ஞான கிரகமான வியாழ பகவான் எனும் குரு பகவான் கடந்த 2-ம் தேதி (சனிக்கிழமை) சுக்ல பட்சத்து ஏகாதசி திதி, உத்திராடம் நட்சத்திரம், காலை 9.25 மணிக்கு துலாம் லக்னத்தில், கன்னி ராசியிலிருந்து சர வீடான துலாம் ராசிக்குப் பெயர்ச்சியானார். 2.10.18 வரை அங்கு அமர்ந்து, தனது அதிகாரத்தை வெளிப்படுத்துவார். 12 ராசிகளில் எந்தெந்த ராசிக்காரர்கள் இந்தக் குருப்பெயர்ச்சியால் பலனடைகிறார்கள், குருப்பெயர்ச்சியால் பாதிப்படையும் ராசிக்காரர்கள் யார், யார்? செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன? என்று ஜோதிடத் திலகம் ஞானரதத்திடம் கேட்டோம்.
ஜோதிட சாஸ்திரத்தில் குரு வலிமை வாய்ந்த கிரகமாகப் பார்க்கப் படுகிறார். குரு பகவான், ‘பிரகஸ்பதி’, ‘மந்திரி’ மற்றும் ‘தென் திசைக்கடவுள்’ என பலவிதமான பெயர்களில் அழைக்கப்படுகிறார். புத்திரக்காரகனாகவும், அறிவுக்காரகனாகவும் இருக்கிறார். குரு, தான்ஜோதிடர் ஞான ரதம் இருக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்கள்தான் விசேஷப் பலன்களைப் பெறுகின்றன. மேஷம், மிதுனம், கன்னி, தனுசு, கும்பம் ஆகிய ராசிகளுக்கு இந்தக் குருப் பெயர்ச்சி நல்ல பலன்களை அளிக்கின்றது.
மேஷ ராசிக்காரர்களுக்கு 7-ம் இடத்தில் இருப்பதால், எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் அரங்கேறும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு 5-ம் இடத்தில் இருப்பதால், பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். கௌரவமான பதவிகள் தேடிவரும். விலகிப்போனவர்கள் எல்லாம் தேடி வந்து பழகுவார்கள். சமூக அந்தஸ்து உயரும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு இரண்டாம் இடத்தில் இருப்பதால், பகைகள் விலகும். இணக்கமான சூழ்நிலை ஒன்று உருவாகும். புதிய நட்புகள் கிடைக்கும். தொழிலில் இருந்த தடைகள் அகலும். கடன்களை எல்லாம் அடைப்பீர்கள்.
தனுசு ராசிக்காரர்களுக்கு 11-ம் இடத்துக்கு வருவதால், உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்.கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். தொழிலில் அபரிமிதமான லாபம் வரும். உங்களது தனித்துவமான திறமை உலகுக்குத் தெரியும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு 9 -ம் இடத்துக்கு குரு பகவான் வருவதால், அவர்கள் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும். புகழ், கீர்த்தி எங்கும் பரவும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்படும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்:
துலாம் ராசிக்காரர்களுக்கு அவர்கள் ராசிக்கே குரு வருவதால், எதையும் கொஞ்சம் அலைச்சல் திரிச்சலுடன் செய்யவேண்டி இருக்கும். உடல் நலம் மற்றும் ஆரோக்கிய விஷயங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 12-ம் இடத்துக்கு குரு வருவதால், தேவையற்ற வீண் விரயச் செலவுகள் வரும். கடன்கள் அதிகரிக்கும். வீண் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. மனதைரியத்துடன் எதையும் எதிர்கொள்ள வேண்டும்.
மகர ராசிக்காரர்களுக்கு 10- ம் இடத்தில் இருப்பதால், எந்தத் தொழில் தொடங்குவதாக இருந்தாலும், ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்தப் பின்பே செய்யவும். வேலை மாற்றம் இட மாற்றம் செய்ய இருப்பவர்கள் முடிவுகளை ஒத்திப்போடுவது நல்லது.
மீன ராசிக்காரர்களுக்கு 8-ம் இடத்தில் இருப்பதால், எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் குரு என்பார்கள். இதனால் எதிலும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
ரிஷப ராசிக்காரர்களுக்கு 6- ம் இடத்தில் இருப்பதால், ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது.
கடக ராசிக்காரர்களுக்கு 4-ம் இடத்தில் அர்த்தாஷ்ட குருவாக இருப்பதால், தாயாரின் உடல்நலனில் கவனம் தேவைப்படுகிறது. வேலைச் சுமை அதிகரிக்கும் காரணமாக உடலில் அசதியும் சோர்வும் உண்டாகும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு 3 -ம் இடத்தில் இருப்பதால், திருமணம் ஒரு சிலருக்கு தள்ளிப் போகலாம். சகோதர வகையில் வீண் மனஸ்தாபங்கள் வந்து போகும். அதனால், தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். பூர்வீகச் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னையை ஆறப் போட்டு பிறகு தீர்த்துக்கொள்வது நல்லது.
பரிகாரங்கள்:
குரு ஸ்தலங்களான திருச்செந்தூர், ஆலங்குடி, தென்குடித்திட்டை, தக்கோலம் ஆகிய இடங்களுக்குச் சென்று ஜாதகரின் நட்சத்திரப் பெயருக்கு அர்ச்சனை செய்வது நல்லது. அவ்வளவு தூரம் செல்ல முடியாதவர்கள் அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கலாம்.
குரு காயத்ரி மந்திரம், குரு மந்திரம், மற்றும் குரு பகவான் துதி ஆகியவற்றை காலையில் குளித்து முடித்ததும் சொல்லி வந்தால், நல்ல பலன்கள் கிடைக்கும்
குரு காயத்ரி மந்திரம்:
ஓம் வ்ருஷ பத்வஜாய வித்மஹே
க்ருணி அஸ்தாய தீமஹி
தன்னோ குரு ப்ரசோதயாத்
குரு மந்திரம்:
குருர் பிரம்மா குருர் விஷ்ணு
குருர் தேவோ மகேஸ்வரா:
குரு சாட்சாத் பரபிரம்மா
தஸ்மை ஸ்ரீ குருவே நம:
குரு பகவான் துதி:
குணமிகு வியாழ குரு பகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்!
பிரகஸ்பதி வியாழ பரகுரு நேசா!
கிரக தோஷமின்றி கடாட்சித் தருள்வாய்!
மேற்கண்ட பரிகாரங்களைச் செய்து வந்தால், குரு பகவான் மனம் குளிர்ந்து வேண்டும் வரங்களை அளிப்பார்.