Home அஷ்டமி வழிபாடு தேய்பிறை_அஷ்டமி_வழிபாடு

தேய்பிறை_அஷ்டமி_வழிபாடு

by Sarva Mangalam

சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும். அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பெறுகிறது.

ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஐந்து வகை எண்ணெய் கொண்டு ஏற்றப்பட வேண்டும், ஐந்து தனி தனி அகல் எடுத்துக் கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய். இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய். மற்றொன்றில் விளக்கு எண்ணெய். அடுத்ததில் பசு நெய். அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும்,

ஒரு அகலில் ஏற்றிய நெருப்பில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றக்கூடாது, (ஒவ்வொரு எண்ணெய் கொண்டு எரியும் தீபத்தின் சக்தி வெவ்வேறாகும், ஒன்று இன்னுமொன்றோடு சேரக்கூடாது சக்தி மோதல் உண்டாகும்) இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீரா பிரச்சினையும் தீரும், காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும்,

பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்று பொருள்.

படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தெழில் களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.

எந்தவித பூஜைகள் செய்யா விட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார். முதலில் துவங்கும் காலை பூஜையும், இரவில் நடக்கும் இறுதியான பூஜையும் ஸ்ரீ பைரவருக்கே உரியது.

பற்றற்ற நிலையில் நிர்வாண கோலத்தில் பைரவர் வீற்றிருப்பதால் பைரவர் விக்ரகத்தை தொட்டு வணங்குதல் நாமே சென்று புஷ்பம் சாற்றுதல் ஆகியவை கூடாது.

சித்திரை, ஐப்பசி மாதங்களில் வரும் பரணி நட்சத்திர நாட்கள் ஸ்ரீ பைரவருக்கு மிக உகந்த நாட்கள் ஆகும். ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீ பைரவரை வழிபட உகந்த நாட்கள் தான்.

ஆயினும், தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதி ஸ்ரீ பைரவரை வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக நடைமுறையில் உள்ளது.

‘‘அட்ட பைரவருமோருருவாகி கிருட்ண பட்ச யட்டமியந்தியில்
அருள் பரிபாலிக்க தொழுதிருப் பாருக்காததேது’’
-(என்கிறது அகஸ்தியர் நாடி)

சீர்காழியில் உள்ள சட்டை நாதர் என்னும் பைரவரை வழிபடுவதன் சிறப்பை இப்படி விளக்குகிறது அகஸ்திய நாடி.

திருஞான சம்பந்தராகப் போற்றப்படும் ஆளுடைப் பிள்ளை என்ற ஞானக் குழந்தை ஞானம் பெற்ற கோயில் இது. பிரம்ம தீர்த்தக் கரையில் அம்பாள் பொற்கிண்ணத்தில் ஞான சம்பந்தருக்கு பால் ஊட்டிய தலம். நாம் ஒவ்வொரு வரும் தொழ வேண்டிய அற்புதக் கோயில். ஆதி சங்கரர் தமது “சௌந்தர்யலஹரி” என்ற நூலில், ‘‘ஞானப்பால் பார்வதி தேவியிடம் இந்த திராவிட சிசு உண்டது சத்தியம்’’ என கொண்டாடுகிறார்.

திருநாவுக்கரசரை “அப்பர்” என ஞானசம்பந்த பிரான் அழைத்துப் போற்றிய புண்ணிய கோயில் இந்த சட்டநாதர் கோயில். சீர்காழி என்ற ஊருக்கே புகழைச் சேர்த்த இந்த சட்டநாதர், பைரவ சுவாமியின் மறு பதிப்பு வேற்றுருதான். அஷ்டமி திதி தேய்பிறையில் இங்கு எட்டு வித பைரவ மூர்த்திகளும் கூடி நின்று பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனராம். எனவே, “தேய்பிறை அஷ்டமி திதி மாலை வேளையில் சட்ட நாதனை தொழுபவர் பெரும் பாக்யவான்களே” என்கிறார் அகஸ்தியர்.

12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீ பைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.

தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார். சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீ பைரவரே ஆவார். சனியின் வாத நோயை நீக்கிய வரும் பைரவரே.

தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான். தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி, மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி (ஜோதிட ரீதியாக சனிப் பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார். அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப் பிரமாணம் பெற்றுக்கொண்டார்.

சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார்.

அதனால் தான் ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு பண்ணுவதன் மூலம் அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும்.

தேய்பிறை அஷ்டமி, குறிப்பாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவ வணக்கத்திற்கு மிகவும் சிறந்தது.

சாதாரணமாக நாய் வாகனம் பைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.சில இடங்களில் இடப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.

மிக அரிதாக சில இடங்களில் மட்டுமே இருபக்கமும் நாய் வாகனங்களுடன் பைரவர் காட்சி தருகிறார். இவ்வாறு இடப்பக்கம் மற்றும் இரு வாகனங்களுடன் உள்ள பைரவ பெருமான் மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம். ஏவல், பில்லி, சூனியம், பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய, வாழ்வில் வளம் பெற, திருமணத்தடைகள் நீங்கிட, பிதுர்தோஷம், சனி தோஷம், நீங்கி பைரவர் வழிபாடு மிகவும் உதவும்.

தேய்பிறை அஷ்டமி நாளில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்குகின்றனர். அந்த நாளில் நாம் பைரவரை வணங்குவதால் பைரவரின் அருளோடு அஷ்ட லஷ்மிகளின் அருளும் கிடைக்கப் பெறுவோம். ராகு காலத்தில் பைரவர் சன்னதியில் அமர்ந்து சொர்ணாகர்ஷண பைரவரின் மூல மந்திரத்தை ஜெபித்து வந்தால் கடன் தொல்லை நீங்கும்.

‪#‎பைரவ_காயத்ரி‬
“ஷ்வானத் விஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரச்சோதயாத்!”

இத்தகைய சிறப்பு வாய்ந்த அஷ்டமி வழிபாட்டினை பின் பற்றி எல்லா நலமும் அடைவோமாக!. “ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!”

You may also like

Translate »