Home ஆன்மீக செய்திகள் பிள்ளையார்சுழிபோடுவதுஏன்

பிள்ளையார்சுழிபோடுவதுஏன்

by Sarva Mangalam


ஒரு செயலை ஆரம்பிக்கும் போதும் பிள்ளையார் சுழி போடுவது ஏன்?

நாம் எந்த ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும்போதும், விக்கினங்களைத் தீர்த்து அருள்பவராகிய விநாயகக் கடவுளை வணங்கி விட்டே ஆரம்பிக்கிறோம். அதே போல், நாம் ஒரு கடிதத்தையோ, கட்டுரையையோ எழுதத் தொடங்கும் போது, முதலில் பிள்ளையார் சுழியைப் போட்டு எழுதத் தொடங்குகிறோம். பிள்ளையார் சுழி என்பது அகரம் ( அ ), உகரம் ( உ ), மகரம் ( ம ) ஆகிய மூன்றையும் அடக்கியுள்ள ‘ ஓம் ‘ என்னும் பிரணவ மந்திரத்தின் ஆரம்ப வடிவம். அதில் உள்ள வட்ட வடிவம் சிவசக்தி பீடம்; கோடு சிவலிங்கத்தைக் குறிக்கிறது.

எளிமையானவர் பிள்ளையார். ஏழை எளியவர்களுக் கெல்லாம் சுவாமி இந்த பிள்ளையார்தான். மற்ற தேவ விக்கிரகங்களை பிராணப் பிரதிஷ்டை செய்வதுபோல பிள்ளையாருக்குச் செய்யவேண்டியதில்லை. மஞ்சளிலோ சாணத்திலோ பிடித்துவைத்து வேண்டினாலே போதும்; உடனே வந்து அருளைத் தந்துவிடுவார். பிள்ளையார் பூஜை ஆடம்பரமில்லாதது. நம்மால் முடிந்தவற்றை வைத்து எளிமையாக நைவேத்தியம் செய்துவிடலாம்.

விநாயகரின் திருவுருவம் விலங்கு, பூதம், மனிதன், தேவர் என்கிற நான்கின் இணைப்பாக காட்சிதருகிறது. இவருடைய யானைத் தலை, செவி, தும்பிக்கை- விலங்கு வடிவமாகும். பேழை வயிறு, குறுகிய கால்கள்- பூதவடிவமாகும். புருவம், கண்கள்- மனித வடிவமாகும். இரண்டிற்கும் மேற்பட்ட கைகள்- தேவ வடிவமாகும்.

இந்தியா முழுவதும் உள்ள மக்கள் மொழி, இன வேறுபாடின்றி கொண்டாடும் பண்டிகை பிள்ளையார் சதுர்த்தி. மனிதர்கள் மட்டுமின்றி தேவர்களும் இவரை வழிபட்டே எச்செயலையும் தொடங்குவார்கள். நான்கு வேதங்களும், 18 புராணங்களும், இரண்டு இதிகாசங்களும் முழுமுதற் கடவுளான விநாயகரைப் போற்றுகின்றன.

 

You may also like

Translate »