#வாசியோக #அன்பர்கள் #கவனிக்க
மனிதன், பஞ்ச பூதங்கள் எனப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் தன்மையால் ஆனவன். மனிதன், குழந்தையாகப் பிறந்து நிலத்தில் உழல்கிறான். உணவுப் பொருள்களில் நீரைச் சேர்த்து, நெருப்பில் இட்டு சுவையாக அருந்தி, இதமாக வருடிச் செல்லும் காற்றைச் சுவாசிக்கிறான்.
சந்தோஷமாக,வளமான வாழ்க்கையில் தன்னை மறந்த நிலையில் அவன் ஆகாயத்தில் ஆனந்தமாகப் பறக்கிறான்.
ஒரு மனிதனை, பஞ்ச பூதங்கள் அரவணைத்துச் சென்றால் அவன் வாழ்கிறான் இல்லையெனில், நிலத்தில் சடலமாக வீழ்கிறான்.
ஒருவனுடைய உயிர், நீரோட்டம் போன்றது. உயிரற்ற உடலை மண்ணில் புதைப்பதும், நெருப்பில் எரிப்பதும் நிகழ்கிறது. மண்ணில் புதைத்தாலும்,எரித்தாலும் உயிரானது காற்றில் கலந்து, ஆகாயத்துக்குச் சென்றுவிடுகிறது.
உடலை வைத்துத்தான் இந்த உலகத்தில் நமக்கு இருப்பிடம்.
இதை எல்லோரும் உணர வேண்டும். ஒருவரின் லட்சியங்கள் எவ்வளவு உயர்ந்ததாக வேண்டுமானலும் இருக்கலாம்.
ஆனால் உடல் நலம் ஒத்துழைக்கவில்ல
ை என்றால், பாதிக்கிணறு தாண்டிய கதைதான். எனவே, உடலைப் பாதுகாத்து, நோயில்லா நெறியை நமக்கு நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
உடல் என்பது, எலும்புகளை கை கால்களைப் போட்டு நீட்டி வைத்து, அவற்றின் ’இருப்பிடம்’ மாறிவிடாமல் இருக்க நுண்ணிய துவரங்களால் இணைத்து, நரம்புகளால் இழுத்துக் கட்டி, தோலால் மூடி, அவற்றுக்கு இடையே தசைகளைச் சேர்த்து, ரத்தத்தை ஊற்றி, உள்ளே வாயு எனப்படும் பிராணனை உள்ளடக்கி, உடல் என்ற ஓர் உருவம் உருவாக்கப்பட்டிருப்பதாக சித்தர் பாடல் நமக்கு விவரிக்கிறது.
‘அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
என்பது சித்தர் மொழி. இந்த உலகில் உள்ளதுதான் நம் உடலிலும் இருக்கிறது.நம்ம
ுடைய உடலில் உள்ளதுதான் இந்தஉலகிலும் இருக்கிறது என்று அர்த்தம்.
எனவே, உடலுக்கு ஏதாவது கேடு ஏற்பட்டால், உலகில் காணும் தாவர வர்க்கங்களை, ஜீவ வர்க்கங்களை மருந்தாக்கித் தேகம் நிலைக்கச் செய்ய வேண்டும் என்பது சித்தர்களின் வாக்காகும்.
பல கோடி ஆண்டுகளாக இந்த உலகமும், மனித வர்க்கமும் இருந்து வருகின்றன. மனிதன் இறப்பதற்காகப் பிறப்பவன்.
இடையில் அவன் வாழ்க்கை என்பது சமூகப் பரிணாம வளர்ச்சிக்காக, இறைவன் தந்த படிப்பினை. எனவே, பிறந்த மனிதன், வளர்ந்து, வாழ்ந்து நோய்வாய்ப்பட்டு மடிந்தே ஆக வேண்டும்.
நோயால் இடையில் மடிவதை, அதாவது வாசியின் இலக்கு அடையும் முன் மடிவதை இறைவன் விரும்பமாட்டான். இந்த உலகில் தோன்றியதன் நோக்கத்தைச் சாதிக்கும் பொருட்டு, நம் உடலுக்குச் சக்தி தேவை. அத்தகைய உயிர்ச்சக்தியை சித்தர்கள் அருளிய மூலிகைகள் நமக்கு அளிக்கின்றன.
எனவே, இறைவன் நமக்கு அளித்த அரிய வரம், இந்த உடல், நல்ல பழக்கவழக்கங்களால் இந்த உடலை இந்த உலகில் நிலைநிறுத்தி, காரியமாற்றி, இலக்கை அடைவோம்.
பாபாஜியின் கிரியா யோகம்
என்றால் என்ன?
===========================
பாபாஜியின் கிரியா யோகமானது கடவுள் எனும் மெய்யறிவுடன் ஒருமித்து ஆன்மானுபவம் பெறுவதற்கான ஒரு விஞ்ஞானபூர்வமான கலையாகும். பண்டைய பதினெண் சித்தர் மரபில் கற்பிக்கப்பட்ட யோக முறைகளைத் தொகுத்து அவற்றிலிருந்து கிரியா யோகத்திற்கு உயிரூட்டினார் இந்தியாவின் மாபெரும் சித்தர்களில் ஒருவரான மஹாவதார் பாபாஜி. கிரியா யோகமானது ‘கிரியாக்கள்’ எனப்படும் பல்வேறு பயிற்சிகளை 5 கிளைகளாகப் பிரித்து உட்கொண்டுள்ளது.
கிரியா ஹத யோகம்:
————————–
உடலைத் தளர்த்திக் கொள்வதற்கான பயிற்சிகளான ஆசனங்கள், ‘பந்தங்கள்’ எனப்படும் தசைப்பூட்டுக்கள் மற்றும் உள-உடல் குறிகள்/அசைவுகளான முத்திரைகளை உள்ளடக்கியதுதான் கிரியா ஹத யோகம். இவற்றை பயிற்சி செய்வதன் மூலம் மிகுந்த ஆரோக்கியம் மற்றும் மன அமைதியை பெற முடியும். அத்தோடு, உடலில் உள்ள சக்தி மையங்களான சக்கரங்கள் மற்றும் சக்தியின் வழித்தடங்களான நாடிகளை எழுப்பவும் முடியும். பாபாஜி, மிகுந்த பயன் தரக்கூடிய குறிப்பிட்ட 18 ஆசனங்களை இதற்காக தேர்ந்தெடுத்தார். இவை பல்வேறு நிலைகளை உட்கொண்டு ஜோடிளாகவும் கற்பிக்கப்ப்டுகின்றது. நமது ஸ்தூல உடலை நாம் நமக்காகப் பேணாமல், இறைவனின் கோவிலுக்கான ஒரு வாகனமாகப் பேணிடல் வேண்டும்.
கிரியா குண்டலினி பிராணாயாமம்:
———————————–
இந்த சக்தி வாய்ந்த சுவாசப் பயிற்சியின் மூலம் ஒருவரது அபரிதமான சக்தி மற்றும் மேல்-மன விழிப்புணர்வை எழுப்பி தம் முதுகுத்தண்டின் அடிப்பகுதியினின்று உச்சந்தலை வரையுள்ள ஏழு முக்கியமான சக்கரங்கள் வழியாக பாய்ச்ச முடியும். இது ஒவ்வொரு சக்கரத்துடனும் தொடர்புடைய மறைந்திருக்கும் பேராற்றலை வெளி கொணர்ந்து ஐந்து கோசங்களிலும் மிகுந்த ஆற்றல் வாய்ந்தவராக ஒருவரை மாற்றுகிறது.
கிரியா தியான யோகம்:
—————————-
படிப்படியான நிலைகளாக அமைந்துள்ள இத்தொடர் தியானப் பயிற்சி நம் மனதைக் கட்டுக்குள் அடக்கி, நமது ஆழ் மனதை தூய்மை செய்வதற்கான ஒரு விஞ்ஞான பூர்வமான கலையாகும். இதன் மூலம் மனத்தெளிவு, மனதை ஓர் நிலை படுத்தும் திறன், தொலை நோக்கு, அறிவு மற்றும் படைப்பாற்றல் வளர்வதோடு மட்டுமல்லாது மூச்சற்ற நிலையில் இறைவனிடம் ஒன்றிடும் ‘சமாதி’ நிலையில் ஆன்மானுபவமும் பெறவியலும்.
கிரியா மந்திர யோகம்:
————————–
அமைதியாக மனதிற்குள் ஜெபிக்கப்படும் மெல்லிய ஒலிகளின் மூலம் உள்ளுணர்வு, அறிவாற்றல் மற்றும் சக்கரங்களை எழுப்பலாம். ஒரு மந்திரமானது, ‘நான்’ எனும் எண்ணத்தைச் சார்ந்த மனதின் செயல்பாடுகளுக்கு ஒரு மாற்றம் தந்து அபரிதமான சக்தியினைச் சேமிக்க வழி செய்கின்றது. அதே நேரத்தில் ஆழ் மனதின் பழக்கங்கள் தூய்மையும் அடைகின்றது.
கிரியா பக்தி யோகம்:
——————–
நமது ஆன்மாவினுள் இறை தேடலைப் பயிர் செய்தல். பக்தி சார்ந்த செயற்பாடுகள் மற்றும் தொண்டுகளின் மூலம் நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆன்மீக பரவசத்தை எழுப்பலாம். பக்தி பாடல்கள், சடங்கு-வழி வழிபாடு, தீர்த்தயாத்திரைகள் மற்றும் இறை வழிபாட்டின் மூலம் அன்பிற்கினிய ஆண்டவனை அனைத்திலும் காண்பதினால் நமது செயல்கள் அனைத்திலும் இனிமை கலக்கிறது.