மேலே காணப்படும் யந்திரத்தை குபேர யந்திரம் என்கிறார்கள். இது குபேரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தினால் அனைத்தையும் இழந்து நின்றபோது லஷ்மி தேவியை வணங்கி பெற்றதாம். ஆகவே நாமும் அந்த எளிய குபேர பூஜையை செய்ய நமக்கு நல்லது கிட்டும் .
அந்த பூஜை முறையை எனக்கு நல்ல பண்டிதம் பெற்றுள்ள ஒரு பண்டிதர் கூறினார். அதை அனைவருக்கும் பலன் அளிக்கும் வகைக்கு வெளியிட்டு உள்ளேன். அந்த எளிய பூஜையை ஒருவருக்கு ஏற்பட்டுள்ள கடன்கள் தீரவும், செல்வம் பெருகவும் மட்டுமே செய்ய வேண்டும் என்பதல்ல. வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை அதை செய்ய வீட்டில் பணப் தட்டுப்பாடு இருக்காது என்பது உண்மையாம். இந்த பூஜைக்கு கஷ்டமான சொற்களைக் கொண்ட சம்ஸ்கிருத சுலோகம் கூற வேண்டும் என்பது முக்கியம் இல்லை. ஸ்லோகங்களே தெரியாதவர்களும் செய்யக் கூடிய மிக எளிய பூஜை இது. இதற்கு முக்கியம் நம்பிக்கை, செய்யும் முறை, செய்வதில் த்யானம் என்பவை மட்டுமே.
இந்த பூஜையை துவக்கும் முன் நமக்குத் தேவை ஒரு ஒரே மாதிரியான நாணயங்கள். அவரவர் வசதிக்கு ஏற்ப நாணயங்களை எடுத்து வைத்துக் கொள்ளலாம். ஐந்து ரூபாய், ஒரு ரூபாய் என்ற மதிப்பு அதிகமான நாணயம் மட்டும் உபயோகிக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல எட்டணா, நாலணா என எதுவாக இருந்தாலும் நம் உபயோகத்தில் உள்ள நாணையமாக அது இருக்க வேண்டும். அதுவே முக்கியம்.
நாம் பூஜையை துவக்கும் முன் முதலில் எந்த நாளில் பூஜை செய்ய உள்ளோம் என்பதை அதாவது வெள்ளிக் கிழமையா அல்லது பௌர்ணமி தினத்திலா என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். அதன்படி நாம் முடிவு செய்து உள்ள வெள்ளிக் கிழமைகளிலும் பௌர்ணமி போன்ற தினங்களிலும் காலை குளித்துவிட்டு கீழே உள்ளபடி கோலத்தை பூஜை அறையில் கடவுளுக்கு முன்னால் போட வேண்டும்.
எண்களை வெள்ளை அரிசி மாவினாலும், கட்டங்களை நல்ல சிவப்பு குங்குமத்தினாலும், வார்த்தைகளை (ஸ்ரீ) மஞ்சள் பொடியினாலும் கீழே உள்ளபடிப் போட வேண்டும்.
பூஜை செய்பவரால் தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் அவருடைய வீட்டில் உள்ள வாரிசுகள் அல்லது கணவர் அதை தொடர்ந்து செய்யலாம். ஆனால் அந்த நபர் அதே குடும்பத்தினராக இருக்க வேண்டும். ஒரு ரூபாய் நாணயம் உபயோகிக்க உள்ளீர்கள் என்றால் அனைத்திலும் ஒரு ரூபாய் நாணயம் உபயோகிக்க வேண்டும். அது போல எந்த நாணயம் பயன்படுத்துகிறீர்களோ அதே போன்ற நாணயத்தை ஒன்பது நாட்களும் பயன்படுத்த வேண்டும். அதாவது ஒரே மாதிரியான எண்பத்தி ஒரு நாணயத்தை முதலில் சேர்த்து வைத்துக் கொண்டே பூஜையை துவக்க வேண்டும்.
காலை குளித்துவிட்டு இந்த யந்திரத்தை பூஜை அறையில் மேலே கூறப்பட்டு உள்ளபடி தம் கைப்பட போட வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும்தாம் ஏற்கனவே சேர்த்து வைத்துள்ள நாணயத்தை வைத்து தொடர்ந்து ஒன்பது தினங்கள் – அதாவது வெள்ளிக் கிழமை என்றால் தொடர்ந்து ஒன்பது வெள்ளிக் கிழமை என – பூஜிக்க வேண்டும். ஒன்பது வெள்ளிக் கிழமைகள் அல்லது ஒன்பது பௌர்ணமி என ஏதாவது குறிப்பிட்ட நாளில் துவக்கி, அதே தினங்களில் ஒன்பது நாட்கள் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும். அந்த எண்களின் பக்கத்தில், எழுத்துக்கள் அழியாமல் இருக்குமாறு பார்த்துக் கொண்டு அந்த நாணயங்களை கட்டத்துக்குள் வைக்க வேண்டும். கீழே உள்ள மாதிரிப் படத்தைப் பார்க்கவும்.
குபேர யந்திரக் கோலம் போட்டு நாணயங்களையும் அதில் வைத்து முடித்ததும் யந்திரத்தின் முன் ஒரு சிறிய விளக்கு ஏற்றி வைத்து பூஜையை துவக்க வேண்டும். பூஜையில் கூற வேண்டிய மந்திரம் என்ன தெரியுமா? மிகவும் சுலபமாகக் கூற முடியும் சுலோகம் அது! ‘ தாயே, மகாலஷ்மி, என்னுடைய கடன்கள் விரைவில் தீர வேண்டும், தாயே மகாலஷ்மி எனக்கு வர வேண்டிய பணம் விரைவில் வர வேண்டும், தாயே மகாலஷ்மி எனக்கு நிறைய லாபம் வர வேண்டும், இப்படியாக எந்த பணப் பிரச்சனைக்காக வேண்டுகிறீர்களோ அதை கூறி விட்டு ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள நாணயத்தின் மீதும் பூக்களை போட வேண்டும். அப்படி பூக்களைப் போடும்போது எழுத்துக்கள் அழிந்து விடாமல் இருக்குமாறு கட்டத்தில் வைத்துள்ள நாணயத்தின் மீதே பூக்களை போட வேண்டும். படத்தைப் பார்க்கவும்.
அப்படி ஒன்பது முறை வேண்டிக்கொண்டு ஒவ்வொரு கட்டத்திலும் பூவை வைத்தப் பின் யந்திரத்துக்கு கற்பூரம் காட்டியப் பின் அந்த கோலத்தை வணங்கிவிட்டு பூஜையை முடித்து விடலாம். ஆக பூஜையில் நாம் கூற வேண்டியது மந்திரம் அல்ல, அது நம்முடைய பக்திபூர்வமான கோரிக்கைதான். வேறு சுலோகம் தெரியும் என்றால் கற்பூரம் காட்டும் முன்னால் அதை கூறிவிட்டு கற்பூரம் காட்டலாம். ஆனால் இந்த பூஜைக்கு வேறு சுலோகம் கூற வேண்டும் என்பது அவசியம் இல்லை. அப்படி சுலோகங்களைக் கூறினால் பலன் விரைவில் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால் பூஜைக்கு தேவை நம்பிக்கையும் மேலே கூறப்பட்டு உள்ள த்யான மந்திரமும் மட்டுமே .
பூஜை முடிந்தப் பின் கோலத்தை உடனே அழித்து விடக்கூடாது. மறுநாள்தான் அதை ஒரு துணியினால் துடைத்து எடுக்க வேண்டும். மறுநாள்வரை அந்த கோலம் நாணயத்துடன் அப்படியே இருக்க வேண்டும். யந்திரத்தின் மீது நேரடியாக விளக்குமாற்றால் பெருக்கக் கூடாது. துணியினால் அதை அழித்தப் பின்னரே பெருக்கலாம். கோலத்தை துடைக்கும் முன்னால் அந்த ஒன்பது நாணயங்களையும் எடுத்து தனியாக வைத்து விட வேண்டும். ஒன்பது நாட்களும் உபயோகிக்கும் எண்பத்தி ஒரு நாணயங்களையும் பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை எந்த காரணத்தைக் கொண்டும் வேறு வகைக்கு செலவு செய்யக் கூடாது. சில்லறை வேண்டும் என்பதற்காக அதை மாற்றி வைத்துக் கொள்ளக் கூடாது. அது லஷ்மி தேவிக்கு தரப்படும் பூஜிக்கப்பட்ட காணிக்கை பணம் ஆகும்.
அதன் பின் அன்று மாலைக்குள் ஒன்பது சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு,பழம் தர வேண்டும். வீட்டிற்கு வரும்வகையில் சுமங்கலிகள் கிடைக்கவில்லை எனில் ஆலயத்தில் சென்று அங்குள்ள ஏதாவது ஒன்பது சுமங்கலிப் பெண்மணிகளுக்கோ அல்லது திருமணம் ஆகாத பெண்ணுக்கும் கூட வெற்றிலைப் பாக்கு ,பழம் தரலாம். அவர்களும் கிடைக்கவில்லை என்றால் லஷ்மியின் சன்னதியில் அதை அவர் முன் வைத்துவிட்டு வரலாம்.
பூஜை முடிந்த ஒன்பதாம் நாளன்று கண்டிப்பாக பூஜை செய்தவர் ஏதாவது ஒரு லஷ்மியின் ஆலயத்துக்குச் சென்று தம்முடைய அதே பிரச்சனையைக் கூறி அவளை அதை களையுமாறு வேண்டிக் கொண்டு வர வேண்டும். தனி லஷ்மி ஆலயம் இல்லை என்றாலும் கவலை இல்லை. வேறு எந்த ஆலயத்துக்காவது சென்று லஷ்மியின் சன்னதிக்கு சென்று வேண்டுதலை செய்தப் பின் ஒன்பது நாட்களும் பூஜை செய்து வைத்த எண்பத்தி ஒரு நாணயங்களையும் லஷ்மி தேவியின் உண்டியலில் போட வேண்டும். அதைப் போடும்
முன்னால் தான் அவளுக்கு செலுத்தும் அந்த காணிக்கையைப் போல தனக்கும் பல மடங்கு செல்வம் தர வேண்டும் என லஷ்மி தேவியை மனமார வேண்டிக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் பூஜை முடிந்தது. அடுத்த பூஜையை மீண்டும் எப்போது வேண்டுமானாலும் துவக்கலாம். சாதாரணமாக பூஜை செய்து முடியும் முன்னரே பலன் கிடைக்கும் என்கிறார்கள். ஆகவே வேண்டிய பலன் கிடைத்து விட்டாலும் ஒன்பது நாட்கள் அந்த பூஜையை செய்து முடிக்காமல் விடக்கூடாது. அதுவே பிரார்த்தனை செய்யும் முறை.
இந்த பூஜையை குறிப்பிட்ட காரணத்துக்காக மட்டுமே செய்ய வேண்டும் என்பதல்ல. வசதி உள்ளவர்கள் எந்த பிரச்சனைக்கும் அல்லாமல் தொடர்ந்து குறிப்பிட்ட தினத்தில் பக்தியுடன் செய்து வந்தால் வீட்டில் அமைதி நிலவும். பணப் பிரச்சனை இருக்காது. செல்வம் நிலைக்கும். அப்படி பொதுவாக செய்யும் பூஜையின்போது நாம் கூற வேண்டிய த்யான சுலோகம் ” அம்மா, மகாலஷ்மித் தாயே , நீ எங்களுடைய வீட்டில் நிரந்தரமாகத் தங்கி எங்களைக் காத்தருள வேண்டும் ” என்பதே.