Home அகங்காரம் வெந்து சாம்பலாகும் அகங்காரம் வெந்து சாம்பலாகும்

அகங்காரம் வெந்து சாம்பலாகும்

by Sarva Mangalam

ஒரு வீட்டை வாடகைக்கு விடவேண்டுமென்றால் உடைசல். விரிசல்களைப் பூசி வெள்ளையடித்து அதன் பிறகு தான் மனிதர்களை குடி அமர்த்துகிறோம். சாதாரண மனிதர்களை குடிவை

ப்பதற்கே இத்தனை பிரயத்தனமென்றால் சர்வ வல்லமை படைத்த இறைவனை நம் உள்ளத்தில் குடிவைக்க நமக்குள் இருக்கும் எத்தனை மாசுகளை நாம் துடைத்தெறிய வேண்டும்? அதற்கு நாம் எவ்வளவு அரும்பாடுபட்டு உழைக்க வேண்டும் என்பதை உணரும்போது பெரும்மலைப்பாக இருக்கிறது.

நம் அனைத்து தீய செயல்களுக்கும், நம் தவறான நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் நம் மனமே மூல காரணமாக இருக்கிறது, ஒரு மீன் வியாபாரி இருந்தான், வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பும் போது பெரும்மழை பிடித்துக் கொண்டதால் வழியில் இருந்த அவன் பூக்கார நண்பன் வீட்டில் இரவு தங்கினான், அன்று இரவு முழுக்க அவனுக்கு உறக்கம் வரவில்லை ஏன்? மீன் நாற்றத்திலேயே உறங்கிப்பழக்கப்பட்டவனுக்கு பூவாசம் பெரும் தொல்லையாக இருந்தது,அதேபோன்றுதான் நம் மனம் முடைநாற்றம் வீசும் எண்ணங்களுக்குஉள்ளேயே முடங்கிக் கிடப்பதனால் பக்திப் படியேறி ஞானரதத்தில் பயணம் செய்ய முடியாமல் தட்டுத் தடுமாறி தரங்கெட்டுக் கிடக்கிறோம்,

இல்லையே? நான் அப்படி இல்லையே? நான் தினசரி பூஜை செய்கிறேன், தியானம் செய்கிறேன் அனைத்து விரதங்களையும் தவறாமல் கடைபிடிக்கிறேன், ஆனாலும் ஞானரதப் பயணம் எனக்குக் கிடைக்கவில்லையே? துன்பத்திலே அல்லவா துவண்டு கிடக்கிறேன்? தோல்வியில்அல்லவா துடிதுடித்து சாகின்றேன்? என்று சிலர் முணுமுணுப்பது நமக்குக் கேட்கிறது,

அவர்களைப் பார்த்து ஒன்று கேட்கிறேன், உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் உங்கள் விரதமும். பூஜையும்பகவானை நோக்கியா? பகட்டான வாழ்வை நோக்கியா? நிச்சயமாக நாம் வெளிப் பொருள் வேண்டியே வேள்விகள் செய்கிறோம், ஒரு விவசாயி இரவு முழுவதும் கரும்புத் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சினான்,விடிந்தபின் தோட்டத்தைப் பார்த்த விவசாயி பதைத்து போனான்,காரணம் இரவு முழுவதும் கஷ்டப்பட்டு இரைத்து பாய்ச்சிய தண்ணீர் தோட்டத்திற்குள் துளிகூட இல்லை, எலி ஒன்று தோண்டிய வளையால் வாய்க்கால் வழி உடைந்து வெற்று நிலத்திற்கு நீரெல்லாம் போய்விட்டது, புகழ். வெற்றி. பொருள் ஆகியவற்றில் கருத்தூன்றி பக்தன் செய்யும் அனைத்து விதமான ஈஸ்வர ஆராதனை ஒரு பலனும் இல்லாமல் எலி வளைத் தண்ணீராகத் தான் முடியும்,

இப்படிப்பட்ட பூஜையும்.பிரார்த்தனையும் ஆயுள் முழுக்க செய்தாலும் புறப்பட்ட இடத்திலேயே நகரவே நகராமல் நடந்து கொண்டிருப்போம், குழந்தை தாயிடம் ஆடை கேட்கிறதா? அணிகலன்கள் கேட்கிறதா? ஆனாலும் தாய் அவைகளை குழந்தைக்குத் தராமலா இருக்கிறாள், தாய்க்குத் தெரியும் தன் குழந்தைக்கு எதை எப்போது கொடுக்க வேண்டுமென்று, நாம் விவரம் புரியாமல் வெய்யில் காலத்தில் கம்பளியும். பனிக்காலத்தில்ஜஸ்கிரிமும் கேட்டால் எந்தத் தாய்தான் தருவாள்? தாயை விட சாலப்பரிவு உடையவன் இறைவன், அவனிடம் உன்னை முழுவதுமாகஒப்படைத்து விடு, உன் குறைகளை நிறையாக்குவது அவன் வேலை,அவனை மட்டுமே அடைய அழுவதும். தொழுவதும் தான் உன்வேலை, அவனை நீ அடைய வேண்டுமென்றால் உன்னை அவன் முதலில் அடையவேண்டும், அதற்கு நீ ஆமைபோல் ஐம்புலன் களையும் அடக்க பிரயத்தனம் எடுக்க வேண்டும், மந்திரித்த கடுகை பேய் பிடித்தவன் மீது அள்ளி வீசினால் பேய் அகன்று விடும்,

ஆனால் பேய் கடுகுக்குள்யே புகுந்து விட்டால் அந்தக் கடுகு எப்படிப் பேயை விரட்டும், அதேபோன்றுதான் பகவானை மனதால் தியானிக்க வேண்டும், தியானிக்க வேண்டிய மனதிலேயே காமகுரோதங்கள் நிறைந்து விட்டால் அதைக் கொண்டு எப்படி தியானிப்பது,படகைக்கொண்டு தான் ஆற்றைக் கடக்க வேண்டும், படகே பாம்பானால்அக்கரையுமில்லாமல். இக்கரையுமில்லாமல் நடு ஆற்றிலே நிற்கதியாகப்போகவேண்டியதுதான்.

மன மாசுக்களை அகற்றும் எண்ணம் ஞானத்தால் மட்டுமே உருவாகும், அந்த ஞானத்தைத் தருவது சூரியனாகும், சூரியன் என்பது வானத்தில் உள்ள வட்டப் பொட்டு அல்ல! உன் புருவங்களுக்கு மத்தியில்உள்ள மூளையின் வாசல் . ஓடுகின்ற மனத பிடித்து இழுத்து வந்து அந்த மையத்தில் கட்டு மனதிற்குள் மண்டிக் கிடக்கும் அஞ்ஞானக் குப்பைகள் பற்றி எரியும் அகங்கார கோபங்கள் வெந்து சாம்பலாகும்…..

Translate »