தினமும் சிவலிங்க வழிபாடு செய்யும்போது, ருத்திர காயத்ரி மந்திரத்தை சொல்வது மிகவும் நல்லது.
எம பயம் நீக்கும் ருத்திர காயத்ரி மந்திரம்
சைவ சமயத்தின் தலைவனாக விளங்குபவர் சிவபெருமான். இவரே ருத்திரன் என்றும் அழைக்கப்படுகிறார். இவருக்கு சங்கரன், நீலகண்டன், மகாதேவன், சாம்பசிவன் உள்ளிட்ட வேறு பல பெயர்களும் உள்ளன. மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானின் திருமூர்த்தம், மற்ற தெய்வங் களைப் போன்று மானிட உருவம் கொண்டதல்ல.
அவர் சிவலிங்க மூர்த்தியாய் காட்சி தருபவர். காலச்சக்கரத்தின் சுழற்சிக்குக் காரணமானவர். வேதங்களையும், வேத மந்திரங்களையும் உருவாக்கியவர் சிவபெருமானே. சிவலிங்க வழிபாடு செய்த கண்ணப்பனுக்கு முக்தி கிடைத்தது. மார்கண்டேயருக்கு என்றும் பதினாறு வயதாக இருக்கும் வரம் கிடைத்தது. சிவலிங்கத்தை ஆராதனை செய்பவர்கள், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பலன்களைப் பெறுவார்கள் என்பது இதுபோன்ற புராணத் தகவல்களால் புலனாகிறது.
தினமும் சிவலிங்க வழிபாடு செய்யும்போது, எத்தனை மந்திரங்களை உச்சரித்தாலும், அவற்றோடு ருத்திர காயத்ரி மந்திரத்தையும் சொல்வது நல்லது. பூஜையின் முடிவில் இறைவனுக்கு தீபம் காட்டும்போது, இந்த மந்திரத்தை உச்சரித்து வரலாம். தினமும் 108 முறை உச்சரிப்பது கூடுதல் பலனை அளிக்கும்.
ருத்திர காயத்ரி மந்திரம் :
‘ஓம் தத் புருஷாய வித்மஹே
மகா தேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்’
‘பரம புருஷனை நாம் அறிவோமாக. மகாதேவன் மீது தியானம் செய்வோம். ருத்திரனாகிய அவன் நமக்கு நன்மைகளை அளித்துக் காப்பான்’ என்பது இதன் பொருள்.
இந்த ருத்திர காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரித்து வருவதால், எம பயம் நீங்கும். பகை விலகும். சர்வ மங்களம் உண்டாகும். செல்வ வளம் பெருகும். ஆயுள் நீளும், ஆரோக்கியம் சீராகும். நினைத்தவை நடந்தேறும்.