Home ஆன்மீக செய்திகள் முக்தி வகைகள், இறைவனின் தன்மை, ஆன்மாக்களின் சுபாவம் :-

முக்தி வகைகள், இறைவனின் தன்மை, ஆன்மாக்களின் சுபாவம் :-

by admin

1. ஆன்மாக்கள் பல கோடிப் பிறவிகளில் சேர்த்து வந்துள்ள கர்மங்களை முழுவதுமாய் களைந்து, மீண்டும் பிறவாத நிலையை அடைவது ‘முக்தி’ என்று குறிக்கப் படுகிறது.

2. முக்தி வகைகள் நான்கு என்று புராணங்கள் பறை சாற்றுகிறது. சாலோக்கியம், சாயுச்சியம், சாமீப்பியம், சாரூப்பியம்.

3. சாலோக்கியம்: இறைவனின் உலகத்தை அடைந்து தொண்டு செய்தல்.

4. சாமீப்பியம்: இறைவனின் உலகத்தை அடைவதோடு அல்லாமல், அருகாமையில் இருந்து தொண்டாற்றும் பேறு.

5. சாரூப்பியம்: உபாசிக்கும் இறை வடிவத்தின் திருவுருவத்தையும் இறைச் சின்னங்களையும் பெற்று, இறைவனுக்கு தொண்டு செய்தல். (சில உதாரணங்கள்: திரிசூலம், சங்கு, சக்கரம், சக்தி வேல், நெற்றிக் கண்கள்).

6. சாயுச்சியம்: இறைவனோடு ஒன்று படுதல். ஜீவாத்ம – பரமாத்ம ஐக்கிய நிலையை குறிப்பது.

7. பரம்பொருளாகிய இறைவன் எடுத்தருளிய முக்கிய தெய்வ வடிவங்கள் ஐந்து. சிவபெருமான், அம்பிகை, ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, விநாயகப் பெருமான், முருகக் கடவுள். இவ்வடிவங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே நால்வகை முக்தி மார்கங்களும் உண்டு.

8. ஆன்மாக்கள் எவ்வகை முக்தியைப் பெற்றாலும் இயல்பில் இறைவனுக்குக் கட்டுப்பட்ட தன்மையைக் கொண்டவை.

9. இறைவன் நியமிப்பவன் (நியந்தா) – ஆன்மாக்கள் நியமிக்கப் படுபவர்கள், இறைவன் ஆட்டுவிப்பவன் – ஆன்மாக்கள் ஆட்டுவிக்கப் படுபவர்கள், இறைவன் ஆட்கொள்பவன் – ஜீவாத்மாக்கள் ஆட்கொள்ளப் படுபவர்கள், இறைவன் உடையவன் – ஆன்மாக்கள் உடைமைப் பொருள்.

10. முக்தி பெற்ற ஆன்மாக்களுக்கு ‘சுத்த சத்வ மயமான’ தெய்வ உடல் கிடைக்கப் பெறும். இச்சரீரம் என்றும் அழியாத தன்மை கொண்டது.

11. இறைவன் திருவுள்ளம் கொண்டால், முக்தி அடைந்த ஆன்மாக்களை, உலக நன்மைக்காக மீண்டும் இப்புவியில் அவதரிக்கச் செய்தருளுவார் (உதாரணம்: சுந்தர மூர்த்தி நாயனார், ஸ்ரீராமானுஜர்).

புராணங்கள் 11 உருத்திரர்களைப் பற்றி விவரிக்கிறது. ஏகாதச ருத்திரர்கள் என்று அழைக்கப் பெறும் இவர்கள் சிவபெருமானின் சாரூப்பிய முக்தி பெற்றவர்கள். சிவபெருமானின் தோற்றத்தில், சிவச் சின்னங்களுடன் காட்சி தருபவர்கள். ஆனால் ஆதிப் பரம்பொருளான சிவபெருமான் இவர்களிடம் இருந்து வேறுபட்டு, இவற்றிலிருந்து நீங்கி நின்றருள்பவர்.

கர்மங்களால் கட்டுண்டு பிறவி எடுக்கும் ஆன்மாக்களுக்கு பஞ்ச பூதங்களின் கலவையான சரீரம் கிடைக்கப் பெறும். இது அழியும் தன்மை கொண்டது.

அம்பிகையாகிய ஆதி பராசக்தியின் உலகம் ‘மணித்திவீபம்’ என்று ‘தேவி பாகவதம்’ குறிக்கிறது. வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத சிறப்புடையது இத்தீவு( படம் பார்க்க !). அம்பிகையை உபாசித்து முக்தி பெறுபவர்கள் பேரொளி பொருந்திய இத்தீவில் வசிக்கும் பேறு பெற்று, எல்லையில்லா இன்பம் எய்துவார்கள் என்றும் ‘தேவி பாகவத புராணம்’ அறுதியிடுகிறது.

You may also like

Translate »