மூலவர் : திருமுருகநாதர்
உற்சவர் : –
அம்மன்/தாயார் : ஆவுடை நாயகி, மங்களாம்பிகை
தல விருட்சம் : –
தீர்த்தம் : சண்முகதீர்த்தம்,ஞானதீர்த்தம்,பிரம்ம தீர்த்தம்
ஆகமம்/பூஜை : –
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருமுருகன்பூண்டி
ஊர் : திருமுருகன்பூண்டி
மாவட்டம் : திருப்பூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
தேவாரப்பதிகம்
சுந்தரர்
வேதம் ஓதி வெண்ணீறு பூசிவெண் கோவணந் தற்றயலே ஓதம் மேவிய ஒற்றியூரையும் உத்திர நீர்மகிழ்வீர் மோதி வேடுவர் கூறை கொள்ளும்முரு கன்பூண்டி மாநகர்வாய் ஏது காரணம் ஏது காவல் கொண்டு எத்துக்கு இங்கிருந்தீர் எம்பெருமானீரே.
சுந்தரர்.
தேவாரப்பாடல் பெற்ற கொங்குநாட்டுத்தலங்களில் இது 2வது தலம்.
திருவிழா:
மாசியில் 13 நாட்கள் பிரதான திருவிழாவாகும். மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, ஆருத்ராதரிசனம், அன்னாபிஷேகம், கந்தசஷ்டி, தைப்பூசம், நவராத்திரி, வைகாசி விசாகம் ஆகிய விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.
தல சிறப்பு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 206 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை5.30 மணி முதல் 12.45 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு திருமுருகன்நாதசுவாமி திருக்கோயில், திருமுருகன்பூண்டி – 641 652 திருப்பூர் மாவட்டம்.
பொது தகவல்:
கோயில் நுழைவு வாசலில் பதினாறுகால் மண்டபத்தில் விநாயகர் சன்னதி உள்ளது. இதன் உள்ளே சென்றால், வலதுபுறம் வேடுவர் உருவங்கள் இரண்டு(ஒன்று பறிகொடுத்து முகம் வாடிய நிலைவிலும் மற்றறொன்று மீண்டும் பெற்ற மகிழ்ச்சி நிலையிலும்)உள்ளன. சுவாமியும் அம்பாளும் மேற்கு பார்த்த சன்னதிகள். மூலவர் அம்பாள் பீடத்தின் கோமுகம் வடக்கு நோக்கியுள்ளது. வழிமறித்து நிதிபறித்த இறைவன் இருக்குமிடத்தைக் கூப்பிட்டுச் சுந்தரருக்குக் காட்டிய(வேடுபறி நடந்த இடம்) கூப்பிடு விநாயகர் அவிநாசிக்குப் போகும் வழியில் 1.கி.மீ. தொலைவில் பாறைமேல் உள்ளார்.
பிரார்த்தனை
இங்குள்ள பிரம்மதீர்த்தத்தில் நீராடி சுவாமியை மன முருகி வேண்டிக்கொள்ள மனநோய்(சித்தபிரம்மை) சாபங்கள், பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. தீர்த்தக்கரையில் நாகபிரதிஷ்டை செய்து வணங்குகின்றனர். சண்முகதீர்த்தத்தில் நீராடி சுவாமிக்கு அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும் என நம்பப்படுகிறது.
நேர்த்திக்கடன்:
வேண்டிக்கொண்ட காரியங்கள் நிறைவேறிட சுவாமிக்கு பால்குடம், காவடி எடுத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து வழிபடப்படுகிறது.
தலபெருமை:
சிவனின் சிறந்த பக்தரான சுந்தரர் தான் பெற்ற கவிப்புலமையின் பலனாக தனது நண்பனான மன்னன் சேரமானிடம் பொன்னும், பொருளுமாக பரிசுகள் பல பெற்று இவ்வழியே திரும்பிக்கொண்டிருந்தார்.தற்போது கோயில் அமைந்துள்ள பகுதிக்கு அருகே வந்தபோது இருட்டியதால் அருகில் உள்ள கூப்பிடுவிநாயகர் கோயில் வாயிலில் ஓய்வெடுத்தார். அப்போது, தன்னை துதிக்காமல் சென்ற சுந்தரரை சோதிக்க எண்ணிய சிவன், தனது பூதகணங்களை வேடுவர் வடிவில் அனுப்பி அவரிடம் இருந்த பரிசுப் பொருட்களைக் கவரச்செய்தார்.இதனால் மனக்கலக்கமுற்ற சுந்தரர் அங்கே இருந்த கூப்பிடுவிநாயகரிடம் தனது பொருட்களை மீட்க வழி கூறும் படி முறையிட்டார். தனது தகப்பனின் திருவிளையாடலை அறிந்த அவர் தும்பிக்கையால் கிழக்கு திசை நோக்கி காட்டினார். அவர் காட்டிய திசைக்கு வந்த சுந்தரர் அங்கு பதுங்கியிருந்த சிவனிடம் முறையிட்டு அவரை உரிமையுடன் திட்டிப்பாடி இழந்த பொருள் மீட்டுத் தரும்படி வேண்டினார்.அவரது பாடலில் மயங்கிய சிவபெருமான் தான் பறித்த பொன்னையும், பொருளையும் அவருக்கே திருப்பி வழங்கி ஆசிபுரிந்தார். இவ்வாறு சுந்தரரின் பாடலைக் கேட்பதற்காகவே சிவன் தனியே திருவிளையாடல் நடத்திய தலம் எனும் பெருமையை உடையது.
தலசிறப்பு: இத்தலத்தின் முதன்மையானவரான சிவன்,முருகனால் பிரதிஷ்டை செய்து வணங்கப்பட்டதால், திருமுருகநாதர் என்ற திருப்பெயரில் அழைக்கப் படுகிறார். அவர் வணங்கியதை விளக்கும் முகமாக இத்தலத்தில் தெற்கு நோக்கியபடி உள்ள முருகன் சன்னதியின் கருவறைக்கு உள்பகுதியில் தென்புறம் மேற்கு நோக்கியபடி லிங்கம் ஒன்று உள்ளது.முருகன் இங்கு வந்து சிவனை வழிபடும் முன்பு தனது வேலை கோயிலுக்கு வெளியே சற்று தள்ளி தரையில் ஊன்றினார். மயில் வாகனத்தை அதன் அருகில் நிறுத்தி வைத்தார். இதனால் கோயிலுக்குள் இருக்கும் முருகனின் கையில் வேல் இருக்காது. மயில் வாகனமும் இல்லாமல், தனித்து நிற்கிறார். சுந்தரர் தன் பொருள் காணாமல் போனது பற்றி முறையிட்டு பாடியபோதும், பின்னர் பொருளைத் திரும்பப்பெற்ற போதும் உள்ள முகபாவனைகளுடன் மூன்று சிலைகள் சிவனின் சன்னதியின் முன்புறம் உள்ளது. கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள ஆடல்வல்லான் சபை, சிவன் பிரம்மதாண்டவம் ஆடிய சிறப்பு பெற்றது. கோயிலின் மையத்தில் சண்முகதீர்த்தம், இடப்புறம் ஞானதீர்த்தம், வலப்புறம் பிரம்ம தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்கள் மட்டுமே உள்ளது. முற்காலத்தில் புத்திரப்பேறின்றி தவித்த மகாரதன் எனும் பாண்டிய மன்னன் ஒருவன் சண்முக தீர்த்தத்தில் நீராடி அதன் நீரைக் கொண்டு பாயசம் செய்து பசும்பால், கற்கண்டு சேர்த்து சுவாமிக்கு நைவேத்யம் படைத்து, அந்தணர்களுக்கு தானமும் செய்தான். அதன் பயனாக அவன் இரட்டைக் குழந்தைகளை பெற்ற சிறப்புடைய தலம். இத்தலத்தின் தென்கிழக்கில் வடக்கு நோக்கியபடி எட்டு கைகளுடன் இறைவனின் துணைவியார், நீலகண்டி என்ற திருநாமத்துடன், காவல் தெய்வமாக அருள்பாலிக்கிறாள்.
தல வரலாறு:
ஆயிரத்தெட்டுஅண்டங்களையும் அளவிலாத காலம் வரையில் அடக்கி ஆளும் வரம் பெற்ற சூரபத்மன், ஆணவம் கொண்டு தேவர்களை சிறைப்படுத்தி துன்புறுத்தி வந்தான்.அவனது அட்டூழியம் நாளுக்கு நாள் பெருகவே அவனை அழித்து தேவகுலத்தை காத்திட முருகன் சம்ஹாரத்திற்கு தயாரானார். ஆறுமுகங்கள் கொண்டு அல்லல் தந்த சூரனுடன் போர் கொண்டு அவனை தனது வேற்படையால் இரண்டாக வெட்டி பின்னர் மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார்.எப்படியிருப்பினும், சூரனை துன்புறுத்தியதன் விளைவாக ஆறுமுகனை பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. தோஷம் நீங்க, கயிலை மலையில் இறைவன் சிவபெருமான் கூறியபடி மாதவிநாதரை வணங்க வந்தார்.அப்போது பூஜைக்கு தீர்த்தம் தேவைப்பட அவர் தனது வேலினால் அவ்விடத்தில் ஊன்ற தீர்த்தம் தோன்றியது. அந்நீர் எடுத்து சிவனை மேற்கு நோக்கியபடி அமைத்து பிரதிஷ்டை செய்து வணங்கினார். பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றார். அவ்வாறு நீங்கிய பிரம்மஹத்தி, தற்போது கோயிலின் வெளியே உள்ள வேம்படிமுருகன் சன்னதியின் அருகில் உள்ள சதுரக்கல்லாக இருப்பதாக புராண வரலாறு கூறுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.