Home ஆன்மீக செய்திகள் சிவாலயத்தில் வழிபாடு செய்யும் முறை

சிவாலயத்தில் வழிபாடு செய்யும் முறை

by admin

உலகத்தில் வாழ்ந்து வரும் கோடிக்கணக்கான தமிழர்களில் உங்களுக்கு மட்டுமே இந்த பதிவை வாசிக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.ஏனெனில்,நீங்கள் மட்டுமே பைரவப் பெருமானின் அருளையும்,சிவபெருமானின் ஆசியையும் பெறத் தகுதியுள்ளவர்களாக இருக்கிறீர்கள்.அந்த அளவிற்கு உங்களுடைய பூர்வபுண்ணியம் வலிமையாக இருக்கிறது;

தமிழ்நாட்டில் பழமையான ஆலயங்கள் 39,000 இருக்கின்றன;இதில் சரிபாதி சிவாலயங்களாக இருக்கின்றன;

ஒவ்வொருவருமே பேச்சு,மூச்சு,சிந்தனை முழுவதும் எப்படியெல்லாம் பணம் சம்பாதிப்பது? என்ற நோக்கத்தின்படியே செயல்படத் துவங்கிவிட்டனர்;விளைவு? நமது எதிர்கால சந்ததியினருக்கு நமது பண்பாடு பற்றிய அடிப்படை ஞானம் கிடைக்காமல் போய்க்கொண்டிருக்கிறது;இணையமும்,கணினிபற்றிய அடிப்படை ஞானம் இல்லாதவர்களை கற்காலத்தைச் சேர்ந்தவரைப் போல எண்ணத் துவங்கிவிட்டனர்;அப்பா 40 வருடம் அரசுப்பணி புரிந்து தனது 58 வயதில் பெற்ற சம்பளத்தை அவரது மகன்/ள் 21 வயதில் பெறத் துவங்கினான்/ள்.

சிறு சிறு நகரங்களும் செல்வச் செழிப்பைப் பெறத் துவங்கின;ஆனால்,அதே சமயம் செல்வ வளம் மிக்கவர்களுக்கும்,வறியவர்களுக்குமான இடைவெளி அதிகரிக்கத் துவங்கியது;ஜனநாயக நாடான நமது நாடு முதலாளித்துவ வடிவம் எடுக்கத் துவங்கியது;அன்பு,பாசம்,விட்டுகொடுத்தல்,குடும்ப ஒற்றுமைக்கு தன்னையே தியாகம் செய்தல்,குழந்தைகளோடு நேரம் செலழித்து அவர்களின் ஆளுமைத் திறனை வளர்த்தல்,அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்த்தல்,அவர்களது நட்பு வட்டத்தைக் கண்காணித்தல் போன்றவை குறையத் துவங்கின;அவர்களது மனம் சார்ந்த சிக்கல்களை காது கொடுத்து கேட்க பெற்றோர்களுக்கே நேரம் இல்லை; ஆனால்,ஓடி ஓடி சம்பாதிப்பது அவர்களுக்காகவே!!!

தனது முதுமைக் காலத்தில் தன்னையும்,குடும்ப அமைப்பையும் நிர்வகிக்கும் விதமாக அவர்களுக்குப் பயிற்றுவிக்க நேரம் இல்லை;

இதற்கு முதல் காரணம் நமது முன்னோர்கள் நடைமுறைப்படுத்திய பாரம்பரிய நடைமுறைகளை இறுதிவரையிலும் பின்பற்றாததே காரணம்;ஏழு வயதிற்குள் நமது குழந்தைகளை அடிக்கடி பழமையான ஆலயங்களுக்கு அழைத்துச் செல்லாவிட்டால்,அதன்பிறகு அவர்களுக்கு பக்தி உணர்வை ஊட்டுவது முடியாத காரியமாகிவிடுகிறது.

பெற்றோர்,குரு,குழந்தைகள்,இறைவன்=இவர்களில் யாராவது ஒருவரை சந்திக்கச் சென்றாலும் வெறும் கையோடு போய் பார்க்கக் கூடாது என்பது நமது இந்து தர்மத்தின் சம்பிரதாயம்;

பெரும்பாலான சிவாலயங்களுக்குள் பசுமடம் அமைக்கப்பட்டிருக்கிறது;எனவே,வாழைப்பழங்கள் அல்லது அகத்திக்கீரை வாங்கிச் செல்வது அவசியம்;ஆண்கள் எனில்,மேலாடையைத் தவிர்த்துவிட்டு,சிவாலயத்தினுள் நுழைவது அவசியம்;ஒவ்வொரு நாளுமே மஞ்சள் நிற வேட்டியை அணிந்து கொண்டு செல்வது நன்று;

கோவில் வாசலில் துவார(வாசல்) பாலகராக விநாயகர் அருள்பாலித்துக் கொண்டு இருப்பார்;அவரை மனப்பூர்வமாக வழிபட்டுவிட்டு,கோவிலினுள் நுழைவது முறை;

விநாயகரை வழிபடும் போது,மனதினுள் அவரது காயத்ரி மந்திரத்தையோ அல்லது அகவலையோ மனதிற்குள் பாடுவது அவசியம்;

ஓம் ஏக தத் புருஷாய வித்மஹே

வக்ர துண்டாய தீமஹி

தந்நோஹ் தந்தி ப்ரதோசதயாத்

என்பது விநாயகர் காயத்ரி மந்திரம் ஆகும்;

ஓம் ஐந்து கரத்தனை ஆனை முகத்தினை

இந்து இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

என்பது விநாயகர் அகவல் ஆகும்;

இதுவும் ஜபிக்க இயலாதவர்கள் ஓம் கணபதியே போற்றி என்று ஒன்பது முறை ஜபித்தாலும் போதுமானது;

கோவிலின் கோபுரத்திற்கு நேர் கீழாக வரும் போது,அங்கிருந்து மூலவரின் உருவம் தெரியும்;அந்த கணத்தில் ஓம்சிவசக்திஓம் என்ற மந்திரத்தை பனிரெண்டுமுறை ஜபித்துவிட்டு,கொடிமரத்தின் அருகில் வரவேண்டும்;கொடி மரத்துக்கு அருகில் இருக்கும் பலிபீடத்தை வந்தடைய வேண்டும்;அங்கே வடக்கு நோக்கி விழுந்து கும்பிட வேண்டும்;இப்படிச் செய்வதால் நம்மிடம் அதுவரை இருந்து வந்த அனைத்து தீய எண்ணங்களையும் அந்த பலிபீடத்தில் பலியிடுவதாக ஐதீகம்;பலிபீடத்தில் விழுந்து வணங்கியப் பின்னர்,ஒருபோதும் கோவிலுக்குள்ளே எந்த இடத்திலும் விழுந்து வணங்கக் கூடாது;மேலும்,சிவாலயத்தினுள் இறைவனைத்தவிர,வேறு எவரையும் வணங்கக் கூடாது;அனாவசியமான பேச்சு,செல்போன் பேச்சு கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்;

சிவனை வழிபடுவதற்கு முறைப்படி நந்திபகவானிடம் அனுமதி கோர வேண்டும்;நந்தி பகவானை வழிபடுவதன் மூலமாக இந்த அனுமதி நமக்கு கிடைத்துவிட்டதாக அர்த்தம்;

ஓம் ஏகதத்புருஷாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி

தந்நோஹ் நந்தி ப்ரசோதயாத் என்பது நந்திபகவானின் காயத்ரி மந்திரம் ஆகும்;

பிறகு,மூலவராக இருக்கும் சிவனது இருப்பிடத்திற்குள் செல்ல வேண்டும்;ஏதாவது ஒரே ஒரு கோரிக்கையை மட்டுமே நினைக்க வேண்டும்;நினைத்துவிட்டு,ஓம்சிவசக்திஓம்,ஓம்சிவசக்திஓம் என்ற சிவமந்திரத்தை இங்கிருந்து ஜபிக்கத் துவங்க வேண்டும்;சிவனை வழிபட்டுவிட்டு,பக்கவாட்டு வாசல் வழியாகவே அம்பாள் சன்னதிக்குச் செல்ல வேண்டும்;

இதே போல,அம்மன் சன்னதியில் அமைக்கப்பட்டிருக்கும் நந்திபகவானை வழிபட்டப் பின்னரே,அம்மனை தரிசிக்கச் செல்ல வேண்டும்;இங்கேயும் மனதிற்குள் ஓம்சிவசக்திஓம்,ஓம்சிவசக்திஓம் என்று தொடர்ந்து ஜபித்துக் கொண்டே நமது கோரிக்கையை வேண்ட வேண்டும்;சிவனிடம் என்ன கோரிக்கையை வேண்டினோமோ,அதே கோரிக்கையை அம்பாளிடமும் வேண்ட வேண்டும்;

சிவன் சன்னதியில் தரப்படும் விபூதியையும்,அம்பாள் சன்னதியில் தரப்படும் குங்குமத்தையும் பத்திரமாக நமது வீட்டிற்குக் கொண்டு வர வேண்டும்;பலர் சிவன் சொத்து குல நாசம் என்ற பழமொழியைத் தவறாகப் புரிந்து கொண்டு,அர்ச்சகர்/சிவாச்சாரியார் கொடுக்கும் விபூதி,குங்குமத்தை அங்கேயே கொட்டிவிட்டு வந்துவிடுகின்றனர்;இது தவறு மட்டுமல்ல;மகத்தான பாவமும் கூட!

பழமையான சிவாலயத்தில் தரப்படும் விபூதி,குங்குமத்தை விட்டுக் கொண்டு வந்து சேமித்துக் கொண்டே இருந்தால்,நமக்கும்,நமது குடும்பத்தாருக்கும் யாராலும் எந்த ஒரு மறைமுகத்தீங்கையும் செய்யமுடியாது;(நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்தியிருந்தால்!)ஏனெனில்,இவைகளில் அளவற்ற தெய்வீக சக்தியும்,பாஸிடிவ் எனர்ஜியும் இருப்பதை இன்றைய நவீன அதீத உளவியில் விஞ்ஞானம் பலமுறை நிரூபித்திருக்கிறது;

மூலவர்களின் சன்னதிகளைக் கடந்து பக்கவாட்டுப்பகுதிக்கு வரும் போது சைவ அடியார்களின் 64 வரிசையைக் காணலாம்;இவர்கள் ஒவ்வொருவரின் முன்பாகவும் நின்று மூன்று முறை ஓம்சிவசக்திஓம் என்று ஜபிக்க வேண்டும்;இதன் முடிவில் அமைக்கப்பட்டிருக்கும் விநாயகரின் பெயர் செவிசாய்க்கும் விநாயகர் ஆகும்;இவர் முன்பாக ஒன்பது முறை தோப்புக் கரணம் போட்டுவிட்டு,இவரை ஒருமுறை வலம் வர வேண்டும்;

மூலவர் இருக்கும் சன்னதியின் பின்பக்கத்தைக் கடக்கும்போது,லிங்கோத்பவர் சன்னதி அமைக்கப்பட்டிருக்கும்;இந்த லிங்கோத்பவர் சன்னதிக்கு எதிரே அமைக்கப்பட்டிருக்கும் சிவலிங்கம் நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் மிகவும் முக்கியமான சிவலிங்கம் ஆகும்.இந்த சிவலிங்கத்தை சில நிமிடங்கள் வரையிலும் வழிபட்டால் மட்டுமே நமக்கு கலியின் துன்பத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்;நமது மன அமைதி ஒவ்வொரு நாளும் வலுப்பெற்றுக் கொண்டே இருக்கும்;அதன் பிறகு,லிங்கோத்பவரை வழிபட வேண்டும்;படைக்கும் கடவுளான பிரம்மா அன்னப்பறவை வடிவில் சிவனின் முடியைத் தேடி பறப்பதை இந்த லிங்கோத்பவரின் மேல்பகுதியிலும்,காக்கும் கடவுளான மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து,சிவனின் அடியைத் தேடிச் செல்வதை இந்த லிங்கோத்பவரின் கீழ்ப்பகுதியிலும் செதுக்கியிருப்பதைக் காணலாம்;இந்த சம்பவம் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு,அண்ணாமலையில் நிகழ்ந்திருக்கிறது;அயன்,மால் இருவருக்குமே இறைவன் அந்த அண்ணாமலையாரே என்பதை இந்த லிங்கோத்பவர் சிற்பம் உணர்த்துகிறது;

கோவிலின் உட்பகுதிக்குள் அமைக்கப்பட்டிருக்கும் சண்டேஸ்வரர் சன்னதிக்கு கண்டிப்பாகச் செல்ல வேண்டும்;அவரது சன்னதியில் நின்று கொண்டு மெதுவாக கை தட்ட வேண்டும்;சிவாலயத்திற்கு வந்தமைக்கான பலன்களைத் தரும் பொறுப்பு இவரையேச் சேரும்;இப்படிக் கைத்தட்டினால் தான்,சிவாலயத்திற்கு நாம் வந்திருப்பதை சண்டேசுவரர் பதிவு செய்வார்;க்ஷேத்திரபாலகராகிய பைரவர் சன்னதிக்கு வரும் வரை இந்த மந்திரத்தை மட்டுமே ஜபிக்க வேண்டும்;

மூலவ சன்னதிகளின் பின்புறத்தைக் கடக்கும் போது சிறிதும் பெரிதுமாக ஏராளமான சிவலிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன;அவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சித்தர்களால் வெவ்வேறு காலகட்டங்களில் ஸ்தாபிக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டவை;

சிவசக்தியின் கலப்பாக நாம் வாழ்ந்து வரும் உலகம் இயங்கிவருவதால்,ஓம்சிவசக்திஓம் ஜபிப்பதன் மூலமாக தம்பதியரின் மனக்கசப்பு அடியோடு நீங்கிவிடும்;ஒற்றுமை ஏற்படும்;

பைரவப் பெருமானின் சன்னதிக்கு வந்தடைந்ததும்,பைரவப் பெருமானின் காயத்ரி மந்திரம் அல்லது ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தையோ 8 முறை ஜபிக்க வேண்டும்;

பிறகு,உள்பிரகாரத்தைச் சுற்றி வர வேண்டும்;அப்போதும் ஓம்சிவசக்திஓம் என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;பெரும்பாலான ஆலயங்களில் உள்பிரகாரத்திலோ அல்லது வெளிப்பிரகாரத்திலோ ஸ்தல விருட்சம் வளர்ந்திருக்கும்;அதன் அருகில் வரும் போது நமது கோரிக்கையை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்;இதன் மூலமாக நமது கோரிக்கை விரைவில் நிறைவேறும்.கோவிலை விட்டு வெளியேறும் முன்பு கோவிலின் ஏதாவது ஒரு இடத்தில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பிறகே செல்ல வேண்டும்;ஏனெனில்,பல கோடி ஆண்டுகளாக சிவ வழிபாடு செய்து வரும் பல சிவபக்தர்கள் கோவிலுக்குள் சூட்சுமமாக இருப்பார்கள்;கோவிலின் அனைத்துப் பிரகாரங்களையும் சுற்றிவிட்டு,கோவிலுக்குள் உட்காராமல் வீட்டுக்குப் புறப்பட்டால் அவர்களும் நம்மோடு நமது வீட்டுக்கு சூட்சுமமாக வரத் துவங்குவர்;அது முறையல்ல;

கோவில் பசுமடத்தில் இருக்கும் பசுக்களுக்கு கையோடு கொண்டு சென்ற பழங்களை அதற்குத் தானமாகத் தர வேண்டும்;மதுரை மீனாட்சியம்மன் கோவில் போன்ற ஒரு சில கோவில்களில் பசுமடத்தின் வாசலிலேயே அகத்திக்கீரை விற்பனை செய்து வருகிறார்கள்;ஒவ்வொரு முறை செல்லும் போதும் அகத்திக்கீரை வாங்கி பசுக்களுக்குத் தருவது நமது சோகங்களை நீக்கிடக் காரணமாக அமையும்;

அதே போல,நமது வீட்டில் இருந்து மூன்று கி.மீ.தூரத்திற்குள் பழமையான சிவாலயம் இருந்தால்,தினமும் அல்லது வாரம் ஒருமுறை அல்லது நமக்கு எப்போதெல்லாம் ஓய்வு நேரம் இருக்குமோ அப்போதெல்லாம் நடந்தே இந்த சிவாலயத்திற்குச் செல்ல வேண்டும்;தனியாகப் புறப்பட்டு,சிவவழிபாடு செய்துவிட்டு தனியாகவே வீடு திரும்புவதால் முழு சிவநிறைவு கிடைக்கும்;

அதே போல,நமது வீட்டில் இருந்து புறப்பட்டு சிவாலயம் சென்றுவிட்டு,வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும்,யார் வீட்டிற்கும் செல்லாமலும் நேராக நமது வீட்டை வந்தடைய வேண்டும்;ஒவ்வொரு பழமையான சிவாலயமும் நமக்கு அளவற்ற ஆத்ம சக்தியைத் தரக்கூடியவை;நமது கர்மவினைகளை படிப்படியாகவும்,முழுமையாகவும் நீக்கக் கூடியவை;

சிவாலயத்தினுள் அல்லது சிவாலயத்தின் வாசலில் நாம் செய்யும் ஒவ்வொரு தானமும் ஏராளமான புண்ணியத்தை நமக்கு அருளக் கூடியவை;

தொடர்ந்து 45 நாட்கள் சிவாலயம் சென்று வந்தாலே சிவனம்சமாகவே நாம் மாறிவிடுவோம்;தொடர்ந்து பத்து ஆண்டுகள் தினமும் சிவாலயம் சென்று வந்தால் குருவின் வடிவில் சிவ தரிசனம் நமக்குக் கிட்டும்;
ஒரே ஒரு சனிப்பிரதோஷத்தன்று,பழமையான சிவாலயத்தில் நடைபெறும் பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொண்டால் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் நமக்குக் கிட்டும்;

ஒரே ஒரு திங்கட்கிழமை பிரதோஷத்தன்று,பழமையான சிவாலயத்தில் நடைபெறும் பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொண்டால் தொடர்ந்து நான்கு தலைமுறையாக நமது வீட்டு பெண்மணிகளின் சோகங்கள் படிப்படியாக நீங்கும்;நமது மனதினுள் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் நீங்கும்;மன உறுதி பலப்படும்;நமது சிந்தனைத் திறன் பல மடங்கு அதிகரிக்கும்;நமது சுபாவத்துக்கு ஏற்ற ஆன்மீக குருவை நாம் சந்திக்கும் பாக்கியம் நமக்குக் கிட்டும்;

ஒரே ஒரு சாதாரண பிரதோஷத்தன்று,பழமையான சிவாலயத்தில் நடைபெறும் பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொண்டால் தொடர்ந்து ஓராண்டு சிவாலயம் சென்று வந்த புண்ணியம் நமக்குக் கிட்டும்;

இன்றும் பல சிவாலயங்களில் சாதாரண ஊழியர்கள் வடிவில் அந்தக் கோவிலின் அருமை பெருமைகளை அறிந்தவர்கள் பணிபுரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள்;தொடர்ந்து ஓராண்டு வரை சிவாலயம் செல்பவர்களுக்கு அந்த ஆலயத்தின் மகிமையை உணரும் சந்தர்ப்பம் அமையும்.

உலகில் எப்போதெல்லாம் சிவவழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை குறைகிறதோ,அப்போதெல்லாம் பூமியில் தண்ணீர்ப்பஞ்சம் குறிப்பாக குடிநீர்ப்பஞ்சம் உண்டாகும் என்பது சிவனடியார்களின் அனுபவ உண்மை;

You may also like

Translate »