Home ஆன்மீக செய்திகள் இலங்கை சைவத் திருக்கோயில் — திருக்கேதீஸ்வரம்

இலங்கை சைவத் திருக்கோயில் — திருக்கேதீஸ்வரம்

by Sarva Mangalam

புராதன இலங்கையின் சிறப்பு வாய்ந்த ஐந்து ஈஸ்வரங்கள் என அன்புடன் அழைக்கப்படும் ஐந்து சிவன் திருக்கோயில்களுள் திருக்கேதீஸ்வரம் ஒன்றாகும். தமிழில் ‘கந்த புராணம்‘ -என்ற புராண நூலிலும் இலங்கைத் தீவின் அழகும், அத்தீவில் நிலவிய சிவ வழிபாடும், மக்களின் வாழ்க்கை முறைகளும் சிறந்த முறையில் எடுத்தியம்பப்படுகின்றன. இராமாயணக் கதை இலங்கைத் தீவு பற்றிக் குறிப்பிடும் உண்மைகளைப் பார்ப்போம்: திருக்கேதீஸ்வரத் திருக்கோயில் இராமாயண காவியத்திலேயே சிறந்த முறையில் குறிப்பிடப்படுகின்றது.
இராவணனின் மனைவியர் பலர். அவர்களுள், பேரழகு மிக்கவளும் , பட்டத்து ராணியாக விளங்கியவளுமான மண்டோதரி சிறந்த கற்புக்கரசி. இவள் மயன் என்ற சிற்றரசனின் மகள். மயன் ஆட்சி செய்த இடத்தின் பெயர் மாதோட்டம் என்ற மாந்தை. மண்டோதரி சிறந்த சிவபக்தை என்பதும், அவள் மாதோட்டத்தில் இருந்த திருக்கேதீஸ்வரத் திருக்கோயிலில் சிவபெருமானை வழிபாடு செய்ததையும் பண்டைய இதிகாசங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

திருக்கேதீஸ்வரத் திருக்கோயிலில் பிருகு என்ற மகாமுனிவர் சிவபெருமானை வழிபட்டதை ‘மகா முனிவர்கள் வரலாறு‘ நமக்கு எடுத்துரைக்கின்றது. நவக்கிரகங்களில் ஒருவரான கேது பகவான் இத் திருக்கோயிலில் சிவபெருமானை வழிபட்டுத் தமது சாபம் நீங்கப்பெற்றார் என்று ‘தக்ஷிண கைலாச மான்மியம்‘ என்ற பண்டைய வரலாற்று நூல் கூறுகின்றது. கேது பகவான் பக்தியுடன் பூசித்ததாலேயே இத் திருக்கோயிலுக்குத் ‘திருக்கேதீஸ்வரம்’ என்னும் பெயர் உண்டாயிற்று.
இந்து மதத்தின் மிகப் பெரிய புராண நூலான ‘ஸ்கந்த புராண’த்தில் (இது முருகப்பெருமானின் வரலாற்றுச் சிறப்புகளைக் கூறும் நூல் என்பது உங்களுக்குத் தெரியும். மேலும், முருகப்பெருமான் குற வள்ளியைத் திருமணம் செய்த திருத்தலம் இலங்கையிலுள்ள கதிர்காமம்தான் என்பதும் ஒரு கர்ண பரம்பரைக் கூற்று.) மூன்று அத்தியாயங்களில் இலங்கையைப் பற்றியும், அத்தீவின் அழகைப் பற்றியும் அங்கே வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகளையும் பற்றி விளக்கிவிட்டு, இலங்கையின் முக்கியமான இரண்டு புராதனமான சிவன் திருக்கோயில்களான திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் ஆகியவற்றின் தோற்றத்தைப் பற்றி நமக்கு எடுத்துரைக்கின்றது.

அப் புராணத்தின்படி, முன்னொரு காலத்தில், வாயுதேவனுக்கும், ஆதிசேடனுக்கும் யுத்தம் மூண்டபோது, ஆதிசேடனைத் தாக்குவதற்காக வாயுதேவன் மகா மேரு மலையின் சிகரங்களில் மூன்றை எடுத்து வீசினார். அந்தச் சிகரங்களில் இரண்டு இலங்கைத் தீவில் வீழ்ந்தன. ஒன்று திருக்கேதீஸ்வரமாகியது. மற்றொன்று, திருக்கோணேஸ்வரமாகியது. மகா மேரு மலை இறைவன் உறையும் புனிதமான மலையாகையால், சிவபெருமான் இத் திருத்தலங்களையும் தமது உறைவிடங்களாக்கிக் கொண்டார். ஆகையால், மகா மேரு மலையின் புனிதத்துவமும், பெருமையும் திருக்கேதீஸ்வரத் தலத்துக்கும் உள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புகள் ‘தக்ஷிண கைலாச மான்மியம்’ என்ற பண்டைய தமிழ் வரலாற்று நூலிலும் விளக்கப்பட்டுள்ளது. புராண காலத்தைக் கடந்து வரும்போது, அடுத்ததாக, சைவ சமயத்தின் சமய குரவர்களான திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் ஏழாம் நூற்றாண்டிலும், சுந்தர மூர்த்தி நாயனார் எட்டாம் நூற்றாண்டிலும் இந்தத் திருக்கோயிலுக்கு வருகை தந்து இத் திருக்கோயிலில் உறையும் திருக்கேதீஸ்வரரின் சிறப்பைப் பற்றியும், அதன் அருகே அமைந்துள்ள புனிதமான பாலாவித் தீர்த்தத்தின் மகிமைகளைப் பற்றியும் தமது தேவாரங்களில் பாடியுள்ளார்கள்.

இந்தியாவிலும், இலங்கையிலும் அமைந்துள்ள 275 தேவாரப் பாடல் பெற்ற சிறப்புத் தலங்களுள் இத் திருக்கோயிலும் ஒன்றாகும். ஈழத்திலுள்ள சிவன் திருக்கோயில்களுள், திருக்கேதீஸ்வரமும், திருக்கோணேஸ்வரமும் மட்டுமே இவ்வாறு பாடல்பெற்ற தலங்களாக விளங்குவது இவற்றின் தனிச் சிறப்பாகும்.

திருக்கேதீஸ்வரம் திருக்கோயில் இலங்கையில் மன்னார் மாவட்டத்தில், மன்னார் நகருக்கு ஏழு மைல் தொலைவில், மாதோட்டம் என்ற புராதனமான துறைமுக நகரத்தில் அமைந்துள்ளது. பண்டைக் காலத்தில் இத் திருக்கோயிலும், மாந்தை என்று அழைக்கப்படும் மாதோட்டத் துறைமுகமும் உலகப் புகழ் பெற்று விளங்கின. மாதோட்டத் துறைமுகம் முக்கியமான வியாபாரத் துறைமுகமாக விளங்கியது. கிரேக்கர்களும், ரோமானியர்களும், அராபியர்களும், எத்தியோப்பியர்களும், பெர்சியர்களும், சீனர்களும், ஜப்பானியர்களும் மற்றும் பர்மியர்களும் கடல் கடந்து இத் துறைமுகத்துக்குக் கப்பல்களில் வந்திறங்கினார்கள். இலங்கையிலிருந்து வியாபாரப் பொருட்களை வாங்கிச் சென்றார்கள்.

பிற்பட்ட காலகட்டத்தில், இலங்கையைப் போர்த்துக்கேயர்கள் கைப்பற்றியபோது, அவர்கள் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காகவும், இந்துத் திருக்கோயில்களில் நிறைந்திருந்த செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் இந்துக் கோயில்கள அனைத்தையும் இடித்துத் தரைமட்டமாக்கினார்கள்.
அவ்வாறே, திருக்கேதீஸ்வரத் திருக்கோயிலும் 1505 ஆம் ஆண்டளவில் போர்த்துக்கேயர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டது.

அந்தத் திருக்கோயிலின் அழகும், வலிமையும் வாய்ந்த கருங்கற்கள் மன்னார் கோட்டையையும், ஊர்காவற்றுறை (Kayts) கடற்கோட்டையையும் மற்றும் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தையும் கட்டுவதற்கு உபயோகிக்கப்பட்டன. அப்போது திருக்கோயிலிலிருந்த செல்வங்கள் யாவும் கொள்ளையடிக்கப் பட்டன. ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
மூன்று நூற்றாண்டுகளுக்குப்பின்னர், புராதனமான இத் திருக்கோயிலின் இடிபாடுகளில் மீதமிருந்த பொருட்கள் 1894 ஆம் ஆண்டு நிகழ்ந்த புதைபொருள் ஆராய்வின்போது கிடைக்கப்பெற்றன.

அந்த ஆராய்ச்சியின்போது, திருக்கேதீஸ்வரப் பெருமானின் சிவலிங்கமும் மேலும் பல வழிபாட்டுத் திருவுருவங்களும் கூட இறைவனருளால் கிடைக்கப் பெற்றன. அன்றிலிருந்து, இத் திருக்கோயிலை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவல் ஈழத்துச் சைவப் பெருமக்கள் மனங்களில் உதயமானது.

ஆம், சைவ சமயம் தழைத்தோங்கப் பல வழிகளிலும் பாடுபட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் அருமுயற்சியாலும், ஈழத்துச் சைவப் பெருமக்களின் ஒன்றுசேர்ந்த உழைப்பாலும் 1910 ஆம் ஆண்டில் இத் திருக்கோயில் புதிய பொலிவுடன் சிவாகம விதிகளுக்கு இணங்க மீண்டும் கட்டப்பட்டது. பாலாவிப் புனித தீர்த்தக் குளமும் புதுப்பிக்கப்பட்டது.

1952 ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) செய்யப்பட்டது. மேலும் சில அகழ்வாராய்ச்சிகளின்பின்னர், இத் திருக்கோயிலில் மீண்டும் 1976 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் திகதி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பண்டைய அழகுத் திருக்கோயில் தற்போது இல்லையென்றாலும், சிவாகம விதிகளுக்கு இணங்கவும், திராவிடச் சிற்பக்கலை முறைகளுக்கிணங்கவும் தற்போதுள்ள திருக்கோயில் அழகும் சிறப்பும் ஒருங்கே அமையும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. ஈழத் திருநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இத் திருக்கோயிலில் இறைவனை வழிபடுவதற்காக மக்கள் கூடி வருகின்றார்கள். மகா சிவராத்திரி விழா இத் திருக்கோயிலில் வெகு விமரிசையாக வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அருள்மிகு திருக்கேதீஸ்வரப் பெருமான் திருவடிகள் போற்றி!!

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி !! சீரார் திருவையாறா போற்றி!! போற்றி!!

You may also like

Translate »