சண்டிகேசுவரர் சைவ சமயத்தின் பஞ்ச மூர்த்திகளில் ஒருவராகவும், சிவபெருமானுக்கு படைக்கப்படும் உணவு மற்றும் உடைகளின் அதிபதியாகவும் இருக்கிறார். இவருடைய சந்நிதி சிவாலயங்களில் சிவபெருமானின் கருவரை அமைந்திருக்கும் பகுதியின் இடப்பாகத்தில் அமைக்கப்படுகிறது. பஞ்ச மூர்த்தி உலாவின் பொழுது சிவாலயங்களிலிருந்து இவருடைய உற்வசர் சிலையும் ஊர்வலமாக எடுத்துவரப்படுகிறது. பஞ்ச மூர்த்தி உலாவில் இறுதியாக இவர் வலம் வருகிறார்.
சிவாலயங்களில் ஆலயச்சுற்று வரும்போது கருவறை அபிஷேக நீர் விழும் கோமுகி அருகில் சிறு சந்நிதியில் இருக்கும் சண்டிகேஸ்வரர் எப்போதும் தியானத்தில் இருப்பவர், சிவபெருமானுக்கு படைக்கப்படும் பொருள்கள், சண்டிகேசுவரரின் பெயரால் கணக்கு வைக்கப்படுகின்றன. “சிவன் சொத்து குலநாசம்’ என்பர். அதனால், சிவாலயத்திலிருந்து எந்தவொரு பொருளையும் தாங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை என்பதைத் தெரிவிக்கவே, இறுதியாக அவர் சந்நிதிக்கு வந்து இரு கைகளையும் தட்டிவிட்டு வணங்கும் வழக்கம் வந்ததாகக் கூறுவர். இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்து விடும் அதனால் அவர் முன்பு கை தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குவதே சரியானது. சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்மிக பலமும், சிவாலய தரிசன பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சண்டிகேசுவரர் வலது கரத்தில் மழுவுடன் காணப்படுகிறார்.
நாயன்மாருக்கு சண்டேசுவர பதவி
ஏழாம் நூற்றாண்டில் விசாரசருமர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் சிவபெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். ஒரு முறை இடையச் சிறுவன் ஒருவன் தனது பசுக்களை அடிப்பதைக் கண்டு, வெகுண்ட விசாரசருமர் தானே பசுக்களை மேய்க்கத் தொடங்கினார். பசுக்களிடம் பாலைக் கரந்து அதனை சிவபூசைக்கு பயன்படுத்தினார். இதனால் பசுவின் உரிமையாளர்கள், விசாரசருமரின் தந்தையிடம் சென்று முறையிட்டார்கள்.
விசாரசருமர் மண்ணில் லிங்கத்தினைச் செய்து, பசுவின் பாலால் அபிசேகம் செய்தார். அதனை நேரில் கண்ட தந்தைக்கு மண்ணில் பாலை ஊற்றி வீணாக்குகின்றானே என்று நினைத்து பூசையை தடுக்கச் சென்றார். விசாரசருமர் சிவபெருமானிடத்தில் தன்னை மறந்திருந்தமையால், தந்தையின் வருகையை அறியாதிருந்தார். அதனால் விசாரசருமரின் தன்னுடைய கோபத்தால், சிவாபிசேகத்திற்கு வைத்திருந்த பாலினை தட்டிவிட்டார். சிவனை நிந்தை செய்த தந்தையை தண்டிக்கும் பொருட்டு அருகிலிருந்து குச்சியை எடுத்து விசாரசருமர் வீச, அது விசாரசருமரின் பக்தியால் மழுவாக மாறி அவர் தந்தையின் கால்களை வெட்டியது.
விசாரசருமர் தனது பூசையை தொடர்ந்தார். இதனைக் கண்ட சிவபெருமான், அவர் முன் தோன்றி தனக்கு சமர்ப்பிக்கும் அனைத்திற்கும் உரியவனாகும் சண்டேசுவர பதவியை அளித்தார். அதன் பின் விசாரசருமர் சண்டேசுவர நாயனார் என்று அழைக்கப்படுகிறார். இவருடைய காலம் கிபி-400-1000 என்று கருதப்படுகிறது.
சோழவளநாட்டில் மணியாற்றின் கரையில் சேய்ஞலூர் என்ற ஊர் ஒன்று உளது. இது முருகன் வழிபட்டதலமாகும். இவ்வூரில் அந்தணர் மரபில் எச்சத்தன், பவித்திரை எனும் தம்பதிகளுக்கு ஆண்மகவு ஒன்று பிறந்தது. பெற்றோர் அம்மழலைக்கு விசாரசருமா என்று நாமகரணமிட்டு அன்புடன் வளர்த்து வந்தனர். ஏழாம் வயதில் அந்தணர்குல மரபின்படி உபநயனம் செய்யப்பட்டது. இறையருளில் வைராக்கியமும் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்றுணர்ந்து எப்போதும் அவர் சிந்தையிலேயே இருப்பார்.
ஒருநாள் மறை ஓதும் மழலைப்பட்டாளத்துடன் விசாரசருமர் விளையாடிக்கொண்டிருந்தார். பசுக்கூட்டங்களுடன் மேய்ந்துகொண்டிருந்த அப்போதுதான் கன்றை ஈய்ந்த ஒரு பசு இடையனை கொம்பினால் முட்டப்போயிற்று. வெகுண்டெழுந்த இடையன் தன்கையிலுள்ள கோலால் அப்பசுவை நையப்புடைத்தான். பசுவை அடிப்பதைக் கண்டு பதைபதைத்த விசாரசருமர் இடையனைத்தடுத்து ஐயா! பசுக்கள் தம்முடலுறுப்புக்களில் தேவர்களையும், முனிவர்க்ளையும் புண்ணியதீர்த்தங்களையும் உடையனயாயுள்ளன. ஈஸ்வரனிறு பஞ்சகவ்யம் அளிக்கும் அப்பசுக்களை மேய்ப்பது சிறந்த தொழிலாகும் அதுவே சிவபெருமானை வழிபடும்நெறி என்று இடையனிற்கு எடுத்துத்துரைத்து அவ்வூர் வேதியரின் இசைவு பெற்று தானே ஆநிரை மேய்த்தலை மேற்கொண்டார்.
நாடோறும் பசுக்களை ஓட்டிச் செல்வார். புற்கள் மிகுந்த இடத்தில் மேய்ப்பார். நீர்நிலைகளுக்கு ஓட்டிச் சென்று நீரளிப்பார்.
பசுவின் பால் வளமுடன் பெருகிவருவதைக் கண்ட விசாரசருமர் நாம் ஏன் அப்பாலை சிவலிங்கத்திற்குத் திருமஞ்சனம் செய்யக் கூடாது எனச் சிந்தித்தார். சிந்தையில் உதித்ததைச் செயலிலும் செய்தார்.
மணியாற்றின் கரையில் ஒர் மணல் திட்டில் அத்திமரத்தின் நிழலில் சிவலிங்கம் ஒன்றை வெம்மண்ணில் சமைத்தார். பசுவின் பாலினால் திருமஞ்சனம் செய்தார், ஆடினார், பாடினார், அன்பினால் கசிந்து கண்ணீர் விட்டார்.தொடர்ந்து நாள் தோறும் சிவபூஜையும் அபிஷேகமும் நடத்தி வந்தார்.
இது தவறானது என்று ஒருவன் ஊருக்குச் சென்று பசுவின் சொந்தக்காரர்களிடம் விசாரசருமன் பாலை வீணாக்கித் தரையில் கொட்டுகின்றான் எனப் பழி கூறினான். அதுகேட்டு வெகுண்ட அந்தணர்கள் எச்சத்தனிடம் விசாரசருமரைக் கடிந்து கூறினர். அவர் தந்தையார் அவர் பொருட்டு மன்னிப்பு வேண்டி தன் மகனைத் தண்டிப்பதாகக் கூறினார்.
மறுநாள் விசாரசருமரும் பசுக்களை மேய்ப்பதற்குச் சென்றார். வழக்கம் போல மணியாற்றில் நீராடி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து. மலர்களை கொய்து மாலையாக் கட்டி குடங்களில் பாலைச் சேர்த்துக் வைத்துக் கொண்டு சிவபூசையைத் தொடங்கினார். பாற்குடங்களை எடுத்து சிவனிற்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்யலானார்.
சற்றுத் தூரத்தில் ஓர் மரத்தின் மேல் ஏறி ஒளிந்து கொண்டு நிகழ்வதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எச்சத்தன் பாலாபிஷேகத்தைக் கண்டவுடன் வேகமாக இறங்கி ஓடி வந்து, தன் கையிலுள்ள கோலால் விசாரசருமரை அடித்து காலால் எட்டி உதைத்தார். கடுஞ்சினம் கொண்ட தகப்பனார் அபிஷேகத்திற்கு வைத்திருந்த பாற்குடங்களை எட்டி உதைத்து கீழே கொட்டினார்.
இடையூறு செய்தவர் தன் தந்தை என்பதை அறிந்தும், அவர் செய்தது சிவாபாராதமாகையால் அவரது பாசத்தைக் களையவேண்டும் எனக் கருதி தமக்கு முன்னே கிடந்த கோலை எடுத்தார். அது உடன் ஓர் மழுவாயிற்று. அதைக் கொண்டு தன் தந்தையின் கால்களைத் துணிந்தார். எச்சத்தன் உயிர்நீத்தான். முன்போல் அவர் சிவபூஜை செய்ய முனைந்தார்.
விசாரசருமரின் பூஜைக்கு மகிழ்ந்த இறைவன் உமையம்மையோடு காட்சியளித்தார். விசாரசர்மர் அவரைத் தொழுது, பின் வீழ்ந்து வணங்கினார்.
சிவபெருமான் தன் திருக்கரங்களால் அவரை எடுத்து “நம்பொருட்டு பெற்ற தந்தையின் கால்களை வெட்டியெறிந்து இறக்கச்செய்தாய் ஆதலின் இனிமேல் நாமே உமக்குத் தந்தையானேம்” என்றருள் புரிந்து மார்போடு அணைத்து தழுவி உச்சிமோந்தார்.
விசாரசருமர் சண்டீச பதவி பெற்ற இன்னும் ஒரு வரலாறு ;
சிவபெருமான் திருக்கரம் தீண்டப்பெற்ற விசாரசருமன் பேரொளியோடு திகழ்ந்தார். அவரைத் தொண்டர்களுக்கெல்லாம் தலைவராக்கினார். “தாமுண்ட அமுதும் பரிவட்டம் மற்றும் மாலைகள் உனக்கே ஆகுக” என்றுரிமையாக்கி “சண்டீசன்” என்ற பதவியையும் தந்து அருள்பாலித்து தம்முடியில் இருந்து கொன்றை மலர்மாலையை எடுத்து விசாரசருமருக்குச் சூட்டினார். விசாரசருமர் “சண்டேஸ்வர நாயனார்” ஆனார். சண்டீச பதவியும் பெற்றார்.
எச்சத்தன் சிவபராதம் செய்ததாலும், சண்டேஸ்வர பெருமானால் தண்டிக்கபட்ட பாசம் நீங்கப் பெற்று சுற்றத்தோடு சிவலொகம் சென்றார்.
சண்டேஸ்வரர் சன்னதியில் கைதட்டுவது ஏன்?
சிவன் கோவில்களில் உள்ள சண்டிகேஸ்வரர் சன்னதி சிவ சன்னதி மூலவரின் அபிசே நீர் விழும் கோமுகின் அருகில் இருக்கும், இங்கு சுற்றி வரும் சிவ பத்தர்கள், சண்டிகேஸ்வரின் சன்னதியின் முன் பலமாக கைதட்டி வணங்குவார்கள். இது தவறு, சண்டிகேஸ்வரர் எப்போதும் தியானத்தில் இருப்பார். அவரின் அமைதியை கெடுக்கக் கூடாது, அவர் ஈஸ்வர வரம் பெற்றவர், சிவ சன்னிதானத்தில் சிவ பக்தர்களின் வருகையை பதிவு செய்பவர் நமது கோரிக்ைகயை சிவனிடம் எடுத்துரைப்பவர் எனவே அவர் சன்னதி வந்தவுடன் மெதுவாக கைதட்டி வந்தேன், வந்தேன், சிவ தரிசனம் கண்டேன், கண்டேன் என்று கூறி நமது கோரி்க்கையை சிவனாரிடம் எடுத்துரைக்க வேண்டும், அவர் நம்பால் சிவனாரிடம் நம் வருகையையும் வேண்டுகோளையும் வைப்பார் என்பது ஐதீகம்