தப்பு செய்தால்… அண்ணாமலையார் நிச்சயமாக தண்டனை தருவார். இதற்கு அருணாசல புராணத்தில் எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. சில உதாரணங்கள் அற்புதம் வாய்ந்தவை. அவை குறித்து விரிவாக பார்க்கலாம்.
திருவண்ணாமலை தலம் சிவபெருமானே விரும்பி வந்து அமர்ந்துள்ள தலமாகும். அங்குள்ள மலையை வெறும் கல்லும், மண்ணும், மரமுமாக பார்க்காதீர்கள். அந்த மலைதான் சிவபெருமான். இதை சிவபெருமானே பலருக்கு பல தடவை உணர்த்தி உள்ளார்.
உலகில் வேறு எந்த ஒரு மலைக்கும் இந்த சிறப்பு கிடையாது. ஈசன் உறைந்து இருப்பதாக கூறப்படும் இமயமலைக்கு கூட திருவண்ணாமலைக்கு நிகரான மகத்துவங்கள் இல்லை. எனவேதான் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்தும் அருள் ஒளி வீசி பக்தர்களை அழைத்து அரவணைக்கும் மலையாக திருவண்ணாமலை திகழ்ந்து கொண்டிருக்கிறது.
திருவண்ணாமலைக்கு செல்பவர்களில் பலர் நல்லது செய்கிறார்கள். சிவனடியார்களுக்கு தானம் செய்கிறார்கள். புண்ணியத்தை சேகரித்துக் கொள்கிறார்கள். ஆனால் சிலர் தெரிந்தே தவறு செய்கிறார்கள். சிவன் சொத்து குலம் நாசம் என்று சொல்வார்கள். என்றாலும் ஈசனுக்கு உரியதை தங்களுக்கு உரியதாக நினைத்து மனம் துணிந்து அதர்மமாக செயல்படுகிறார்கள்.
நீங்கள் திருவண்ணாமலையில் நல்லது செய்தால் அண்ணாமலையார் உங்களை அன்போடு அரும் மழையில் நனையச் செய்து, தமது காலடி நிழலில் ஓய்வு எடுக்கச் செய்யும் வகையில் ஆசி வழங்குவார். தப்பு செய்தாலோ… நிச்சயமாக தண்டனை தருவார். இதற்கு அருணாசல புராணத்தில் எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. சில உதாரணங்கள் அற்புதம் வாய்ந்தவை.
காசியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தவன் பிரதத்த மன்னன். இவனது பெயரை கேட்டாலே மற்ற நாட்டு மன்னர்கள் அலறினார்கள். அந்த அளவுக்கு அவன் படைபலம் மிக்கவனாக இருந்தான். ஒரு தடவை அவன் தென்நாடு நோக்கி யாத்திரை வந்தான். நிறைய ஆலயங்களுக்கு சென்றுவிட்டு திருவண்ணா மலை தலத்துக்கு வந்தான். அண்ணாமலை யாரை பார்த்ததும் அவன் மனம் அமைதி அடைந்தது. திருவண்ணாமலையில் தங்கியிருந்து விதம் விதமாக மலர்களை சமர்ப்பித்து அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் வழிபட்டு வந்தான்.
ஒருநாள் அவன் அண்ணாமலையாரை வழிபட சென்றபோது ஆலயத்தில் பாட்டுபாடி ஆடும் இளம் தாசிப்பெண் ஒருத்தியும் வந்திருந்தாள். இனிமையான குரலில் அண்ணாமலையாரை புகழ்ந்து அவள் பாடிய பாடல் அனைவரையும் சொக்க வைத்தது. பிரதத்த மன்னனும் சொக்கி போனான். அந்த தாசிப் பெண்ணின் அழகும், அறிவும் பிரதத்த மன்னனின் மனதை பாடாய் படுத்தியது. அவளை தனது அந்தபுரத்தில் ஒருத்தியாக வைத்துக்கொள்ள அவன் ஆசைப்பட்டான். அந்த பெண்ணிடம் சென்று, “என்னோடு நீ காசிக்கு வந்துவிடு. உன்னை ராணி மாதிரி வைத்துக் கொள்கிறேன்” என்றான்.
அண்ணாமலையாருக்கு பணிவிடை செய்யும் என்னை அழைப்பது நியாயமல்ல என்று அந்த பெண் மறுத்தாள். என்றாலும் அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல மன்னன் முயற்சி செய்தான். அப்போது அண்ணாமலையார் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை மன்னனுக்கு அளித்தார். பிரதத்த மன்னனின் முகம் குரங்கு முகம்போல் மாறிப் போனது. ஆலயத்துக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் மன்னனை பார்த்து கேலி செய்தனர்.
செய்வதறியாது திகைத்து போன மன்னன் தனது தவறை உணர்ந்தான். அண்ணாமலையாருக்கு பணிவிடை செய்யும் பெண்ணை கவர முயன்றதுதான் தன் முக மாற்றத்துக்கு காரணம் என்பது தெரிந்து துடித்தான். அண்ணாமலையாருக்கு சொந்தமான எந்த பொருளையும் திருவண்ணாமலையில் இருந்து எடுத்து செல்ல முடியாது என்ற உண்மையை அறிந்து கொண்டான்.
தனது தவறுக்கு பிராயசித்தம் தேட முடிவு செய்தான். மகான்களிடம் சென்று நடந்ததை கூறி, என்ன செய்தால் ஈசன் என்னை மன்னிப்பார் என்று கேட்டான். அவனுக்கு வழிபாடு வழிவகைகளை மகான்கள் சொல்லி கொடுத்தனர். அதன்படி தனது யானை படை, குதிரை படை அத்தனையையும் அவன் அண்ணாமலையார் கோவிலுக்கு ஒப்படைத்தான்.
அவனது தேர் நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த தேரையும் அண்ணாமலையாருக்கு கொடுத்தான். பிறகு அண்ணாமலையாரே கதி என்று கோவிலிலேயே கிடந்தான். இடைவிடாமல் அண்ணாமலையாரை வணங்கினான். தினமும் காலையில் குளித்து முடித்துவிட்டு அண்ணாமலை யாருக்கு மலர்மாலைகள் சாத்தி வழிபட்டான். அவனது உண்மையான பக்தியையும், வழிபாடுகளையும் கண்டு சிவபெருமான் இரக்கம் கொண்டார். மன்னனுக்கு நேரில் காட்சி கொடுத்தார். அதோடு அவனது குரங்கு முகத்தை மாற்றி பழைய நிலைக்கு கொண்டு வந்தார்.
அண்ணாமலையாரின் இந்த திருவிளையாடலால் மனம் நெகிழ்ந்த பிரதத்த மன்னன் அனைத்து பொருட்களையும் திருவண்ணாமலை ஆலயத்துக்கு காணிக்கை ஆக்கிவிட்டு காசிக்கு புறப்பட்டு சென்றான். அன்று முதல் திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு சொந்தமான எந்த ஒரு பொருளை யார் களவாடினாலும் அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும் என்ற பயம் எல்லோரது மனதிலும் நிலை கொண்டது. திருவண்ணாமலை ஆலயத்துக்குள் தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எமலோகத்துக்கு போய் அக்கினி குழியில் விழுந்து அவஸ்தை படுவார்கள் என்பது உலகுக்கு தெரிய வந்தது.
அதுமட்டுமின்றி இருள் நிறைந்த 28 கோடி நரகங்களிலும் விழுந்து கிடப்பார்கள். அவர்களுக்கு மறுபிறவி கிடைக்கும்போது பூமியில் புழுவாய் பிறப்பார்கள். அவர்களது தவறுகளுக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும் இத்தகைய தண்டனைதான் கிடைக்கும் என்று சைவ எல்லப்ப நாவலர் எழுதிய அருணாசல புராணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
திருவண்ணா மலை ஆலயத்தில் திருட வேண்டும் என்று மனதால் நினைத்தாலே போதுமாம், அவர்களை மரணம் விடாது துரத்தும். நிழல் போல தொடரும். திருவண்ணா மலைக்கு வரும் சிவ பக்தர்களுடைய பொருட்களை திருடினால் அவர்களுக்கு அந்த கணத்திலேயே தண்டனை உண்டு என்றும் அருணாசல புராணத்தில் எழுதப்பட்டுள்ளது.
சில சமயம் அண்ணாமலையார் மீது மிகுந்த பற்று கொண்டவர்கள் கூட தவறு செய்வதுண்டு. அவர்களுக்கும் தண்டனை கொடுக்க அண்ணாமலையார் தவறியதில்லை. அதற்கும் ஒரு கதை இருக்கிறது.
புளகாதிபன் என்று ஒரு அசுரன் இருந்தான். அவனுக்கு நினைத்த நேரத்தில் நினைத்தபடி உருவம் எடுக்கும் சக்தி இருந்தது. ஒருநாள் அவன் புனுகுப் பூனையாக வடிவம் எடுத்தான்.திருவண்ணாமலை மலை மீது பூனை வடிவில் அவன் உலவினான். அப்போது மலை முழுக்க அந்த பூனையில் இருந்து புனுகு சிதறியது.
புனுகின் வாசனையால் அண்ணாமலை முழுவதும் வாசனை யாக மாறியது.
இதன் காரணமாக அண்ணா மலையாரின் அருளை புளகாதிபன் அசுரன் பெற்றான். இதனால் அவனுக்கு கூடுதல் பலம் கிடைத்தது. அந்த பலம் அவனுக்குள் ஆணவத்தை யும், அகந்தையை யும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் அவன் திருவண்ணா மலையில் இருந்த முனிவர் களையும், மகான் களையும் மிகவும் கஷ்டப் படுத்தினான். அவனது தொல்லை தாங்காமல் சிவனடியார்கள் கதறினார்கள்.
ஒருநாள் அந்த சிவனடியார்கள் ஈசனிடம் புளகாதிபன் அசுரன் செய்யும் தொல்லைகளை சொல்லி அழுதனர். இதனால் அண்ணாமலையார் இந்த பிரச்சினையை தீர்க்க முடிவு செய்தார்.
அருணாசல மலையில் புளகாதிபன் அசுரன் புனுகு பூனையாக அலைந்தபோது நிறைய புனுகை சிதற வைத்து வாசனை ஏற்படுத்தியதால் அவனை எளிதில் அழிக்க முடியாது. எனவே அவனுக்கு மோட்சம் கொடுத்து விடுகிறேன் என்று அண்ணாமலையார் தெரிவித்தார். புளகாதிபனை அழைத்த அண்ணாமலையார், “அசுரனே உனது பிறவி முடிந்தது. உனக்கு மோட்சம் அளிக்க உள்ளேன். எனவே உனது உயிரை விட்டுவிடு” என்றார். அதை கேட்ட அசுரன் ஒரே ஒரு வேண்டுகோளை அண்ணாமலையாரிடம் தெரிவித்தான். பூனைகளிடம் இருந்து கிடைக்கும் புனுகை அணிந்து அனைவருக்கும் அருள்புரிய வேண்டும். அதோடு உங்களுக்கு “புனுகணி ஈசன்” என்ற பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
அண்ணாமலையார் அவனது கோரிக்கையை ஏற்றார். இதையடுத்து அந்த அசுரன் தனது உயிரை விட்டு அண்ணா மலையாரின் திருவடிகளை சென்று அடைந்தான். இதன் மூலம் தனக்கு பணிவிடை செய்பவர்கள் அசுரனாக இருந்தாலும் அவர்களுக்கு ஈசன் மோட்சம் அளிப்பது தெரிய வருகிறது.
அதுமட்டுல்ல திருவண்ணாமலையில் தெரிந்தோ, தெரியாமலோ செய்கின்ற சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட அண்ணாமலையாரின் அருள் ஆசி கிடைக்கும். ஒரு தடவை திருவண்ணாமலை ஆலய பலிபீடத்தில் இருந்த நைவேத்தியத்தை ஒரு காக்கை எடுத்து உண்டது. அப்போது அந்த காக்கை தனது சிறகுகளை மிக வேகமாக அடித்தது.
இதன் காரணமாக பலிபீடத்தில் இருந்த அழுக்குகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதை பார்த்த அண்ணாமலையார் மகிழ்ச்சி அடைந்தார். பலிபீடத்தை சுத்தப்படுத்திய காக்கைக்கு இந்திர பதவி வழங்கி அருள் புரிந்தார்.
மற்றொரு தடவை ஒரு சிலந்தி வலை பின்னியது. அதை பார்த்த அண்ணாமலையார் நமக்கு அந்த சிலந்தி ஆடை தயாரிப்பதாக நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். உடனே அந்த சிலந்தியை அரசனாக பிறக்க செய்து ஆசி வழங்கினார். அதுபோல ஒரு தடவை பெருச்சாளிக்கு மோட்சம் அண்ணாமலையார் வழங்கி அருள் புரிந்தார்.
திருவண்ணாமலையை வலம் வந்தாலே நம்மை பிடித்த பாவங்கள், தோஷங்கள் உடனடியாக விலகி விடும். இது திருவண்ணாமலை தலத்தில் எப்போது சிவபெருமான் அடிமுடி காண முடியாத அளவுக்கு அருள்பாலித்து மலையாக அமர்ந்தாரோ அன்று முதல் நடந்து வருகிறது. விஷ்ணு, பிரம்மா, சூரியன், சந்திரன், எண் வசுக்கள் உள்பட பலர் திருவண்ணாமலைக்கு வந்து தங்கள் பாவத்தை நிவர்த்தி செய்து இருக்கிறார்கள்.