பொதுவாக ஒரு குரு தனது சீடனைத் தினந்தோரும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மந்திரத்தை ஜபம் செய்யும்படி உபதேசிக்கிறார். ஜபத்தை எண்ணிக் கணக்கிடுவதை விரல்களின் மூலமாகச் செய்யலாம்: அல்லது ஒரு ஜப மாலையைக் கொண்டு செய்யலாம்: அல்லது மனதிற்குள்ளேயே செய்யலாம். ஜபமாலை சாதகனின் மனதை ஒரு முகப்படுத்துவதற்கு உதவி செய்கிறது.
ருத்ராக்ஷம், சந்தனம், இலந்தை தாமரைக்கிழங்கு, ஸ்படிகம், பவழம், தாமரை மணி, துளசிமாலை போன்றவற்றால் ஆன பலவித ஜப மாலைகள் இருக்கின்றன.
ஒரு சிலர் மனித அல்லது விலங்குகளின் எழும்புகளான ஜபமாலைகளையும் உபயோகிக்கிறார்கள். {அமானுஷ்ய சக்தி விரும்புகிறவர்களுக்கு மனித அல்லது விலங்குகளின் எழும்புகளை உபயோகிப்பார்கள்.}
ஜபிக்கும் மந்திரத்தைப் பொருத்தே உபயோகிக்கும் ஜபமாலையும் அமைகிறது. ஜபமாலை 108, அல்லது 54 மணிகளைக் கொண்டதாகும்.
ஒருவர் உபயோகிக்கும் ஜபமாலையை அவரைத் தவிர வேறு எவரும் உபயோகிக்க கூடாது.
மேலும் சாதகன் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தையே ஒரு மாலையின் மூலம் ஜபிக்க வேண்டும். ஒரே மாலையில் மூலம் வெவ்வேறு மந்திரங்களை ஜபிக்க கூடாது.
ஒரு மந்திரத்தை ஒருவன் ஒரு லட்சம் முறை ஜபித்தால் அந்த மந்திரம் சேதனமாக {உயிருள்ளதாக} ஆகிவிடுகிறது. ஜபம் செய்த மந்திரத்தை 10. ஒரு பங்கு யாகமாகவும், அர்க்யமாகவும் செய்ய அந்த குறிப்பிட்ட மந்திரம் முழு பலத்தை பெற்று விடும்
.
நல்ல ஊக்கத்தோடு ஒருவன் ஒரு மந்திரத்தை சரியான உச்சரிப்பில் ஒரு முறை ஜபித்தாலும் அவனது மனம் தூய்மையடைந்துவிடுகிறது என்று ஜப விதானம் என்ற நூல் கூறுகிறது.
இதை பற்றிய பல விஷயங்களை முன்பே கூறிவிட்டபடியால் அடுத்த விஷயத்திற்கு வருவோம்.
இடங்கள்..
* இறைவனைப் பற்றி நினைக்க விரும்பாதவர்கள் இருக்கும் இடங்கள்,
* எங்கு புனிதமான மனிதர்கள் கௌரவிக்கப்படுவதில்லையோ,
* எந்த இடத்தில் மனிதர்கள் ஈகையிலும் எளிய வாழ்க்கையிலும் விருப்பமில்லாதவர்களாக இருக்கிறார்களோ,
அந்த இடங்கள் ஜபம் பழகுவதற்கு ஏற்றவையல்ல. மாறாக, அவை பிரதிகூலமான பலனை தருபவை.
நேரம்
தினந்தோரும் நாம் குறிப்பிட்ட நேரங்களிலேயே ஜபம் செய்ய வேண்டும். அப்படி செய்து வந்தோமானால் நம் மனதிலும் அந்த நேரங்களில் ஜபம் செய்வதற்குரிய தகுந்த மாற்றங்களும் ஏற்படுகின்றன. நமது மனதுக்கும், உடலுக்குமிடையே ஒரு சரியான நல்ல இணைப்பு ஏற்படுகிறது.
அது எது போன்றதென்றால், நாம் தினந்தோரும் ஒரு குறிப்பிட்ட நேரத்திலேயே உணவு உட்கொள்ளுகிறோமென்றால், அந்த நேரம் வந்தவுடன் நமக்குப் பசியும் தானாகவே தோன்றுகிறதல்லவா? ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் தூங்கச் செல்கிறோமென்றால், அந்த நேரம் வந்தவுடன் நமக்குத் தூக்கமும் வந்துவிடுகிறதல்லவா? அது போன்றுதான் நாம் குறிப்பிட்ட நேரங்களில் ஜபம் செய்வதென்பதுமாகும். அந்த நேரம் வந்தவுடன் நமது மனமும் ஜபம் செய்ய நம்மைத் தூண்டும்.
இவ்விதம் குறிப்பிட்ட நேரங்களில் தவறாமல் ஜபம் பழகுவதால் – நமது மனதின் ஆற்றல்கள் வளர்ந்து வலுப்பெற்று – நாம் நல்ல ஆன்மீக முன்னேற்றமும் காண முடிகிறது.
விடியற்காலை, நண்பகல், மாலை சந்தியாகாலம், நடு இரவு ஆகியவை ஜபம் செய்வதற்குரிய மிகவும் விசேஷமான காலங்கள்.
இவற்றைத் தவிர பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி, ஏகாதசி திதிகளோடு கூடிய நாட்கள், மற்ற விஷேச பூஜை தினங்கள் மற்றும் கிரஹண காலங்கள், ஆகியவை ஜபம் செய்வதற்கு மிகவும் சிறந்தவையாகும்.
உச்சரிப்பு
புனித மந்திரமானது தெளிவாக உச்சரிக்கப்பட வேண்டும். இதை நான் ஏற்கனவே கூறியுள்ளேன். ஒரு எழுத்து மாறினாலும் அல்லது த்வனியில் {சத்தம்} ஏற்றம்,குறைவு இருந்தாலும் பிரதினுகூலம் {எதிர்மறை} பலன்கள் தந்துவிடும்.
நாம் ஜபம் செய்யும்போது நமது உடல், மனம், ஆன்மா, நினைவு முழுவதும் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்தே செயல்பட வேண்டும்.
பெரும்பாலும் நமது வாய் மந்திரத்தை ஜபம் செய்கிறது. ஆனால் நமது மனமோ அதில் ஈடுபாடில்லாமல் தனித்து நிற்கிறது. அவை இரண்டும் இணைந்தாலும், நமது ஆன்மா {நினைவு முழுவதும்} அதில் விருப்பமில்லாமல் ஒதுங்கிவிடுகிறது. ஆனால் இவை மூன்றும் இணைந்தாலோ மந்திரம் நமது உள்ளத்தின் ஆழமான அடுக்குகளிலிருந்து எழும்புவதை நாம் அறியலாம். அந்தச் சமயத்தில் புனித மந்திரத்தால் ஏற்படும் தெய்வீக அதிர்வுகள் நமது உடலில் ஏற்படுத்தும் அது பேரானந்த நிலையை நமக்குள் தோற்றுவிக்கும். வார்த்தையால் விவரிக்க முடியாத பேரின்ப நிலை நமக்கு கிடைக்கும்.