Home கோவில் வரலாறு kathirasan kovil – கதிரேசன் கோவில் (சொர்ணமலை கதிர்வேல் முருகன்)

kathirasan kovil – கதிரேசன் கோவில் (சொர்ணமலை கதிர்வேல் முருகன்)

by Sarva Mangalam

“”வேண்டிய வரங்கொடுப்பான் மெய்கண்ட தெய்வமான முருகப் பெருமான். இத்தெய்வமல்லால் புவியில் வேறு இல்லை” என குமரகுருபரரால் பாடப்பட்டவர், ஆறுபடை வீடுகளை கொண்ட தமிழ்க் கடவுளான முருகப் பெருமான். இவருக்கு இலங்கை கதிர்காமத்திலிருந்து பிடி மண் எடுத்து உருவாக்கப்பட்ட கோவில்பட்டி சொர்ணமலைக் கோயிலில், “ஞானவேல்’ மூலவராகப் பூஜிக்கப்படுகிறது.

சிவசக்தியே முருகன் என்ற கொள்கை சைவக் கொள்கையாதலால் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள்,மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் தேவார திருவாசகங்களில் குமரப் பெருமானை சிற்சில இடங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

பல்வேறு அடியார்களால் புகழப் பெற்ற பிரம சாஸ்தா, சுப்பிரமணியன்,தேவசேனாதிபதி, கந்த சுவாமி, ஞான சக்திதரர் மூர்த்தி, கஜவாகனர்,சரவணபவர், சண்முகர், கார்த்திகேயர், கௌரபேயர், தேசிகர்,ஆறுமுகன், கந்தன் என பல்வேறு திருநாமங்களில் அழைக்கப்படும் முருகப் பெருமான் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் குன்றின் மீது “வேல்’ வடிவில் மூலவராக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இலங்கை கதிர்காமத்திலிருந்து பிடி மண்:
86 ஆண்டுகளுக்கு முன்பு கோவில்பட்டி வட்டாரத்திலிருந்த பலர் இலங்கை சென்று வாணிபம் நடத்தினர். அப்படிச் சென்ற ஒரு பக்தர்,இலங்கை கதிர்காமத்தில், “வேல்’ வடிவமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் முருகப் பெருமானை வணங்கி வந்தார்.


வாணிபம் முடித்த பின்பு கோவில்பட்டி திரும்பினார் அந்த பக்தர். ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய முருகப் பெருமான், “”இலங்கை கண்டி கதிர்காமத்திலிருந்து பிடி மண் எடுத்து வந்து கோவில்பட்டி சொர்ணமலையில் (குன்று) ஆலயம் எழுப்புக” என்று கூறிவிட்டு மறைந்தாராம். உடனே கந்தன் கருணையை எண்ணிக் கண்ணீர் மல்கிய அவர், கண்டி கதிர்காமம் முருகன் கோயிலிலிருந்து பிடி மண் எடுத்து வந்தார்; கோவில்பட்டி சொர்ணமலையில் சிறு ஆலயத்தை எழுப்பினார்.
வேல் வடிவமான முருகப் பெருமான்:
ஆலயத்தில் கண்டி கதிர்காமத்தில் உள்ளது போலவே கருவறையில் செம்பினால் ஆன வேல் மூலவராகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூலவருக்கு இடது புறத்தில் கன்னி மூல கணபதிக்கும், வலது புறத்தில் தண்டாயுதபாணிக்கும் சந்நிதிகள் அமைக்கப்பட்டன.

“சொர்ணமலை கதிர்வேல் முருகன்’ என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கும் வேல், ஞானமருளும் சக்தியாகக் காட்சியளிக்கிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்து அறநிலையத் துறையினர்,இந்த ஆலய நிர்வாகத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

84 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 2005ம் ஆண்டு, பக்தர்களின் உதவியோடு புதிய விமானங்கள், பிராகார மண்டபங்களுடன் கூடிய புதிய ஆலயம் அமைக்கப்பட்டது. கிரிவலப்பாதை, படிக்கட்டுகள், மின் விளக்கு, குடிநீர் வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டு, 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நெய் தீபம் :
 

வேண்டுவோர் வேண்டிய வரங்களை அருளும் கருணை பகவான் கதிர்வேல் முருகன், இங்கு நெய்தீபம் ஏற்றி வணங்குபவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கிறார்.

இக்கோயில் அருகேயுள்ள குருமலையில் அரிய வகை மூலிகைச் செடிகள் காணப்படுகின்றன. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமியைத் தரிசனம் செய்துவிட்டு, அங்கு தவழும் மூலிகை நறுமணம் கலந்த தூய்மையான காற்றை சுவாசிக்கின்றனர். மூலிகைகாற்று உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருவதோடு,சொர்ணமலைக் கதிர்வேல் முருகன் நமக்கு அளிக்கும் அருளாசி,மனதிற்குப் புத்துணர்ச்சியை அளிக்கிறது.

மனிதர்களிடம் காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாச்சரியம் ஆகிய ஆறு தீய குணங்களை தமது வேலால் அகற்றி ஞானப் பொய்கையில் மூழ்கடிப்பார் இத்தலத்தில் குடிகொண்ட ஞான வேலான முருகப் பெருமான்.

கார்த்திகை நட்சத்திர நாட்களில் வேல் வடிவமான மூலவருக்கு ராஜ அலங்காரம், அர்த்த நாரீஸ்வரர் அலங்காரம், சோட்டானிக்கரை பகவதி அம்மன் அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன; சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் பக்தர்கள், அரை மலையில் (மலையின் பாதியில் அமைக்கப்பட்ட) கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்து சுவாமியைத் தரிசிக்கின்றனர்.

கோவில்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இத்தலம். வீரவாஞ்சி நகர் வழியாக ஆட்டோவில் செல்லலாம்.

You may also like

Translate »