Home ஆன்மீக செய்திகள் கடன் தீர்க்கும் காஞ்சி முருகன்

கடன் தீர்க்கும் காஞ்சி முருகன்

by admin

திருவண்ணாமலை அடுத்த செய்யாற்றங்கரையில் திருக்காஞ்சி என்ற இக்கிராமத்தில் உள்ள குன்றின் மீது திருநீலகண்ட பருவத பாலசுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வள்ளி, தெய்வாணை சமேதராக முருகர் காட்சி கொடுக்கிறார்.
இக்கோயிலில் இரண்டு முருகர் சன்னதிகள் உள்ளது தான் சிறப்பம்சமாகும் :கோயில் ஒன்று – சன்னதி இரண்டு!
இக்கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர், தனது நேர்த்திக்கடன் நிறைவேறினால் இதே குன்றின் மீது பாலமுருகன் சன்னதியை அமைக்கிறேன் என்று வேண்டிக் கொண்டதாகவும், அதன்படி வேண்டுதல் நிறைவேறி, மூலவர் சன்னதிக்கு முன்பு ஸ்ரீ பாலமுருகன் கோயிலை அமைத்ததாகவும் கூறப்படுகிறது.
மூலவர் சன்னதிக்கு வலது பக்கத்தில், விநாயகர், சிவன், பார்வதி சன்னதியும், இடதுபுறத்தில் உற்சவ மூர்த்தி சன்னதியும் அமைந்துள்ளன. மூலவர் சன்னதிக்கு முன்பு மயில் வாகன மண்டபமும் உள்ளது. கோயிலுக்கு முன்பு 60 அடி உயரத்தில் ராஜகோபுரம் பொதுமக்களால் கட்டப்பட்டுள்ளது.
இக்குன்றுக்கு அருகில் உள்ள 450 அடி உயரமுள்ள குன்றில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் கொண்டுள்ளதால், தனிச்சிறப்பு வாய்ந்த ஆஞ்சநேயராக கருதி, ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
தல வரலாறு:
சுந்தரசாமி என்பவர் சிறுவயதிலேயே தனது ஊரைக் கூட அறியாமல், வீட்டை விட்டு காஞ்சி கிராமத்துக்க வந்துள்ளார். அங்குள்ள சின்னைய முதலி என்பவரது வீட்டில் வேலைக்காக சேர்ந்தார். அவரை, சித்தரை மாத வெயிலில் தானியத்தை காவல் காக்கச் சொல்லியுள்ளனர். அப்போது அவர் உட்கார்ந்திருந்த இடத்தில் நிழல் தருவதற்காக ஒரு பெரிய மரம் உண்டானதாகவும், அன்றிலிருந்து அவர் தெய்வ பக்தியும், ஞான சித்தியும் பெற்றதாகவும் கூறப்படுகிறது. அன்றிலிருந்து சின்னைய முதலியும், சுந்தரசாமிக்கு சீடனாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, பல ஆண்டுகளுக்கு முன்பு சித்தர் சுந்தரசாமி எண்ணப்படி, இக்குன்றின் மீது சின்னையன் கோயிலை கட்டியதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல, திருவண்ணாமலை ஈசான்ய மடாதிபதியாக இருந்த கணபதி சாமிகள், இக்கோயிலுக்கு வந்து 30 ஏக்கர் நிலங்களை பெற்று, நித்யகால பூஜை செய்வதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்ததாகவும் கூறப்படுகிறது.
மலேசியாவில் உள்ள ஒருவர் சனீஸ்வரர் கோயிலை அந்நாட்டில் அமைக்க விரும்பினார். பின்னர் மலேசியாவில் கோயில் அமைப்பதைவிட தமிழகத்தில் அமைப்பதுதான் தெய்வீகம் என நினைத்து, தமிழகத்தில் உள்ள கோயில்களையெல்லாம் சுற்றிப்பார்த்ததாகவும், ஆனால் அவரது மனம் எந்த கோயிலிலும் ஈர்க்கப்படவில்லை என்றும், பின்னர் காஞ்சி கோயிலுக்கு வந்த அவர், சனீஸ்வரர் கோயில் அமைப்பது பற்றி ஊர்மக்களிடம் பேசி, அதன்படி காஞ்சி குன்றின் மீது சனீஸ்வரர் சன்னதியை அமைத்து விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
நிகழ்சச்கள் :
மாதந்தோறும் கிருத்திகை அன்று சுவாமிக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காலை பூஜை நடைபெறும். இரவு உற்சவர் கிரிவலம் வருவார்.
விசேஷ கிருத்திகை : ஆடி கிருத்திகை இங்கு மிகவும் விஷேகமாக கருதப்படுகிறது. பக்தர்கள் காவடி சுமந்து வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். பால்காவடி, பன்னீர்காவடி, புஷ்ப காவடி அலகு குத்தியும் தேர் இழுத்தும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றி செல்கின்றனர்.
தை கிருத்தகை: கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த கார்த்திகை கிருத்திகை, தை கிருத்தகை இங்கு விசேஷமான நாளாகும். கார்த்திகை கிருத்திகை அன்று சொக்க பானை எறிதல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
பரிகாரம் : கடன் தீர்க்கும் திருத்தலமாகவும், திருமண தடை, வேலைவாய்ப்பு, குழந்தை பாக்கியம் போன்ற வேண்டுதல் இங்கு வந்து முருகனிடம் முறையிட்டால் முடியாதது இல்லை என்று சொல்லப்படும் அளவிற்கு முருக பெருமான் வாரி வழங்கி வருகிறார். வாருங்கள்; வந்து அருளை பெற்றுச் செல்லுங்கள்.
கந்த சஷ்டி விழா : ஐப்பசி மாதம் அமாவாசை அன்று கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. காலை, இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. கந்த சஷ்டி அன்று காலை பாலாபிஷேகமும், அன்று மாலை நவபாகு தேவர்கள் (9 பேர்கள்) சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறுகிறது. மறுநாள் தெய்வாணை அம்மாள் திருமணம் நடைபெறுவது இக்கோயிலின் தனி சிறப்பு ஆகும். மறுநாள் காலை மயில் வாகனத்தில் சுவாமி திருமணக்கோலத்தில் வீதியுலா வருவது கண் கொள்ளாக் காட்சியாகும்.
ஆலய தொடர்புக்கு, நிர்வாகி, முருகானந்தம் 9865554420 / 9790372120
அமைவிடம் : திருவண்ணாமலையிலிருந்து 23 கி.மீ. தூரத்தில் காஞ்சி முருகர் கோவில் அமைந்துள்ளது

You may also like

Translate »