Home ஆன்மீக செய்திகள் ஏழையை பணக்காரன் ஆக்கிய மந்திரம்

ஏழையை பணக்காரன் ஆக்கிய மந்திரம்

by Sarva Mangalam

 

மன்னர் அக்பரும் பீர்பாலும் நகர்வலம் சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது ஒருவர் அக்பரிடம், “அய்யா எனக்கு உதவ முடியுமா.?” என்றார். இதை கேட்ட அக்பர், அவருடைய குடும்ப கஷ்டத்தை கேட்டு, “தினமும் நான் உனக்கு பணம் தருகிறேன். நீ யாரிடமும் கை ஏந்தாதே” என்றார். ஆனால் பீர்பாலுக்கு இது பிடிக்கவில்லை. “அந்த ஏழைக்கு ஒரு நல்ல வேலையை அரசர் தந்திருக்கலாம். அதை விட்டுவிட்டு தினமும் அரசரிடம் யாசகம் கேட்பது ஒரு மனிதனுக்கு அவமானம் அல்லவா” என்று மனம் வருந்தினார். ஒருநாள் பீர்பால் அந்த ஏழையின் வீட்டுக்கு சென்று, “தினமும் நீ பத்து முறை காயத்திரி மந்திரத்தை உச்சரித்தால், அரசர் உனக்கு தரும் பணத்தை விட நான் உனக்கு இரண்டு மடங்கு பணம் தருகிறேன். ஆனால் நீ தினமும் பத்து முறை காயத்திரி மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.” என்றார். பீர்பால் தருகிற பணத்துக்காக ஒருநாள் கூட தவறாமல் காயத்திரி மந்திரத்தை உச்சரித்து வந்தான் அந்த ஏழை. பிறகு அதையே வாடிக்கையாக உச்சரிக்க ஆரம்பித்தான். “தினமும் நம்மிடம் யாசகம் பெற ஒரு ஏழை வருவானே. சில தினமாக அவன் வருவது இல்லையே. என்ன காரணம்?” என்று அறிய விரும்பிய மன்னர் அக்பர், பீர்பாலை அழைத்து கொண்டு அந்த ஏழையின் வீட்டுக்கு சென்றார்.

ஏழைக்கு கிடைத்த வாழ்க்கை
தன் வீட்டு திண்ணையில் அரசரிடம் உதவி பெற்று வந்த அந்த ஏழை அமர்ந்திருந்தான். அந்த நபரை பார்த்தவுடன் மன்னர் அக்பருக்கே வணங்க வேண்டும் போல் இருந்து. அந்த அளவு அந்த ஏழையின் முகத்தில் ஒரு தெய்வீகக் கலை தெரிந்தது. அந்த ஏழையை சுற்றி மக்கள் கூட்டமாக இருந்தார்கள். மக்களுக்கு அந்த ஏழை அருள் சொல்லுவதும் அவர்களுடைய மனகஷ்டத்தை தீர்க்க நல்ல ஆலோசனைகளை சொல்வதுமாக ஒரு மகானை போல மாறி இருந்தான் அந்த ஏழை. இதை கண்ட அக்பர் ஒருவரை அழைத்து, “நீங்கள் ஏன் அவரிடம் ஆசி பெறுகிறீர்கள்? என்றார். “அவர் சாதாரணமானவர் அல்ல. தெய்வ பிறவி. அவர் சொல்வது எல்லாம் அப்படியே நடக்கும். அத்துடன் அவர் கைகளால் திருநீறு வாங்கினால், தீராத வியாதியும் தீரும்.” என்றார். இதை கேட்ட அக்பருக்கு ஆச்சரியம். சில மாதங்களுக்கு முன் நம்மிடம் கையேந்தி யாசகம் கேட்டவனுக்கு, எப்படி இவ்வளவு சக்தி வந்தது?” என்று ஆச்சரியத்துடன் அந்த நபரிடமே நேரடியாக சென்று கேட்டார் அக்பர். மன்னர் அக்பரையும், பீர்பாலையும் கண்டு மகிழ்ந்த அந்த நபர், தன் சக்தியின் ரகசியத்தை சொன்னார். “அரசே இந்த சக்தி எனக்கு வந்ததற்கு காரணம் அமைச்சர் பீர்பால்தான். அவர் தினமும் என்னை காயத்ரி மந்திரத்தை பத்து முறை உச்சரிக்க சொன்னார். அப்படி உச்சரித்தால் நீங்கள் எனக்கு கொடுத்த வந்த பண உதவியை விட, அமைச்சர் பீர்பால் இரண்டு மடங்கு தருகிறேன் என்றார். அதனால் அன்றுமுதல் கடமைக்காக காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்த நான், பிறகு பக்தியுடனும் நம்பிக்கையுடனும் மனதிருப்தியுடன் உச்சரிக்க ஆரம்பித்தேன். இதன் பயனால் என்னையறியாமல் என் உடலுக்கு புது தேஜசும், அற்புதமான சக்தியும் உண்டாவதை உணர்ந்தேன். அந்த ஆற்றலைதான் மக்களின் உடல்நல கோளாறு, மன கோளாறு தீர ஆசி வழங்குகிறேன். மக்களும் பயன் பெறுகிறார்கள். நானும் முன்னேற்றம் அடைகிறேன்.” என்றார் அந்த நபர். அதிகாலை வேலையில் காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால் முகம் அழகு பெறும். உடல் நலம் பெறும். குடும்பத்தில் லஷ்மிவாசம் செய்யும். எடுத்த எல்லா முயற்சியும் வெற்றி பெரும். ஒவ்வொரு தெய்வத்துக்கும் காயத்ரி மந்திரம் இருக்கிறது. அத்தனையும் சொல்ல நேரம் இல்லாதவர்கள், இங்கு நான் குறிப்பிட்டு இருக்கும் காயத்ரி மந்திரத்தை சொல்லலாம்.

பெண்கள் காயத்ரி மந்திரம் சொல்லலாமா?
பெண்கள் காயத்ரி மந்திரத்தை சொல்ல கூடாது என்பார்கள். அப்படியல்ல. காயத்ரி தேவியே பெண்தான். ஆகவே பெண்களும் காயத்ரி மந்திரத்தை சொல்லலாம். ஆனால் இந்த காயத்ரி மந்திரத்தை சொல்பவர்கள், குளிர்சியான மோர், குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட வேண்டும். காயத்ரி மந்திரம் உஷ்ண தன்மை கொண்டது என்கிறது சாஸ்திரம். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு தெரியப்படுத்தியவர் விஸ்வாமித்திரர். காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்களை கண்திருஷ்டி நெருங்காது. துஷ்ட சக்திகளை-துஷ்ட எண்ணம் கொண்டு பழகுபவர்களை பொசிக்கி விடும். காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்கள் நலமும் வளமும் பெற்று வாழ்வார்கள். காயத்ரி மந்திரம்

ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்

காலையில் எழுபவனை யாராலும் வெல்ல முடியாது என்கிறது சாஸ்திரம். விடியற்காலையில் சேவலும் கோழியும் விழிக்கிறது. அதை பிரியாணி செய்துவிடுகிறார்களே என்று விதண்டாவாதம் பேசுபவர்களும் உண்டு. புனிதமான கடலுக்குள்ளே இருக்கும் ஜீவராசிகளுக்கு, சிப்பிக்குள் இருக்கும் முத்தால் லாபம் இல்லை. அதுபோல்தான் கோழி, சேவல் போன்றவையும். காலையில் எழுந்தாலும் இறைவனுடைய நாமத்தை அது உச்சரிக்குமா?. அதனால் மனிதன் விடியற்காலையில் எழுந்து இறைவனுடைய நாமத்தை உச்சரிப்பதும் அந்த நாமத்தை நினைப்பதுமாக இருக்க வேண்டும். காலை பொழுதில் எழுந்து தெய்வத்தை நினைத்து வணங்கினால், அவர்களை யாராலும் வெல்ல முடியாது.

You may also like

Translate »