விஷ்ணு அவதார சன்னதிகள்: அவதாரங்கள் எண்ணற்கரியன. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முக்கிய மும்மூர்த்திகளும் பல உருவில் பன்முறை அவதரித்திருந்தாலும், பொதுவாக, அவதாரம் என்றவுடன் நாம் விஷ்ணுவையே நினைக்கிறோம். அவரின் முக்கியப்பத்து அவதாரங்களிலும் சில மட்டுமே புராணங்களிலும், இதிகாசங்களிலும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ராமனையும், கிருஷ்ணனையும் போற்றுகின்ற அளவுக்கு பிற அவதாரங்கள் பாடப்படவில்லை. மேலும் வராக அவதாரம், மத்ஸ்ய அவதாரம், கூர்ம அவதாரம், வாமனஅவதாரம் போன்றவற்றின் அவதாரப் பணி சீக்கிரமே நிறைவேறி விடுவதால். அந்த அவதார மூர்த்திகட்கு, தனிக்கோயில், தனிச்சன்னதி அதிகமில்லை. பெரிய அளவிலான பெருமாள் ஆலயங்களில் கூட, எல்லோருக்குமாக சேர்ந்தே தசாவதார சன்னதி உள்ளது. சில கோயில்களில் மட்டுமே, மூலவர் சன்னதியோடு, பிற அவதார மூர்த்திகளுக்கு தனிச் சன்னதிகள் உள்ளன. அவற்றிலும் ராமர், கிருஷ்ணருக்கே அதிகமாக உள்ளன. மே<லும், சுதர்சனர் (சக்கரத்தாழ்வார்) சன்னதியுள்ள ஆலயங்களில், சக்கரத்தாழ்வாரின் பின்புறம் நரசிம்மரின் உருவம் அமைக்கப்படுவதால், திருச்சுற்றில், நரசிம்மருக்கு தனிச்சன்னதி இருப்பது குறைவே. தனிச்சன்னதி ஏற்படுத்தும் போது, வடமேற்கு (வாயு) மூலையில் அமைப்பது வழக்கமாக உள்ளது.
நரசிம்மர் அவதார வரலாறு: மகாவிஷ்ணு இரண்யகசிபுவின் கொடுமையில் இருந்து பிரகலாதனைக் காப்பாற்றவும், இரண்யகசிபுவின் அறியாமையைப் போக்கவும் எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரமாகும். பக்தனோ, பகைவனோ யாராயினும் சரி எவர் காட்டிய இடத்திலும் தான் இருப்பதை மெய்ப்பிப்பதற்காகவே நரசிம்ம மூர்த்தி தூணிலிருந்து தோன்றுகிறார்.
நரசிம்ம அவதார தத்துவம்: கோள்களும் நக்ஷத்திர மண்டலங்களும் எண்ணற்கரியவை. கணக்கிட இயலாத அளவுக்கு, அவை கோடிக் கோடிக் கோடி வருடங்கள் பழமையும் ஆனவை. அவற்றில் எல்லாம் நம்மால் நம்பமுடியாத அளவுக்கு, பூதாகாரமான மிகமிகப் பெரிய உயிரினங்கள் பல வினோத வடிவங்களில் இருக்கின்றன. இவ்வுண்மையை, பல நாட்டவரும், கலாச்சாரத்தவரும், அண்மைக் காலத்தில் தான், அகழ்வு ஆராய்ச்சிகள் மூலமாக, அறியத் துவங்கியுள்ளனர். அது வரை, பாரத மண்ணினர், வேதங்களிலும் புராணங்களிலும், இதிகாசங்களிலும் விவரித்த, ஒட்டு (ஹைப்ரிட்)த்தாவரங்கள் போன்ற, வினோதமான உருவங்களை மிருக உறுப்பும், மனித உறுப்பும் இணைந்த நரசிம்மர் போன்ற வடிவங்களை பொய் என்றே சாதிக்க முயன்றனர். இருந்திருக்காலம் என்று கூட ஏற்றுக் கொள்ளவில்லை. கிராமத்திலேயே வாழ்பவர்களுக்கு, நகரங்களில் உள்ள சுகபோகப் பொருட்கள் தெரிவதில்லை; உயிரைப் பறிக்கும் பல ஆபத்துக்களிருப்பதும் தெரிவதில்லை. அதே போல, பண்டைக் காலத்தில் வாழ்ந்தவனுக்கு எதிர்கால உலகின் போகங்களும் தெரிந்திருக்காது; மனிதனை மாய்க்கக்கூடிய பொருள்களும் , நிலைகளும் பெருகிவிடுவதும் தெரிந்திருக்காது. இந்த நிலையினால் தான், பல அசுரர்களும், தேவர்களும், தம் பேராசைகள் நிறைவேறுவதற்காகத் தவம் செய்து , பின்னர், பெருநஷ்டம் அடைந்ததைக் காண்கிறோம். கற்பனை செய்யவும், அனுமானிக்கவும் முடியாத அண்ட சராசரங்களில் அவர்கள் ஆசைப்பட்டதின் பரிமாணமும், சாவு ஏற்படுத்தக் கூடியதாக நினைத்த சூழல்களும் மிகமிகக் குறைவே. பிறந்தவை மறைந்தே ஆக வேண்டும்; எதுவுமே, என்றுமே ஒரே உருவில் இருக்க முடியாது என்பதும் இயற்கை நியதி. இதை உணராது, பின்னால் தேவையாயிருக்கும் என்று எண்ணி, நாம் தற்போதைய செலவைக் குறைத்துக் கொண்டு, நீண்டகால சேமிப்புத் திட்டங்களில் பணம் கட்டுகிறோம். இன்னின்ன வகைச் செலவினமோ, ஆபத்தோ வந்தால் அவற்றைச் சமாளிப்பதற்காக, அலுவலகங்களிலும், வங்கிகளிலும், ஆயுள் காப்பீட்டுக் கழகங்களிலும், இன்னும் பல சேமிப்புத் திட்டங்களிலும் சேருகிறோம். இது போன்ற செயல்பாடே, முன்பு, பல்லோரும் தவத்தினால் போகங்கள் பெற்றதும், இறப்பை ஒத்திப்போட முயன்றதும் ஆகும். காப்பீட்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடியே நாம் இறக்கப் போவதில்லை. அவ்வகையிலேயே இறந்தாலும் கூட சேமித்த பணத்தை, நாம் அனுபவிக்கப் போவதில்லை. மேலும், பின் சந்ததியினரை நாம் நினைத்தபடியே, நம் சேமிப்பை பயன்படுத்திடச் செய்யவும் நம்மால் முடியாது. பிறப்பும், மறையும் நிரந்தர தோற்ற – அழிவு அல்ல, இதை உணராது, சாமர்த்தியராக நினைத்துக்கொண்டு, நமக்குத் தெரிந்த அனைத்து வகைகளாலும் இறப்பு வரக் கூடாது என வரம் வேண்டுவது அசட்டுத்தனமே.
உதாரணமாக, அருகிலுள்ள சிறு பள்ளத்தில் விழுந்தாலும் சாவு ஏற்படலாம் என்பதை உணராது, நாம் மலையிலிருந்து உருண்டாலும் சாகக் கூடாது என்று வரம் கேட்கிறோம்; தன் காதுக்குள் அல்லது தும்பிக்கையுள் நுழைந்த மிகச் சிறு எறும்போ, சிலந்தியோ கூடத் தன் உயிரைப் போக்கலாம் என்பதை அறியாத யானை, பெரிய உயிரினங்களால் ஆபத்து வரக்கூடாது என்று கேட்கிறது. இது போலவே தான் இராவணன், மனிதன் தன்னை என்ன செய்திட முடியும் என்ற இறுமாப்பில், அவனை மட்டும் குறிப்பிடாது, பிற எல்லாவற்றிலிருந்தும் சாகாவரம் பெற்று, வரங்களின் பயன்கள் விரயமானவுடன், மனித வடிவில் வந்த இராமனால் அழிந்துபடுகிறான்.
பல்-இன இணை-உருவங்கள் இருக்க முடியும் என்றும், அவற்றாலும் இறப்பு ஏற்படலாம் என்றும் அறியாததால் தான் இரண்யகசிபுவும், இணை உருவாக அவதரித்த நரசிம்ம மூர்த்தியால் அழிகிறான். தொன்று தொட்டு, சிலர், தானே தெய்வமெனவும், தனக்கு மேலான சக்தியில்லை; யாவரும் தன்னை மட்டுமே வழிபட வேண்டும் என்றும் கூறி, பல்லோரை, பல்வகையிலும் பயமுறுத்தி, பலாத்காரப்படுத்தி வந்துள்ளனர். அவர்களில் இரண்யகசிபுவும் ஒருவன். அத்தகையவரின் போக்கைக் கண்டிப்பதற்காகவும், களைவதற்காகவும் பரம்பொருள் எடுத்த அவதாரங்களில் நரசிம்ம அவதாரமும் ஒன்று. நமக்கு ஆசைப்படவும் தெரியவில்லை; அழியக் கூடிய நிலைகளும் தெரியவில்லை. நம் சிற்றறிவுக்கு எட்டியதே முழுமை – உண்மை என்று நினைத்து, செயல்பட்டு, சீரழிவதை விட நம்மை உருவாக்கிய சக்தி, நமக்கு நன்மையானதையே நவிலும் என்பதை உணர்த்திட நிகழ்ந்தவையே, அனைத்து அவதாரங்களும் ஆகும்.
நரசிம்மர் வழிபாடு: நரசிம்மர் பாரதம் முழுதும் வணங்கப்பட்டாலும், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் தான், அவருக்குத் தனிக்கோவிலும், சிறப்பு வழிபாடும் அதிகம்.
வைகாசி மாதம் வளர்பிறை சதுர்தசியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை சந்திப்பொழுதில் நரசிம்மரை வழிபடுவதே நரசிம்ம ஜயந்தியாகும். சோமப்பிரதோஷமும், சனிப்பிரதோஷமும் சிறப்பு போல நரசிம்ம ஜெயந்தி திங்கட்கிழமையிலும், நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதியிலும் வழிபடுதல் சிறப்பு. இவ்விரதத்தை அனுஷ்டித்ததாலேயே, கயவனாக இருந்த சுவேதன், மறுபிறவியில், பிரகலாதனாகப் பிறந்து, பெருமாள் அருள் பெற்றதாக, விஷ்ணுவே கூறியிருப்பதால், அவர் நரசிம்மராக உருவெடுத்தது பிரகலாதனுக்காக மட்டுமல்ல, ஒரு முறை தான் அல்ல என்பதும் தெரிகிறது. இறைவனை வழிபட எந்நேரமும் உகந்ததே என்றாலும், நம் வசதி கருதி, சில நல்-நிகழ்வுகளோடு தொடர்புடைய நாட்களில் அல்லது நேரத்திலாவது வழிபட வேண்டும் என்பதற்காகவே சதுர்த்தியில்/ சஷ்டியில்; செவ்வாய்/வெள்ளியில்; காலை அல்லது மாலையில் என்று வெவ்வேறு சமயத்தில் வெவ்வெறு தெய்வங்களை வழிபடுவது மரபாக உள்ளது. அன்றாட நரசிம்மர் வழிபாட்டில், பிரதோஷ வேளை (சூரியன்மறைவுக்கு முன் 1.30 மணியும், பின் 1.30 மணியும்) ஆக மொத்தம் (மாலை 4.30 முதல் 7 .30 வரை 3 மணி) நேரம் சிறப்பு. அதுவும், சதுர்தசி நாளில் சிறப்பு. சித்திரை மாத வளர்பிறை அக்ஷய திருதியை வழிபாடும் சிறப்பு.
நரசிம்மர் விஷ்ணுவே என்பதால், பொதுவாக, விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும், மலர்கள், வஸ்திரம், நைவேத்யம் ஆகியவற்றை உபயோகிக்கலாம். எனினும் செவ்வரளி போன்ற சிகப்பு வண்ண மலர்களும், சர்க்கரைப் பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளும் சிறப்பு. ஹோமத்திற்கு தேன் கலந்த மல்லிகை மலர்கள் உகந்தது. குளுமைப் பொருளான சந்தனத்திலும் செஞ்சந்தனமும், சந்தனாதி தைலக்காப்பும் சிறப்பு. அவரவருக்கு ஏற்றபடி 1,3,6,8,10,19,32,62 அக்ஷர நரசிம்ம மந்திரத்தை ஜபிக்கலாம்; துதிகளைக் கூறிடலாம்.
தமிழகத்துள்ள நரசிம்மர் ஆலயங்கள்
விஷ்ணு மூலவராக உள்ள ஆலயங்கள் தமிழகத்தில் சுமார் 5,200 உள்ளன. அவற்றில் பெருமாளுக்கு வழங்கும் சுமார் 6000 நாமங்களில், பரவலாக உள்ளதில் நரசிம்மரும் ஒன்று அப்பெயரோடு சுமார் 100 கோயில்கள் உள்ளன. அங்கெல்லாம், பெருமாள் வெறுமனே நரசிம்மர் என்று மட்டும் அழைக்கப் படுவதில்லை. உருவ அமைப்பு ஏந்தியுள்ள ஆயுதங்கள், பார்வை நிலை, அணிந்துள்ள ஆபரணங்கள், இருக்கும் பாங்கு, அருட்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு அடைமொழியோடு 30 திருப்பெயர்கள் உள்ளன. அவை
1. அகோபில நரசிம்மர் 2. அழகிய சிங்கர்
3. அனந்த வீரவிக்ரம நரசிம்மர் 4. உக்கிர நரசிம்மர்
5. கதலி நரசிங்கர் 6. கதலி லக்ஷ்மி நரசிம்மர்
7. கதிர் நரசிம்மர் 8. கருடாத்ரிலக்ஷ்மிநரசிம்மர்
9. கல்யாணநரசிம்மர் 10. குகாந்தர நரசிம்மர்
11. குஞ்சால நரசிம்மர் 12. கும்பி நரசிம்மர்
13. சாந்த நரசிம்மர் 14. சிங்கப் பெருமாள்
15. தெள்ளிய சிங்கர் 16. நரசிங்கர்
17. பானக நரசிம்மர் 18. பாடலாத்ரி நரசிம்மர்
19. பார்க்கவ நரசிம்மர் 20. பாவன நரசிம்மர்
21. பிரஹ்லாத நரசிம்மர் 22. பிரஹ்லாத வரதநரசிம்மர்
23. பூவராக நரசிம்மர் 24. மாலோல நரசிம்மர்
25. யோக நரசிம்மர் 26. லட்சுமி நரசிம்மர்
27. வரதயோக நரசிம்மர் 28. வராக நரசிம்மர்
29. வியாக்ர நரசிம்மர் 30. ஜ்வாலா நரசிம்மர்
முக்கிய நரசிம்மத் தலங்கள்
மிகப்பிரபலமான நரசிம்மர் தலங்களும் அவற்றைப் பற்றி சில முக்கிய குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
அ) ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலங்கள்
ஜோதிஷ்மட்: உ.பி. மாநிலம். ஆதிசங்கரர் எழுப்பிய ஆலயத்தில் உக்ர நரசிம்மர். 246449.
அகோபிலம் (சிங்கவேள் குன்றம்) : ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் நந்தியாலின் தென்கீழ் 48 கி.மீ. நவநரசிம்ம ÷க்ஷத்ரம். மலையில் 9 கி.மீ. ல் அகோபில நரசிம்மர் கோயில். குடவரை நரசிம்மர் வெளியான தூண் 2கி.மீ ல் உள்ளது. அடிவாரத்து பிரகலாத வரதன் கோயிலே அகோபில மடத்தின் தலைமையகம். இம்மடத்தின் அழகிய சிங்க ஜீயர், ஸ்ரீரங்கத்தில் செய்த அபூர்வ கோபுரத் திருப்பணியை எவரும் மறக்க முடியாது. ஆதிசங்கரரை, காபாலிகர்களிடமிருந்து, நரசிம்மர் காப்பாற்றிய தலம். (மங்க-திருமங்) (பாசு – 10) 518454.
சோளிங்கபுரம் (திருக்கடிகை): தமிழ்நாடு, வேலு<õரின் வடகீழ் 40கி.மீ. மலையில் 500 அடி உயரத்தில் யோகநரசிம்மர் ஆலயம். அடிவராத்தில் உத்ஸவமூர்த்தி மட்டுமே <உள்ளார். சிறிது நேரம் தங்கினாலே முக்தியளிப்பது (மங்க-பேயா, திருமங்) (பாசு-4) 631102.
வேளுக்கை: காஞ்சிபுரத்தில் திருத்தண்கா சமீபம். ஸ்ரீ அழகியசிங்கர் கோயில். மேற்கு திசையில் அசுரர்களை தடுத்தபின், பெருமாள், யோக நரசிம்மராக, தானே விரும்பித் தங்கிவிட்ட இடம். (மங்க-பே) (பாசு – 4) 631501
திருவாழித் திருநகரி: சீர்காழியின் தென்கீழ் 6 கி,மீ ல் திருவாழி. அங்கிருந்து வடகீழ் 4 கி.மீ திருநகரி. தேவாரத்தில் வலஞ்சுழியும், கொட்டையூரும் போல திருவாலி லக்ஷ்மி நரசிம்மரும், திருநகரி தேவராஜனும் சேர்ந்தே போற்றப்பட்டுள்ளனர். நாங்கூர் 11 திருப்பதிகளுள் ஒன்று.
சிவத்தலம். சத்திமுத்தத்தில் சிவனும், அம்பிகையும் போல பிராட்டியும் பெருமாளும் ஆலிங்கனக் கோலம். திருமங்கையாழ்வாரைத் தடுத்து ஆட்கொண்டு அஷ்டாக்ஷரம் உபதேசித்த பதி. (மங்க -குல , திருமங்) (பாசு -42) 609106.
நாகை (நாகப்பட்டினம்) : நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சையின் கிழக்கே 90 கீ.மீ அபூர்வமான அஷ்டபுஜநரசிம்மர் திருமேனி உள்ளது. துருவனும் ஆதி சேடனும் பணிந்தது. (மங்க – திருமங்) (பாசு – 10) 611001.
தஞ்சைமாமணிக்கோயில் (வெண்ணாற்றங்கரை): தஞ்சைக்கு வடக்கே திருவையாறு வழியில் 6 கி.மீ. அருகருகே 3 பெரிய விஷ்ணு கோயில்கள். ஒன்றாகவே பாடப்பட்டவை. நீலமேகப் பெருமாள், மணிகுன்றப் பெருமாள் மற்றும் நரசிம்மன் கோயில்கள்.
தஞ்சகன், தண்டகன், கஜமுகன் ஆகியோரின் கெடுமையிலிருந்து மக்களைத் திருமால் காத்த பதி. திவ்யப்ரபந்தம் கூறி வணங்கிடலாகாத தினங்களில் தேசிகப்ரபந்தம் பாராயணம் செய்யுமாறு நயினாச்சாரியார் நியமித்த பதி. (மங்க-நம், பூத, திருமங்) (பாசு – 5) 613003.
திருக்கோஷ்டியூர் : (தென்) திருப்பத்தூரிலிருந்து சிவகங்கை வழி 7 கி.மீ. உரகமெல்லணையான் கோயில்.
மகாவிஷ்ணு நின்று, இருந்து, கிடந்த, நடந்து, கூத்தாடும் 5 நிலையில் தரிசனமளிக்கும் பதி. 1000 ஆண்டுகட்கு முன்பே, கீழோர் எனப்பட்டவரை, திருக்குலத்தோர் என்று கூறி, தான் நரகம் சென்றாலும், அனைவரும் உய்வதற்காக ,யாவரும் அறியுமாறு ராமானுஜர் நாராயண மந்திரத்தை உரக்கக் கூவிய தலம்.
மகாமகக்கிணறு சிறப்பு. வைணவ மறுமலர்ச்சியில் முக்கிய ஸ்தலம். சிவனும் சேர்ந்து அருளும் பதி. மயனும், விஸ்வகர்மாவும் இணைந்து எழுப்பியது. தென்புற நரசிம்மர் தெற்காழ்வார் இரண்யனைப் பிடித்த கோலம். வடபக்க நரசிம்மர் வடக்காழ்வார் இரண்யவதம் செய்த கோலம். இரண்டுமே மிகப்பெரிய திருவுருவங்கள். (மங்க – பெரி, திருமங், பூத, பேயா, திருமழிசை) (பாசு – 39) 623210.
ஆ) பிற நரசிம்மத் தலங்கள்
ஆந்திரம் மாநிலம்
1. எர்ரகுண்டா – கடப்பாவிலிருந்து 40 கி.மீ. லக்ஷ்மி நரசிம்மர், யோக நரசிம்மர் ஆலயங்கள். 523327.
2. யாதகிரி – ஐதராபாத்திலிருந்து 70 கி.மீ மலையில் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம். 375 படிகள்.
3. தர்மபுரி – கோதாவரி நதி மேற்குக் கரை (கரிம் நகரிலிருந்து 16 கி.மீ) இரு நரசிம்மர் ஆலயங்கள். 505425.
4. பாபட்லா – தெனாலியிருந்து 43 கி.மீ. ஜ்வாலா நரசிம்மர் கோயில். 422101
5. அகிரபள்ளி – விஜயவாடாவிலிருந்து செல்லலாம். வியாக்ர நரசிம்மர் ஆலயம்.
6. மங்களகிரி – பெசவாடாவிலிருந்து 13 கி.மீ. மலையில் 400 படிகள். நரசிம்மருக்கு வாயில் பானகம் விடுகிறார்கள். 522503.
7. சிம்மாசலம் – வால்டேரிலிருந்து 8 கி.மீ. மலைமேல் 1000 படிகள். வராஹ நரசிம்மர். உக்ர மூர்த்தி என்பதால் எப்போதும் சந்தனக்காப்பு. சித்திரை மாத வளர்பிறை அக்ஷய திருதியையில் மட்டும் புது சந்தனக்காப்பு – 530004.
8. பூமினிபட்டினம் : விஜய நகரத்திலிருந்து 20 கி.மீ. லக்ஷ்மி நரசிம்மர்.
9. கொருகொண்டா: ராஜமுந்திரியிலிருந்து 20 கி.மீ. மலையில் 600 படிகள். சாத்வீக நரசிம்மர். 533289.
10. லக்ஷ்மி புரம்: கரிம் நகர் மாவட்டம் மலையில் நவநரசிம்மர். இரண்டாவது அகோபிலம் என்பர். 521131.
11. திராக்ஷõராமம் : காகினநாடா சமீபம் புகழ் பெற்ற பீமேஸ்வரர் கோயிலில் ஷேத்ராபாலராயுள்ள நரசிம்மர். 533262.
12. திருப்பதி: <உலகப்புகழ் வேங்கடாசலபதி கோயிலில் உள் பிரகாரத்தில் தனி நரசிம்மர் சன்னதி. 517504.
13. கம்மம் : ஸ்தம்பம் (தூண்) என்பது கம்மம் ஆகிவிட்டது. ஸ்தம்ப நரசிம்மர் கோயில். 507001.
கர்நாடக மாநிலம்
1. நரசிப்பூர் திருமுக்கூடல் – மைசூரின் தென்கீழ் 30 கீ.மீ. காவிரி, கபில, ஸ்படிக நதிகளின் சங்கமத்தலம். குஞ்சால நரசிம்மர். ஒரு கையில் குண்டுமணியும், மறு கையில் தராசும் ஏந்திய அபூர்வத் திருமேனி. 502313.
2. அகர: மைசூர் மாவட்டம் ஏலந்தூர் தாலுக்கா. ஒரே திருமேனியில் யோக, லக்ஷ்மி, உக்கிர, ஜ்வால, பிரகலாத வரத முகங்களுடைய பஞ்சமுக நரசிம்மர். 571485.
3. பாண்டவபுரம் :ஸ்ரீ ரங்கப் பட்டிணத்திலிருந்து 32 கி.மீ. 400 படிகள். மலையில் யோக நரசிம்மர் ஆலயம். 571484.
4. சாளக்கிராம் : மைசூர் மாவட்டம் கிருஷ்ணராஜ நகரின் வடமேற்கு 15 கி.மீ. 571604.
5. ஹோலே நரசிப்பூர் : ஹாஸனிலிருந்து தென்கீழ் மைசூர் வழி 32 கி.மீ. பிரஸன்ன நரசிம்மர். 573211.
6. சிபி: தும்கூர் மாவட்டம், சிரா தாலுக்காவில் சாளக்கிராம வடிவில் நரசிம்மர்.
7. ஹம்பி : பெல்லாரி மாவட்டம் ஹாஸ்பேட் தாலுக்கா 22 அடி <உயர நரசிம்மர். 583289.
8. கனககிரி : ராய்சூர் மாவட்டம், கங்காவதி தாலுக்கா வடமே. 20 கி.மீ. லிங்க வடிவில் லக்ஷ்மி நரசிம்மர். 584119.
9. கர்பரா: பிஜப்பூர் மாவட்டம் தாலுக்காவில் அரசமரமே நரசிம்மராக வழிபாடு.
10. ஹலசி : பெல்காம் மாவட்டத்தில் தெற்கே காநாபுர தாலுக்கா. பூவராக அனந்தவீர விக்கரம நரசிம்மர். 591142.
11. முடுதகாண ஹுப்ளி : பெல்காம் சமீபம் சம்பகாவ் வட்டம். அஸ்வத்த நரசிம்மர். 591118.
மஹாராஷ்டிரா மாநிலம்
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராகேர் மற்றும் சார்தானா ஆகியவை நரசிம்மத் தலங்கள்.
ஒரிசா மாநிலம்
ஒரிசா மாநிலம் ந்ருசிங்கநாத் ஒரு நரசிம்மர் தலம்.
தமிழ்நாடு மாநிலம்
1. குறையலூர் : சீர்காழியிலிருந்து 8 கி.மீ. நரசிம்மர் கோயில். நாங்கூர்ப் பகுதி பஞ்ச நரசிம்மத்தலத்தில் ஒன்று.
பிற ஊர்கள்: மங்கைமடம் ; திருநகரி; திருவாலி. 609106.
2. நாமக்கல் : ஊரின் நடுவே உள்ள மலைமுகட்டில், மேற்புறம் நரசிம்மர் சன்னதி. 637001.
3. சிங்கப்பெருமாள் கோயில் : சென்னையிலிருந்து (தாம்பரம் வழி) 48 கி.மீ. உக்ர நரசிம்மர் கோயில். 603204.
4. திருவதிகை : பண்ருட்டி அருகே 1 கி.மீ. சரநாராயணர் கோயிலில் பள்ளி கொண்ட நரசிம்மர் சிறப்பு. 607106.
5. காஞ்சிபுரம் : சங்கராச்சாரியார் மடத்தில் நரசிங்க சாளக்கிராமம் பூஜிக்கப்படுகிறது. 631501.
6. ஸ்ரீரங்கம் : பார்புகழ் ரெங்கநாதர் கோயிலில் கம்பனின் இராமாயணத்தை அங்கீரிப்பதற்கு விமான சிற்பத்திலிருந்து வெளிவந்த நரசிம்மரை மேட்டழகிய சிங்கர் என்பர். 620006.
7. அவனியாள்புரம்: அண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகில் விஷ்ணு ஆலயத்தில் 5 நரசிம்மர்கள் வழிபாடு. 604504
பாண்டிச்சேரி மாநிலம்
பாண்டிச்சேரி மாநிலம் : சிங்கரி கோயில் என்ற ஊரில் 18 கை நரசிம்மர். 605007.
கேரள மாநிலம்
1. கடுங்கலுர் : ஆலவாயிலிருந்து 2 கி,மீ. நரசிம்மர் கோயில். 683103.
2. துறவூர் : ஆலப்புழையிலிருந்து 35 கி.மீ. இரண்டு நரசிம்மர் கோயில்கள். 688532.
3. குருவாயூர் : கிருஷ்ணன் கோயிலில் நாராயண பட்டத்ரி தன் குருவிடம் வாங்கிக் கொண்ட நோய் நீங்கிட நாராயணீயம் இயற்றும் போது விஷ்ணு நரசிம்மக்காட்சி அளித்த தலம். 680101.
மதுரை ஆனைமலை நரசிங்கம் யோக நரசிங்கப் பெருமாள் ஆலயம்
மதுரைக்கு வடகிழக்கே, மேலூர் வழியில், 4 கி.மீ. தொலைவிலுள்ள ஒத்தக்கடைக்கு அருகே, யானை படுத்திருப்பது போல், தென்மேற்கு – வடகிழக்குப் போக்கில் சுமார் 250 அடி உயரமும், 5 கி.மீ. நீளமும் உள்ள மலையே ஆனைமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆனைமலையின் வடபுறம் உள்ள நரசிங்கம் கிராமப்பகுதியில் பழமையான முருகன் குடவரைக் கோயிலுக்கு அருகில், யோக நரசிங்கப் பெருமாளுக்கும் ஒரு குடவரை ஆலயம் உள்ளது. ஆலய வாச<லுக்கே செல்லும் வகையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து அடிக்கடி மினிபஸ் வசதியுள்ளது. இரண்யகசிபுவை அடக்கிட நரசிம்மராக வந்தவர்க்குக் கோயில் உள்ள ஊரை நரசிங்கம் என்பது பொருத்தமாக இருப்பது போல, இதன் பண்டைப் பெயர்களான நரசிங்க மங்கலமும் இரணியமுட்டமும் பொருத்தமாகவே உள்ளன. கி.பி. 8,9ம் நூற்றாண்டுகளில் மிக வளப்பமாக இருந்த இப்பகுதியில், மதுரையை ஆண்ட சடையவர்மன் பராந்தக பாண்டியனின் அமைச்சர் மாறன் காரி யோக நரசிம்மருக்குக் கோயில் எழுப்பியதாகத் தெரிகிறது. சுமார் 6 அடி அகல, நீள, உயரக் கருவறையும், யோக நரசிம்மப் பெருமாள் திருவுருவும், கருவறைக்கு முன் உடையவரும் நம்மாழ்வாரும் உள்ள அர்த்த மண்டபமும் குடைவு அமைப்புகள். பிற மண்டபங்கள் கட்டுமானமே. கருடாழ்வார் மண்டபமும், ஆலய வளாகத்தின் வடகீழ் பகுதியில் உள்ள நரசிங்கவல்லித் தாயாரின் தனிக்கோயிலும் பிற்கால அமைப்புகளாகத் தெரிகின்றன. ஆலயத்தை ஒட்டி கிழக்கு, வடகிழக்காக, மலையின் அடிவாரத்திலேயே சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் சதுரவடிவ நன்னீர்ப் பொய்கை உள்ளது. காலவசத்தால், சம்பு, தர்ப்பை மற்றும் காட்டுச் செடிகள் வளர்ந்து, நீர்ப்பரப்பே தெரியாத அளவுக்கு மறைந்திருந்த பொய்கையின் நிலை தற்போது மாறிவிட்டது. பக்தர்கள் மனதில் பெருமாள் ஏற்படுத்திய உந்துதலால், பொய்கை பழைய பொலிவை மீளப் பெற்றுள்ளது. குடவரைக் கோயிலை திருச்சுற்றிட வாய்ப்பில்லாததால் பண்டைய மரபுப்படி, திருக்குளத்தைச் சுற்றி வந்த பின் ஆலய தரிசனம் செய்தல் சிறப்பு. கங்கை நீரும், காவிரி நீரும் போற்றப்படுவது போல, மிகச் சுவையாக உள்ள இந்தப் பொய்கையின் தீர்த்தமும் பல உடல், மன அல்லல்களைப் போக்கும் தனித்தன்மையும், சிறப்பும் பெற்றிருப்பதை, முந்தைப் புராணங்களும், இன்றையோரின் விவரிப்புக்களும் தெரிவிக்கின்றன.
இத்திருக்குளத் தீர்த்தத்தைப் பெருமாள் வழிபாட்டிற்கு எடுத்து வருவதற்காக, ஆலயத்தின் கிழக்குத் திருமதிலில் உள்ள வாயில், எப்பொழுது, எதற்காக அடைபட்டது என்பதை அறிய இயலவில்லை. வசிக்கும் இல்லமாயினும், வழிபட்டுப் பயனடையும் இறைக் கோயிலாயினும் கிழக்கு அல்லது வடகிழக்கில் இருந்த வாயில்கள் அடைப்படுவது உகந்தது அல்ல. பல்லோரும் நாடி வருகின்ற நிலை குறைவதோடு, அருகி<லுள்ளோர் வருவதும் கூடக் குறைந்து விடுவதும், அனுபவ உண்மை; வாஸ்து சாஸ்திர செய்தியுமாகும். ஆலயநிர்மாண வல்லுனர்களும், ஆலய நிர்வாகிகளும் ஆருடம் சொல்லும் அருளாளர்களும் கூடி அடைக்கப்பட்ட வாயிலை திறந்துவிட்டால், யோக நரசிம்மரின் அருளைப் பெறுவோரின் எண்ணிக்கை கூடிடும். மாசிப் பவுர்ணமியில், பெருமாள் ஆலயத் திருக்குளங்களில் நடைபெறும் கஜேந்திர மோக்ஷ திருவிளையாடல் இத்திருக்குளத்தில் இன்றும் நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் கொடி மரம் இல்லாததால், நின்ற கோலத்திலுள்ள நரசிம்ம உற்சவர் திருமேனி கோயிலுக்கு வெளியே வருவதில்லை. இங்கிருந்து 4 கி.மீ.ல் உள்ள, ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திருமோகூர் காளமேகப் பெருமான் உற்சவ மூர்த்தியே இத்திருவிழாவிற்காக நரசிங்கத்திற்கு எழுந்தருளுகிறார். ஆலயங்களில் நிறுவப்படும் கொடிமரத்தின் உயரம் கருவறைக்கு மேல் எழுப்புகின்ற விமானத்தின் நீள, அகல, உயர பரிமாணத்தின் படி அமைப்பதே பொது மரபு. யோக நரசிம்மரின் குடவரைக் கருவறைக்கு மேல் ஆனைமலை வானளாவி இருப்பதும், இங்கு கொடிமரம் வைக்கப்படாமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். பத்துப்பாடல் ஆசிரியர் பெருங்கௌசிகனார் பிறந்த ஊர் யோக நரசிம்மர் அருளும் இந்த நரசிங்கம் கிராமமே.
ஆனைமலை கிரிவல வழிபாடு
திருவண்ணாமலை போல, தமிழகத்தில், நெடுங் காலமாக, கிரிவலம் செய்யப்படும் தலங்களுள் மதுரை மாவட்ட ஆனைமலையும் ஒன்று. இதை ஒட்டி உள்ள கொடிக்குளம், வெளவால் தோட்டம், ஒத்தக்கடை, நரசிங்கம், அரும்பனூர் புதூர் ஆகிய ஊர்களிலிருந்து பக்தர்கள் பவுர்ணமி தோறும் ஆனைமலையை கிரிவலம் வருகின்றனர். எல்லோரும் ஒரே இடத்திலிருந்து திருச்சுற்றை தொடங்கி முடிப்பதில்லை. தத்தம் ஊரிலிருந்தே புறப்பட்டு திரும்புகின்றனர். சுமார் 12 கி.மீ. திருச்சுற்றை, அதிகாலை 3 மணிக்குத் துவங்கி ஆரோக்கியமும், அமைதியும் அருளும் பெற்று விடியும் போது வீடு திரும்பி, அன்றாடப் பணியில் ஈடுபடுகின்றனர். விநாயகர், முருகன், சிவபெருமான், அம்மன், பெருமாள், கிராம தேவதைகள் உட்பட பரம்பொருளின் பல்வித அவதார ரூபங்களையும் தரிசித்த பயனை ஒருசேர அளிக்கின்ற ஆனைமலை கிரிவல வழிபாட்டை யாவரும் செய்திட இறையருள் கூடட்டும்.