பொதுவாக கடவுள் வழிபாட்டில் உருவ வழிபாடு மிக முக்கியமானது. உருவ வழிபாடே மக்களின் மனதை கடவுளிடம் ஒன்றுமாறு செய்யக்கூடியதாகும். இத்தகைய உருவ வழிபாட்டில் பிம்பங்களை அதாவது படங்களை வைத்து வழிபாடு செய்வதும் அடங்கும். அவ்வாறு படங்களை வைத்து வழிபாடு செய்வதில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இல்லையேல் நமது வாழ்வில் குழப்பங்கள் உண்டாகும். எனவே குழப்பங்களை தவிர்த்து இறை வழிபாடு தழைக்கவே இப்பதிவு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
வீட்டில் வைத்து வணங்க வேண்டிய கடவுள்கள் / தெய்வங்கள் / தேவதைகள்:-
அவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இது மிகவும் நன்மை பயக்கும். குல தெய்வம் நம்மை கண்ணின் இமை போல் காத்து நிற்கும். குல தெய்வத்தினை விட உயர்ந்த தெய்வம் உலகில் இல்லை. குல தெய்வத்தின் அருள் இல்லாமல் நாம் வாழவே இயலாது.
அவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இதுவும் நன்மை பயக்கும். நமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நம்மை காப்பாற்றும் தெய்வம் இஷ்ட தெய்வமே. குல தெய்வத்திற்கு அடுத்தபடியாக நமக்கு அருள் பாலிக்கும் தெய்வம் இஷ்ட தெய்வமே.
எந்த ஒரு விநாயகர் படத்தினையும் வைத்து வணங்கி வரலாம். முழு முதற் கடவுள் இவரே. இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம். காரியசித்தி உண்டாக்குபவர் இவரே. விக்கினங்களையும், வினைகளை களைபவரும் இவரே. நல்வழி காட்டுபவரும் இவரே.
குழந்தை கடவுளரின் படம் எதுவாக இருந்தாலும் வைத்து வணங்கி வரலாம். இது குழந்தை வரம் தரும். குழந்தை இல்லாதவர்கள் வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். நல்ல குழந்தைகள் பிறக்கும். பிறந்த குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும், அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. இவரின் அருள் இல்லாமல் அரசியலும் இல்லை, அரசாங்கமும் இல்லை.
மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தடையை போக்கும் வடிவம் ஆகும். திருமணம் ஆனவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை பொங்க செய்யும் வடிவம் இதுவே ஆகும். இல்லறம் நல்லறமாக நடக்கும்.
அர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம். நாம் அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. பிரிந்த தம்பதியர் வணங்கி வந்தால் விரைவில் ஒன்று சேருவர். தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை, அன்பு, காதல், பாசம் உண்டாகும். தம்பதியரின் கருத்து வேற்றுமை நீங்கும்.
சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம். சிவசக்தி கலப்பே உலகம். சிவசக்தி கலப்பில்லாமல் உலகில்லை. சக்தியுடன் இருக்கும் சிவபெருமானுக்கே மிகவும் வலிமை அதிகம். எப்போதும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கும் வடிவம் சிவசக்தி வடிவம் ஆகும்.
ராதையுடன் இருக்கும் குழலூதும் கிருஷ்ணரின் படம் வைத்து வணங்கி வரலாம். இது திருமணத்தடையை நீக்கும் வடிவம் ஆகும். இந்த வடிவம் தம்பதியர் இடையே அன்பு, பாசம், காதல், நேசம் இவற்றை உருவாக்கும் வடிவம் ஆகும். தம்பதியரின் கருத்து வேற்றுமையை நீக்கும் வடிவம் ஆகும்.
குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படம் வைத்து வணங்கி வரலாம். இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது. இதனை வைத்து வணங்கி வர குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் உண்டாகும். குடும்பம் ஒற்றுமையுடன் செழித்து வளரும்.
தனது மனைவியான சொர்ணதாதேவியை அணைத்தவாறு தன் மடியில் அமர்த்தி அருள்பாலிக்கும் சொர்ணபைரவரின் படமும் வீடுகளில் வைத்து வணங்கத் தக்கதே. பைரவ வடிவங்களிலேயே சிறந்த இவ்வடிவத்தினை வணங்கி வர அறம், பொருள் மற்றும் இன்பம் அனைத்தும் பெருகும்.
ராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படமும் சிறப்பானதே. பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர். அனுமனின் படம் வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.
லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் திருமகளின் அருள் கிட்டும். நிம்மதியான வாழ்க்கையும் 16 வகை பேறுகளும் கிட்டும்.
சிவகாமசுந்தரியுடன் நடனமாடும் நடராசரை தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இது சிவசக்தி அருளைத் தரும். 16 பேறுகளும் கிட்டும். நடனம், இசை முதலான நுண்கலைகளில் புலமை உண்டாகும். கர்மவினைகள் தொலையும். மாயை விலகும். முக்தி கிட்டும்.
ஞானத்தினை போதிக்கும் தட்சணாமூர்த்தியின் படம் வீட்டில் வைத்து வணங்கி வழிபாடு செய்வது நன்று. இதனால் அறிவும், ஞாபக சக்தியும் உண்டாகும். கல்வி ஞானம் கிட்டும். ஞாபக மறதி உடைய குழந்தைகள் வணங்க வேண்டிய வடிவம் இதுவே. கல்வி, செல்வம், வீரம் மூன்றும் கிட்டும்.
கலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதே. இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும், எழுத்துத்திறமையும் உண்டாகும். நமது வளமான வாழ்விற்கு வாணி வழிகாட்டுவாள். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும்.
லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். குபேரனுக்கு அருள் பாலிக்கும் லட்சுமி படமும், லட்சுமி மற்றும் குபேரன் இவர்கட்கு அருள் பாலிக்கும் சிவபெருமானின் படமும் மிகவும் சிறந்தவை. இத்தகைய படங்களை வைத்து வணங்கி வர 16 பேறுகளும் கிட்டும். 8 ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
அலர்மேல்மங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படம் வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொழிலில் நல்ல வருமானமும், சுகமான வாழ்க்கையும் அமையும். மேற்கண்ட படத்துடன் லட்சுமியின் படமும் இருப்பது மிகவும் சிறப்பானது.
துர்க்கையின் படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. இதனால் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும். கணவன் மற்றும் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும். செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். வியாபாரம் பெருகும்.
அன்னம் பாலிக்கும் அன்னபூரணியின் படம் நாம் அவசியம் வீட்டில் வைத்து வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பானது. இதன் மூலம் வறுமை அகலும். பசி, பட்டினி, பஞ்சம் தீரும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும்.
சித்தர்கள், மகான்கள், முனிவர்கள், யோகிகள், ரிஷிகள் இவர்களின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் குருவருள் வந்து சேரும். தோஷங்கள் விலகும். கர்மவினைகள் நீங்கி புண்ணியம் சேரும். வளமான, நிம்மதியான வாழ்க்கை கிட்டும்.
எமக்கு தெரிந்தவரை மேலே பட்டியலிட்டிருக்கிறேன். இதனை படிக்கும் ஆன்மீக அன்பர்களுக்கு வேறு தகவல்கள் தெரிந்திருப்பின் தவறாது கருத்துரையிலோ அல்லது மின்னஞ்சலிலோ தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் தெரிவிக்கும் தகவல்கள் இப்பதிவினை மேலும் மேம்படுத்த உதவும். நன்றி…!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்
வீட்டில் எந்தெந்த தெய்வங்களை வைத்து வணங்கலாம்?
214
previous post