சிலர் பூஜை அறையில் வைத்து வணங்குவார்கள். சிலர் மணிபர்சில் வைத்து இருப்பார்கள். சிலர் கழுத்தில் உள்ள டாலரில் மாட்டி தொங்க விட்டிருப்பார்கள். இன்னும் சிலர் கையில், இடுப்பில் என்று எங்கெல்லாமோ இறைவனை வைத்து வணங்குவார்கள்.
பட்டினத்தார் சொல்கிறார்….
எட்டுத் திசையும்
பதினாறு கோணமும்
எங்கும் ஒன்றாய்
முட்டித் ததும்பி முளைத்தோங்கு
சோதியை மூட ரெல்லாம்
கட்டிச் சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பர்,
கருத்தில் வையார்
பட்டப் பகலை இரவென்று கூறிடும் பாதகரே.
வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், தேவாரம், திருவாசகம், பிரபந்தம் என்று பெரிது பெரிதாய் புத்தகங்கள். இவற்றை எல்லாம் கக்கத்தில் வைத்து தூக்கிக் கொண்டு போகலாம். ஆனால் மனம் அதை உள்வாங்கி உண்மையை அறிந்து கொள்ள முடிவதில்லை. ஆகவே கடவுளை வணங்குபவர் மனதில், நெஞ்சில், கருத்தில் வைக்க வேண்டும் என்றவர், கக்கத்தில் வைக்கக் கூடாது என்கிறார். அப்படி வைப்பவர்கள் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் தெரியாத பாதகர்கள் என குறிப்பிடுகிறார்..
இதைத்தான் மாணிக்க வாசகரும்..
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்றார்…
“உய்யஎன் உள்ளத்துள்
ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா”
உள்ளத்துள் ஓங்காரமாய்
நின்றவன் இறைவன் என்கிறார்.