அதாவது, அம்பிகை பண்டாசுரனை வதம் செய்யும்போது, விநாயகர் பெரும் உதவி செய்தார் என்பது இதன் பொருள். தனது (விநாயக) யந்திரத்தினால் பண்டாசுரனும், அவனுடைய சகாக்களும் விடுத்த அத்தனை பாணங்களையும் வீழ்த்தி தேவியை வெற்றி பெறச் செய்தார் விநாயகர்.இதனால் தேவி மகிழ்ச்சி அடைந்தாள். வாழ்வில் குறுக்கிடும் தடைகள் அடியோடு நீங்க விநாயகப் பெருமானை வணங்க வேண்டும்.

ஐந்து ஐந்து ஐந்து :

இறைவன் செய்யும் ஐந்தொழில்கள் “பஞ்சகிருத்யங்கள்’ எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன. விநாயகர் நான்குகரங்களுடன், தும்பிக்கை என்னும் ஐந்தாவது கரத்தையும் கொண்டிருக்கிறார். அதனால், ஐங்கரன் என்று அழைக்கப்படுகிறார். விநாயகர் தன் நான்கு கரங்களில் அங்குசம்,பாசம், எழுத்தாணி, கொழுக்கட்டை ஆகியவையும், ஐந்தாவது கரமாகிய தும்பிக்கையில் அமுத கலசமும் வைத்திருப்பார். எழுத்தாணி உலகை சிருஷ்டி செய்வதையும்,கொழுக்கட்டை காத்தல் தொழிலையும், அங்குசம் அழித்தலையும், பாசம் மறைத்தலையும், தும்பிக்கையில் ஏந்தியிருக்கும் அமுதகலசம் அருளலையும் காட்டுகின்ற குறியீடுகளாகும்.

பிடித்து வைத்தால் பிள்ளையார்:

பிடித்து வைத்தால் பிள்ளையார் குழந்தை முதல் முதியோர் வரை விநாயகரை வணங்கி எல்லா இடையூறுகளையும் களைய பிரார்த்திக்கின்றனர். அவரை எந்த உருவத்திலும் வழிபடலாம். மஞ்சள் பொடியில் பிடித்து வைத்தாலும், களிமண்ணில் செய்தாலும், மரத்தில் செய்தாலும் அந்த உருவத்தில் நமக்கு அருள்பாலிப்பார். இதைத்தான் ‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்பர்.
மூஞ்சுறு வாகனம்:

யானை வடிவம் கொண்ட விநாயகர், மூஞ்சூறு மீது அமர்ந்த ரகசியத்தை கேளுங்கள்.ஒரு பெரிய உருவம், ஒரு சிறிய விலங்கின் மீது ஏறி அமர முடியுமா? நம்பமுடியவில்லையே! என்று தான் விநாயகரின் வாகனத்தைப் பார்த்தவுடன் நினைப்பார்கள். இதில் நுண்ணிய அர்த்தம் உள்ளது. அணுவுக்கு அணுவாகவும், பெரிதுக்கும் பெரிதானவனுமாக கடவுள் இருக்கிறார் என்பதே இதன் தத்துவம். அவரை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதையும் இது உணர்த்துகிறது. பார்வையில்லாத ஐவர் ஒரு யானையைத் தொட்டுப்பார்த்தனர். ஒருவர் யானையின் வயிறைத் தொட்டு, அது சுவர் போல் இருப்பதாகச் சொன்னார். இன்னொருவர் அதன் வாலைத் தொட்டு கயிறு போல் இருக்கிறதென்றார். மற்றொருவர் காலைத் தொட்டு தூண் போல் உள்ளதென்றார். ஒருவர் துதிக்கையைத் தொட்டு உலக்கை போல் இருக்கிறதென்றார். ஒருவர் காதைத் தொட்டு முறம் போல் உள்ளதென்றார். இதில் எதுவுமே உண்மையில்லை. அதுபோல், கடவுளையும் இன்னாரென வரையறுத்துச் சொல்ல முடியாது. அவரது குணநலன்களை அறிந்து கொள்ள முடியாது என்பதே இதன் உள்ளர்த்தம்.

கணேசினி:

பிள்ளையாரைப் பெண்வடிவில் காணும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது. பெண்மைக் கோலம் கொண்ட பிள்ளையாரை கணேசினி என்றும், கஜானனி என்றும் அழைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில், தூண் ஒன்றில், ஒரு காலை ஊன்றியும், மற்றொரு காலை மடக்கியும் நர்த்தனம் ஆடும் இவர்,பெண் வடிவத்துடன் நிற்கிறார். மதுரை மீனாட்சியம்மன் கோயில், சுவாமி சந்நிதி நுழைவு வாசலில், கணேசினியின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அவரது கால்கள் புலிக்கால்களாக அமைந்திருப்பதால் வியாக்ரபாத கணேசினி எனப்படுகிறார்.

விநாயகரைக் கரைப்பது ஏன்?

கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரின் திருமேனியை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். பெரும்பாலும் விநாயகர் சதுர்த்தி நாளில் வழிபாட்டிற்கு மண்ணால் அமைத்த விநாயகரையே வழிபாடு செய்ய வேண்டும். பூஜித்த பின் இவ்விநாயகரை ஆறு, குளம், ஏரிகளில் கரைத்துவிடலாம். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.

அப்பா பிள்ளை :

தாயைப் போல பிள்ளை என்பது தான் உலக வழக்கு. ஆனால், தன் தந்தை சிவபெருமானின் தோற்றத்தை விநாயகர் ஒத்திருப்பார். இருவரும் வேறு வேறு அல்லர்.சிவபெருமானின் மற்றொரு வடிவமே விநாயகப்பெருமான் என்பர்.

1) சிவபெருமானைப் போலவே விநாயகப்பெருமான் சிவந்த மேனியை உடையவர்
2) சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பது போல ஹேரம்ப கணபதிக்கு 5 தலைகள்
3) இருவருக்கும் மூன்று கண்கள்
4)தலையில் இருவரும் மூன்றாம் பிறையணிந்திருப்பர்
5)இருவரும் பாம்பை ஆபரணமாக அணிந்திருப்பர்
6)தந்தையைப் போல இவரும் ஐந்தொழில்களைச் செய்வர்
7)இருவரும் நடனக்கோலத்தில் காட்சி தருவர்(நடராஜர், நர்த்தன கணபதி)
8)பார்வதி சிவனின் இடப்பாகத்தில் இருப்பது போல், வல்லபை விநாயகரின் இடப்பக்கம் இருப்பாள்.ஐந்து சுவாமி பூஜைபிள்ளையார்,சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில்விநாயகப்பெருமானை ஐந்துதெய்வங்களுக்கும் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.

சீனா முதல் ஆஸ்திரேலியா வரை !

உலகத்துக்குப் பதில், அம்மை அப்பனை சுற்றிய விநாயகருக்கு, உலகம் முழுதும் வழிபாடுகளும், விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.
சீனா: சீனாவிலிருந்து இந்தியாவுக்கு, குப்தர் காலத்தில் வருகை புரிந்த பாஹியான் தான், புத்தர் சிலையை சீனாவுக்கு கொண்டு சென்றவர் என்று கூறப்படுகிறது. இயந்திர வடிவில் வழிபடுகின்ற விநாயகர் சிலைக்கு, குவன் ஹீபியின் எனப் பெயர் உள்ளது. மலைசரிவுகளில் விநாயகர் வடிவம் காணப்படுகின்றது. துன்ஹவாங் குங்க்சியான் முதலிய இடங்களில் உள்ள குடவரை கோவில்களில் விநாயகர் உருவங்கள் உள்ளன.

ஜப்பான்: சீனா வழியே தான் விநாயகர் வழிபாடு ஜப்பானுக்கு சென்றுள்ளதாம். “கோல்சோடைஷி’ என்பவர் கொண்டு போனதாய் கூறுகிறார்கள். “கான்கிட்டன் ஹாயக்ஷட’என்று, விநாயகருக்கு ஜப்பானில் பெயர்கள் உள்ளன. யோகநிலையில் விநாயகர் டுன் ஹவாங், குன்ஹசீன் நகரங்களில் உள்ள விநாயகர் சிலைகள், 1400 ஆண்டுகளுக்குமுற்பட்டது என கூறப்படுகிறது.
தாய்லாந்து: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள இந்துக்கோவிலில், கையில் எழுத்தாணியுடன் ஐந்தாம் நூற்றாண்டு விநாயகர் காணப்படுகிறார். நான்முகவிநாயகரும், அந்நாட்டில் பிரபலம். கம்போடியா: கம்போடியாவில் சோக்குஸ் (சந்தனகிரி) விநாயகர், மூன்று கண்கள், பூநூல், ஒற்றைக்கொம்பு, கமண்டலம் ஆகியவற்றுடன், “பிராசுஷேஸ்’ என்னும் பெயரில் இருக்கிறார். விநாயகர் சிலையில் தந்தமும், சுவடியும் இருந்தால் “வித்யபிரதாதா’ என்று பெயர்.

எகிப்து: எகிப்து நாட்டில் விநாயகர் கையில், சாவி இருக்கிறது. ரோம் நாட்டு ஜேன்ஸ் கடவுளின் ஒரு முகம், யானை வடிவத்துடன் கையில் சாவியுடன் காணப்படுகிறது .

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில், விக்டோரியா மாநிலத்தில் வக்ரதுண்ட விநாயகர் கோவிலும், வடக்கு பகுதியில் சித்திவிநாயகர் கோவிலும், குயீன்ஸ்லாந்தில் செல்வவிநாயகர் கோவிலும், தெற்கு ஆஸ்திரேலியாவில் கணேசர் கோவிலும் உள்ளன.விக்டோரியா மாநிலத்தில் உள்ள பேசின் என்னும் மெல்போர்ன் புறநகர்ப் பகுதியில், தென்னிந்திய மரபில், வக்ரதுண்ட விநாயகர் கோவில் உள்ளது. ஆஸ்திரேலியா அரசு 1987ல் உருவான இந்து சங்கத்துக்கு, நிலத்தை குத்தகைக்கு இனாமாக வழங்கிய இடத்தில், மாமல்லபுரத்திலிருந்து 1993ல் மூன்று சிற்பிகளை வரவழைத்து இக்கோவிலை வடிவமைத்துள்ளனர். அடிலாய்ட் நகரில், 1985ல் இந்துசங்கம் நிறுவி,விநாயகர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. 1986ல், விநாயகருக்கு மட்டுமே முதலில் உருவான இக்கோவில், அப்போதைய ஆஸ்திரேலியாவில் இரண்டாவது கோவிலாகும்.

விநாயகருக்கு 21 வகை இலை அர்ச்சனை:

விநாயகர் சதுர்த்தியன்று, 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது சிறந்தது எனப்படுகிறது.
1. முல்லை இலை: அறம் வளரும்
2. கரிசலாங்கண்ணி: இவ்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
3. விஸ்வம்: இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
4. அருகம்புல்: அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
5. இலந்தை இலை: கல்வியில் மேன்மையை அடை யலாம்.
6. ஊமத்தை: பெருந்தன்மை கைவரப் பெறும்.
7. வன்னி: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கும்.
8. அரளி இலை: எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.
9. எருக்கம் இலை: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்பு கிடைக்கும்.
10. நாயுருவி: முகப் பொலிவும், அழகும் கூடும்.
11. கண்டங்கத்திரி: வீரமும், தைரியமும் கிடைக்கும்.
12. மருதம்: மகப்பேறு கிடைக்கும்.
13. விஷ்ணுகிராந்தி: நுண்ணறிவு கைவரும்.
14. மாதுளை: பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்கும்.
15. தேவதாரு: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்.
16. மருக்கொழுந்து: இல்லற வாழ்வு சுகம் பெறும்.
17. அரசம்: உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்.
18. ஜாதிமல்லி: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கும்.
19. தாழம்: செல்வச் செழிப்பு கிடைக்கும்.
20. அகத்தி: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை: நல்ல கணவன்- மனைவி அமையப் பெறும்.

“ஓம்கார நாயகர்’:

“விநாயகர்’- என்ற பெயரிலேயே, வினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பவர் என்ற பொருள் உள்ளது. வினைகளைக் களைபவர், வினைகளை அண்டவிடாமல் விரட்டிக் காத்து ரட்சிப்பவர் என்றும் பொருள் கொள்ளலாம். வாழ்க்கையில் ஏற்படும் இடர்பாடுகளை – வினைகளை – சோகங்களை – தன்னை நாடி வரும் பக்தர்களின் வினைகளைத் துவம்சம் செய்து, அவர்களுக்கு நிம்மதியை அளிப்பவர் என்பதே, விநாயகர் என்பதன் பொருள். தவிர விநாயகரின் உருவமே ஒரு விசித்திரத் தோற்றம் கொண்டது.யானையின் முகத்தை உடையவர். பொன்னிறத் தோற்றத்துடன் கூடிய மனித உடலில், தர்ப்பரி நூல் மார்பு, பேழை வயிறு. (மிகப்பெரிய பூதம் போன்ற வயிறு). துதிக்கையுடன் சேர்த்து ஐந்து கைகள். செந்தூரம் பூசிய முகம். சிலம்பு அணிந்த இரு கால்கள். இதுபோன்ற அனைத்து உருவங்களும் சேர்ந்ததே விநாயகப் பெருமானின் மொத்த வடிவம். விநாயகரின் உருவமே, ஒரு ஐக்கியத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. அனைத்து நாதங்களுக்கும் முன்னோடியாத் திகழ்வது “ஓம்கார ஒலி’ என்றால்,அநத “ஓம்காரமாய்’ திகழ்வது விநாயகர் என்றால் அது மிகையில்லை. எனவே தான், விநாயகப் பெருமானை “ஓம்கார நாயகர்’ என்றும் அழைக்கிறோம்.

விநாயகர் ஜாதகம் :

சனிபகவான் ஒரு முறை, விநாயகரைப் பார்த்து, உங்களை நாளை வந்து பிடிக்க வேண்டும்; வருகிறேன் என்றார். சனீஸ்வரனே… எனக்கும் கணேசபுரியில் வேலைப்பளு அதிகம்; உமக்கும் அதிக வேலை இருக்கும். என்னைப் பிடிக்க வரும் நீங்கள், “என் முதுகில், நாளைக்கு வருகிறேன் என்று எழுதி விட்டுப் போங்கள்’ என்று முதுகைக் காட்டினார். நாளை மறவாமல் வருகிறேன் என்று எழுதினார். சனீஸ்வரன் போய்விட்டு மறு நாள் வந்த போது, முதுகைக் காட்டி என்ன எழுதி உள்ளீர் என்று கேட்க,சனீஸ்வரன் அவரிடம் அடி பணிந்தார். “என்னை வணங்குபவர்களைப் பிடித்தால், உமக்கும் இது போல சங்கடம் ஏற்படும்’ என்றார்.

பல வடிவங்களில் மகா கணபதியை அலங்கரிக்கலாம்:

விநாயகரை 16 வடிவங்களில் அலங்கரிக்கலாம். இந்த அமைப்பில் வணங்குவதால் மாறுபட்ட பலன்கள் நமக்கு கிடைக்கும்.
பாலகணபதி: மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும் கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவர். இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும்.
தருண கணபதி: பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றை தந்தம், தெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டு கைகளில் ஏந்தி, சூரியோதய கால ஆகாயத்தின் செந்நிற மேனியுடைய இளைஞனாகக் காட்சி தருபவர். இவரை வழிபடுவதால் முகக்கலை உண்டாகும்.

பக்த கணபதி: தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தினாலான பாயாசம் நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை தம் நான்கு கைகளில் ஏந்தி நிலா ஒளியை ஒத்த வெண்மை நிற மேனியுடன் காட்சியளிப்பவர். இவரை வழிபடுவதால் இறை வழிபாடு உபாசனை நன்கு அமையும்.

வீர கணபதி: தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி, ரவுத்ராகாரமாக வீராவேசத்தில் செந்நிற மேனியுடன் விளங்கும் ரூபத்தை உடையவர். இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.
சக்தி கணபதி: பச்சைநிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர். பாசம், அங்குசம் ஏந்தியிருப்பவர். பயத்தை நீக்குபவர். செந்தூர வண்ணம் கொண்டவர். இவரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் ஏற்படும்.

துவிஜ கணபதி: இரண்டு யானை முகங்களுடன் இடது கையில் சுவடி, அட்சயமாலையும், தண்டமும், கமண்டலமும் ஏந்தியவர். வெண்ணிற மேனி கொண்டவர். இவரை வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும்.

சித்தி கணபதி: பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பாசம், அங்கும் ஆகியவற்றைக் ஏந்தி ஆற்றலைக் குறிக்கும். சித்தி சமேதராகவும் பசும்பென் நிறமேனியானவரான இவருக்குப் பிங்கள கணபதி என்ற பெயர் வந்தது. வழிபடுவதால் சகல காரியம் சித்தியாகும்.

உச்சிஷ்ட கணபதி: வீணை, அட்சமாலை, குவளை மலர், மாதுளம் பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றையும் ஏந்தியுள்ளார். கருநீல வண்ணமேனியுடைய இவரை வழிபடுவதால் வாழ்க்கை உயர்வு, பதவிகளை பெறலாம்.

விக்னராஜ கணபதி: சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடாரி, பாசம், அங்குசம், ரம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தி ஸ்வர்ண நிறமேனியுடன் பிரகாசமாக விளங்குபவர். இவரை வழிபடுவதால் விவசாயம் விருத்தியாகும்.

க்ஷிப்ர கணபதி: கற்பகக்கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களிலும் ரத்தினங்களை பதித்த கும்பத்தை தனது துதிக்கையிலும் ஏந்திய செம்பருத்தி மலரைப் போன்ற சிவந்த மேனியுடைய இவர் சீக்கிரமாக அருள்புரிபவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும்.

ஹேரம்ப கணபதி: அபய ஹஸ்தங்களுடன் (கரங்கள்), பாசம், அங்குசம், தந்தம், அட்சமாலை, கோடாரி, இரும்பினாலான வலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தி, பத்துகைகளும், ஐந்து முகங்களும் அமைந்து வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சி தருகிறார்.

நேபாள நாட்டில் காணப்படும் இவர் திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் உயரே நோக்கிய ஐந்தாவது முகத்துடனும் விளங்குகிறார். இவரை வழிபடுவதால் விளையாட்டு, வித்தைகள் இவற்றில் புகழ் பெறுவார்கள்.

லட்சுமி கணபதி: பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்திதன் இருபுறமும் இரு தேவிகளை அணைத்துக் கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள்புரிபவர். இவரை வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும்.

மகா கணபதி: பிறை சூடி, மூன்று கண்களுடன் தாமரை மலர் ஏந்தி தன் சக்தி நாயகராகிய வல்லபையை அணைத்த வண்ணம் கைகளில் மாதுளம்பழம், கதை, கரும்பு, கரம்,பாசம், நெய்தல், புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும் துதிக்கையில் ரத்தின கவசத்தையும் ஏந்தி சிகப்புநிற மேனியாய் விளங்குபவர். இவரை வழிபடுவதால் தொழில் விருத்தியாகும்.

புவனேச கணபதி: விநாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால் அசுரனது சக்தி ஒடுங்கி சிறு மூஞ்சூறு வடிவத்துடன் ஓடினான் கஜமுகாசுரன். அவன் மீது பாய்ந்து ஏறிஅவனை தன் வாகனமாக்கிக் கொண்ட இவர் செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி தருகிறார். இவரால்விவகாரம், வியாஜ்ஜியம் வெற்றியாகும்.

நிருத்த கணபதி: மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்திய மோதிரம் ஜொலிக்கும் ஆறாவது கையான துடக்கையை உயர்த்தி ஒற்றைக்காலில் ஆனந்த நடனமாடும் இவர் நர்த்தன கணபதியாகக் காட்சி தருகிறார். இவரை வழிபடுவதால் சங்கீதம், சாஸ்திரங்களில் சிறப்பு பெறுவார்கள்.

ஊர்த்துவ கணபதி: பொன்னிற மேனியுடைய இவர் எட்டு கைகள் கொண்டவர். பச்சை நிற மேனியுடன் விளங்கும் தேவியை தன் இடதுபுறம் அணைத்துக் கொண்டு வீற்றிருக்கிறார். இவரை வழிபடுவதால் இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும்.

You might also like:

You may also like

Translate »